சென்னை, பிப். 18- அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை உடனே சமர்ப்பிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் கீழ் 46 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 75 லட்சம் மாணவ, மாணவிகள் படிக் கின்றனர். இப்பள்ளிகளில் ஆசிரியர் களாக 2.90 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஆசிரியர், மாணவர் வருகைப் பதிவு ‘டிஎன்எஸ்இடி செயலி’ வழியாக தற்போது பதிவு செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் விடுப்பு விவரங்களும் இந்த செயலி வாயிலாகவே பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தொடக்க கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விவரம்:
தமிழ்நாட்டில் தொடக்க கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் அதிக விடுப்பு எடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. நீண்டகாலமாக விடுப்பில் உள்ளவர்கள், முறையான தகவலின்றி தொடர் விடுமுறையில் இருப் பவர்கள் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுப்பவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சரியான தகவல் இல்லாமல் அதிக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.