7,614 கோடி ரூபாயில் மின் வாகன ஆலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ‘ஓலா’ நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்

Viduthalai
3 Min Read

தமிழ்நாடு

சென்னை, பிப்.19 தமிழ்நாட்டில் ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக ஓலா நிறுவனத்தின் ஆலைகளை அமைக்க, தமிழ்நாடு அரசு – ஓலா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஓலா எலெக்ட்ரிக் மொபிலிடி நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ், ஓலா எலெக்ட்ரிக் டெக்னாலஜீஸ் மூலமாக முதல் கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின்வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு ரூ.7,614 கோடி. இதில், ஓலா செல் டெக்னாலஜீஸ் ரூ.5,114 கோடியும், ஓலா எலெக்ட்ரிக் டெக்னாலஜீஸ் ரூ.2,500 கோடியும் முதலீடுசெய்ய உள்ளன. இதன்மூலம் 3,111 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற்பூங்காவில் இத்திட்டம் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் 1.40 லட்சம் நான்குசக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துக்கும் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மினி டைடல் பூங்கா:  வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், 4.98 ஏக்கர் பரப்பில் மினி டைடல் பூங்கா அமைக்க ரூ.30 கோடியில் தரை மற்றும் 4 தளங்களுடன் 60,000 சதுரஅடி பரப்பில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்காவுக்கான கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.2.2023) அடிக்கல் நாட்டியுள்ளார். இதன்மூலம், படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலை கிடைப்பதுடன், சமூக பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை:  அய்நாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், அரசு, தனியார் மருத்துவமனைகளில் 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட100-க்கும் மேற்பட்ட திரவ மருத்துவஆக்சிஜன் தொட்டிகளை அமைத்துள்ளது. கரோனா காலத்தில் இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் திரவ ஆக்சிஜன் தங்கு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்தது. தற்போது ரூ.150 கோடியில் 105 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட்ஓசூர் தொழிற் பூங்காவில் புதிய அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை இந்நிறுவனம் நிறுவியுள்ளது. இந்த ஆலையை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து அனுமதிகளையும் இந்நிறுவனம் பெற, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் ஒற்றைச்சாளர இணையம் மூலம் ஆதரவு சேவைகள் அளித்துள்ளது.

ஆராய்ச்சி, மேம்பாட்டு மய்யம்:  ‘ஃபைபர் டு தி ஹோம்’ துறையில் அய்ரோப்பிய சந்தைகளில் முன்னணி வகிக்கும் ஜிஎக்ஸ் (GX) குழுமம், கடந்த 2022 ஜூலையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.110 கோடி முதலீடு மற்றும் 100 உயர்தர தொழில்நுட்ப பொறியியல் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் ஆராய்ச்சி, மேம்பாட்டு மய்யம் அமைக்க, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, குறுகியகாலத்திலேயே, சென்னை துரைப்பாக்கத்தில் ரூ.110 கோடியில் நிறுவப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மய்யத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை செயலர் வெ. ச.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெய முரளிதரன், டைடல் பூங்கா மேலாண்மை இயக்குநர் ம.பல்லவி பல்தேவ், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் நிறுவனங்களின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *