மதுரை, பிப். 18- கோவில் வழிபாட்டில் எக்காரணம் கொண்டும் பாகுபாடு கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமின்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் மாதரசி அம் மன் கோவில் மற்றும் மேடை யாண்டி சாமி கோவில் உள்ளது. இதனை குலதெய்வ கோவிலாக, நாங்கள் பல தலைமுறையாக வழிபட்டு வருகிறோம். இந்தநிலை யில் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து இந்த கோவிலில் எங்களை வழிபட விடாமல் ஒருதரப்பினர் தடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள், இந்த கோவில் தங்களுக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகின் றனர். ஆனால் இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் ஆகும். வருகிற 18ஆம் தேதி அந்த கோவிலில் கொண்டாடப்பட உள்ள மகா சிவராத்திரி விழாவில் நாங்கள் பங்கேற்று பூஜை மற்றும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தோம். உரிய தீர்வு கிடைக்கவில்லை. எனவே தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த எங்களை, மேடையாண்டி சாமி கோவிலில் சிவராத்திரி பூஜையையொட்டி வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் தரப்பினரின் குற்றச்சாட்டுகள் குறித்து வருவாய் அதிகாரிகள் தலைமையில் அமைதிக் கூட்டம் கடந்த 15ஆம் தேதி நடந்ததாகவும், அதில் கடந்த ஆண்டைப்போல தற்போது வழிபாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவில் வழிபாட்டில் மற்ற தரப்பினருக்கு அளிக்கப்படும் உரிமையைப்போல மனுதாரர் தரப்பினரும் உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், வழிபாடுகளை பொறுத்தவரை எக்காரணம் கொண்டும் பாகுபாடு கூடாது என தெளிவுபடுத்துகிறேன். இதை வருவாய் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசார ணையை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.