கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பொது நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது. – அந்த நிகழ்வில் ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் எழுந்து “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகள் நிறைய உருவாக்கப்பட்டன. அந்தக் கழிப்பறைகள் அனைத்தும் உபயோகத்தில் இருக்கின்றனவா என்பதுதான் கேள்வி. காரணம் கட்டிய கழிப்பறையை சுத்தம் செய்வது யார்? குறிப்பாக பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது யார்? கழிப்பறைகள் கட்டும்போது அவைகளை சுத்தம் செய்ய ஆட்கள் போட வேண்டும் என்ற சிந்தனை நமக்கு வரவில்லையே” என்று கூறினார். “அதற்கு என்ன வேண்டும் என்று கேட்கிறீர்கள்” என்றார் ஓர் அதிகாரி. உடனே கழிப்பறை சுத்தம் செய்ய ஆட்கள் போட்டுவிட்டால் பொதுக் கழிப்பறைகளை அனைவரும் உபயோகப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்” என்றார் ஊராட்சி மன்றத் தலைவர். அடுத்து அதிகாரி கேட்டார். அதற்கு “ஆட்களுக்கு எங்கே போவீர்கள்” என்று கேட்டார். “கழிப்பறை கழுவும் ஆட்கள் இருக்கிறார்கள். சம்பளம் தருகிறேன் என்றால் உடனே நியமனம் செய்துவிடலாம்” என்றார் ஊராட்சி மன்றத் தலைவர். “எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்” என்றார் அதிகாரி. “ரூ.4000 கொடுத்தால் போதுமானது” என்றார். ஊராட்சி மன்றத் தலைவர். “எப்படி ரூ.4000 சம்பளம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தீர்கள்?” என்றார் அதிகாரி. “தூய்மைக் காவலர்களுக்கு கொடுக்கும் அதே சம்பளத்தைக் கொடுத்தால் போதுமானது” என்றார்.
அந்த அரங்கத்தில் நானும் இருந்தேன். உங்கள் கிராமப் பஞ்சாயத்து உதவியாளருக்கு சம்பளம் எவ்வளவு என்றேன். ரூ.20,000க்கு மேல் என்றார். இதை யார் முடிவு செய்தது என்றேன். “அது அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்றார். எதற்காக அரசு ரூ.20,000த்தை தாண்டி சம்பளம் தருகிறது என்றேன். அது மூளை வேலை, கணக்கு எழுத வேண்டும், பேரேடுகள் பராமரிக்க வேண்டும், கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுக்கு கடிதம் எழுத வேண்டும், அதிகாரிகள் கேட்பதை செய்து தர வேண்டும். நிதி வசூல் செய்ய வேண்டும் ஆகையால் அந்தத் தொகை” என்றார். “கழிப்பறை கழுவ மட்டும் ஏன் ரூ.4000 தந்தால் போதுமானது என்று கூறுகிறீர்கள்” என்றேன். ‘சார் அது சாதாரண வேலை’ தூய்மைக் காவலர்கள் செய்வதுபோல் என்றார். ‘அதை ஏன் வேறு யாரும் செய்யக்கூடாது. அதற்கு ஏன் ஒரு சமூகத்திலிருந்து மட்டும் வரவேண்டும்?’ என்றேன். “கழிப்பறை கழுவும் வேலையையும் சாக்கடை போக்கும் வேலையையும், குப்பை அள்ளும் வேலையையும் வேறு யாரும் செய்ய முடியாது. அதற்காகவே சிலர் இருக்கின்றனர் அவர்கள்தான் செய்வார்கள் இன்றுவரை செய்து வருகின்றார்கள்” என்றார்.
“அதை ஏன் நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடாது” என்றேன். “பலரும் பயன்படுத்தும் கழிப்பறையையும் தெருவில் ஓடும் சாக்கடையையும், குப்பைகளையும் நாம் எப்படி செய்ய முடியும்?” என்றார். “உங்கள் வீட்டில் கழிப்பறையை யார் சுத்தம் செய்கின்றார்கள்?” என்றேன். “சார் அது எங்கள் கழிப்பறை நாங்களே கழுவுகின்றோம்” என்றார். அதுபோல் கழிப்பறையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதுதானே” என்றேன். கழிப்பறையை உபயோகப்படுத்தும் நீங்களே கழுவுங்கள் என்று எப்படி சார் பொதுமக்களிடம் கூற முடியும் என்றார். “அப்படிக் கூறினால் பொது மக்களிடம் நான் மரியாதை இழந்து விடுவேன்” என்றார். அப்ப, மற்றவர் உபயோகப்படுத்திய கழிப்பறையை சுத்தம் செய்ய வரும் ஒரு சமூகத்தினருக்கு மரியாதை இல்லையா, அவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா” என்றேன். “சார் அவர்கள் எப்பொழுதும் அதைத்தான் செய்து வருகின்றார்கள். அதை அவர்கள் செய்யத் தயாராகவும் இருக்கிறார்கள் அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. கிராமம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்குத் தானே கூறுகிறேன்” என்றார்.
உடன் இருந்த அதிகாரி என்னிடம் கூறினார், சார் புதிய பஞ்சாயத்து அரசாங்கத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று சமூக நீதிக்கு செயல்படுதல் என்று நீங்கள்தானே வலிந்து எழுதுகிறீர்கள். அந்தப் பார்வையை இவர்களிடம் உருவாக்க முடியவில்லையே எனக் கூறினார். உடனே அந்த ஊராட்சி மன்றத் தலைவர் எழுந்து எனக்கு இந்த விவாதம் புரியவில்லை’ என்றார். நான் அவரிடம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கழிப்பறையை எப்படி பயன்படுத்துவது. எப்படி சுத்தம் செய்வது எப்படி எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வது என்ற புரிதலை ஒரு கலாச்சாரமாக மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டால் நாம் ஒரு சமூகத்தை கழிப்பறை கழுவும் சமூகமாக ‘சாக்கடை அள்ளும் சமூகமாக தெருக்கூட்டும் சமூகமாக வைத்துக் கொள்ளத் தேவை இல்லையே. அவர்களுக்கும் சமூகத்தில் ஒரு மரியாதையை எப்படிக் கொண்டு வருவது என்று நாம் எப்போதாவது சிந்தித்து இருப்போமேயானல் நாம் முதலில் மக்களுக்கு கழிப்பறைக் கலாச்சாரத்தை உருவாக்கியிருப்போம். அதேபோல் தெருக் கூட்டுவதற்கும், சாக்கடையைப் போக்குவதற்கும் சிறிய இயந்திரங்களை உருவாக்கி பயன்படுத்தியிருப்போம்.
இதைவிடவும் கொடுமையான மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் தொழிலை ஒழிக்க வேண்டும் என பெஜவாடா வில்சன் போன்றவர்கள் 40 ஆண்டுகாலமாக போராட்டம் செய்து இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றி ஒழிக்க முயன்றனர். அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இன்றுவரை மாநில அரசுகளோடு போராடி வருகின்றனர் பல தன்னார்வலர்கள். கழிப்பிடம் கட்ட முனைகின்ற நாம், கழிப்பிடக் கலாச்சாரத்தை உருவாக்க முயலவில்லை என்பது நாம் கண்ட பெரும் சோகம். குப்பை கொட்டத் தெரிந்த நமக்கு குப்பையை மேலாண்மை செய்யத் தெரியவில்லை. சுத்தம், துப்புரவு, தூய்மை என்பது ஒரு மக்களுக்கான கல்வி. அதை எந்தக் கல்விச் சாலையிலும் கற்று கொடுக்கப்படுவதில்லை.
இந்த நிலை மாற்றம் பெற வேண்டும் எனப் பெருங்கனவை காந்தியார் கொண்டிருந்தார். அந்தக் கனவால்தான் என் நாட்டுக்கு முதலில் தேவைப்படுவது சுகாதாரம் எனப் பிரகடனப்படுத்தினார். நடைமுறைப்படுத்திக் காட்ட காந்தியார் அவருடைய ஆசிரமங்களில் எந்தப் பெரிய மனிதருக்கும் கழிப்பறை கழுவும் பணியைத் தந்து நம் சமூக இழிவுக்கு தீர்வு கோரும் சிந்தனைப் போக்கை உருவாக்கினார். உயர்குடியில் பிறந்தாலும், மெத்தப் படித்தவரானாலும் அவர் தந்த முதல் வேலை கழிப்பறை கழுவுவது. அது மட்டுமல்ல இந்தியா சுதந்திரமடைந்தவுடன் செய்ய வேண்டிய பணி என்னவென்று கேட்டபோது இந்திய நாட்டு மக்களுக்கு குறிப்பாக கிராமத்து மக்களுக்கு சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டும் என்றார். 75 ஆண்டுகள் கழிந்த பின்னரும் நம் மக்களிடம் சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை பற்றிய பார்வையை உருவாக்க முடியவில்லை. அதன் விளைவுதான் இன்னும் அவைகளை விவாதப் பொருளாகவே வைத்திருக்கின்றோம்.
சமீபத்தில் மாநகராட்சி உறுப்பினரின் கணவர் தூய்மைப் பணியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியதை காட்சிப் பதிவு மூலம் சமூக ஊடகங்களில் பகிர்ந்து மிகப் பெரிய விவாதப் பொருளாக்கினார்கள் சமூகப் பற்றாளர்கள். தர்மபுரியில் உள்ளாட்சிப் பணியாளர்கள் சில கோரிக்கைகள் வைத்துப் போராடினார்கள். அதில் தூய்மைப் பணியாளர்களை இழிவுபடுத்தி, தரக்குறைவாகப் பேசுவதை உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தவிர்க்க வேண்டும். அதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பணியாளர்கள் அமைப்புக் கேட்டுக் கொண்டது. இந்த நிகழ்வுகள் நமக்குத் தரும் செய்தி என்ன? நம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் இவைகள் பற்றிய பார்வை அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதைத்தான். தூய்மைப்பணி, என்பதை துப்புரவுக்கான செயல் என்பதுடன் நிறுத்திக் கொள்ளக் கூடாது. தூய்மைப்பணியை தூய்மைப் பணியாளர்களின் நலத்துடன் இணைத்துப் பார்த்துச் செயல்பட வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் நம் உள்ளாட்சித் தலைவர்கள் புரிந்து கரிசனத்துடன் உள்ளாட்சிகளில் பணி செய்யவில்லை என்றால் சுகாதாரமும் பேணமுடியாது. சுகாதாரப் பணியில் ஈடுபட்டிருப்போரின் சுயமரியாதையையும் மீட்டெடுக்க முடியாது. இதற்கான புரிதலையும் பார்வையையும் உள்ளாட்சித் தலைவர்களுக்கு ஏற்படுத்துவதுதான் மிகச் சவாலான பணி. அந்தப் புரிதலை இன்று வரை ஏற்படுத்த முடியவில்லை. இன்று நமக்கு ஆரோக்கியம் பேண துப்புரவும் வேண்டும். அதே நேரத்தில் துப்புரவுப் பணியாளர்களின் ஆரோக்கியமும், நலனும் சுய மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அடுத்து இந்த செயல்பாடுகளை செம்மையுடன் செய்ய வேண்டுமென்றால் நம் உள்ளாட்சித் தலைவர்கள் மக்களை தங்கள் பணிகளில் இணைத்துக் கொள்ளவேண்டும். அப்படி இணைத்துக் கொண்டு செய்யும்போது மக்களும் இதற்கான விழிப்புணர்வைப் பெறுவார்கள். அறிவைப் பெறுவார்கள். உணர்வைப் பெறுவார்கள். ஒரு காலத்தில் நம் மாபெரும் தலைவர்கள் உள்ளாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டபோது அவர்கள் தன்னலமற்று ஆற்றிய பணிகளை பல புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கின்றோம். அந்த தியாக வரலாற்றை இன்றுள்ள தலைவர்கள் படித்து புரிந்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். ராஜகோபாலாச்சாரியாராகட்டும், தந்தை பெரியாராகட்டும், பெருந்தலைவர் காமராஜரகட்டும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலராகட்டும்,
திரு. சர்க்கரைச் செட்டியாராகட்டும், திரு. கிருஷ்ணமூர்த்தியாகட்டும், இதுபோன்ற எண்ணற்ற தலைவர்கள் உள்ளாட்சியில் தலைவர்களாகச் செயல்பட்ட காலத்தில் பெருமளவு நிதி இல்லை. இருந்தபோதும் அவர்கள் அனைவரும் எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்த்து சிறப்பான சேவை செய்திருக்கின்றனர். அவர்கள் யாரையும் அவமதிக்கவில்லை. இன்று நிதி குறைவென்று கூறமுடியாது புரிதல் குறைவு, தியாக உணர்வு குறைவு.
இன்று சமூகத்தில் நடைபெறும் புறக்கணிப்பு, ஒடுக்கப்படுதல், தீண்டாமை அனைத்தையும் முற்றிலுமாக சரி செய்யத்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரத்தில் உள்ளாட்சி அரசாங்கத்தில் கொடுத்திருக்கின்றனர். இதைத்தான் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் வேண்டினார். அதற்காகத்தான் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். மூன்று அரசாங்கங்களில் அந்த கோரிக்கை நிறைவேறியிருப்பது உள்ளாட்சியில் மட்டும்தான். தாழ்த்தப்பட்டவர்கள் அதிகார மய்யங்களுக்குள் பெருமளவில் கொண்டு வரப்பட்டுள்ளனர். உள்ளாட்சியில் கொடுத்த அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த இழிநிலையைப் போக்க அவர்கள் பாடுபட வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து பிரதிநிதிகளாக வந்தவர்கள் கட்சி பேதத்தைத் தாண்டி சமூக நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். அது போராடாமல் நடைபெறும் நிகழ்வல்ல. இந்தச் செயல்பாடுகளை உள்ளாட்சியில் நடைமுறைப்படுத்துவதுதான் பெரும் சவாலான பணி. அதற்கான பார்வை மற்றும் உத்திகள் நம் உள்ளாட்சித் தலைவர்களுக்கு வேண்டும். அவர்களுக்கு உருவாக்கித் தந்து செயல்பட வைக்க வேண்டும். அப்படிப்பட்ட பார்வையை உள்ளாட்சித் தலைவர்களுக்கு உருவாக்கி விட்டால், கழிப்பறைகளைக் கழுவுவதற்கு ஒரு சமூகம் தேவை என்று எண்ணம் கொள்ள மாட்டார்கள். பிணத்தை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் ஒரு சமூகம் தேவை என்று கருத மாட்டார்கள், சாக்கடையில் மூழ்கி அடைப்பை எடுக்க ஒரு சமூகம் வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். அதற்கான மாற்றுமுறை காண முயல்வார்கள் தொழில்நுட்ப உதவியுடன். எனவே இந்த அவலங்கள் போக வேண்டும் என்றால் நம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் புரிதலுடன் சமூக நீதிக்குப் போராடும் திறனைப் பெற்று அனைவரும் சுயமரியாதையுடன் மதிக்கத்தக்க மானுட வாழ்வை வாழ வழி செய்துவிடுவார்கள். அதை நோக்கி நம் உள்ளாட்சித் தலைவர்கள் செயல்பட வேண்டும்.
(நன்றி: ‘காக்கைச் சிறகினிலே’ – பிப்ரவரி 2023)