சென்னை, பிப் .19 ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதியதாக மனுத் தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக, நீட் தேர்வில் இருந்து விலக்குக்கோரி 2021ஆ-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்து பின்னர் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.இதனைத் தொடர்ந்து 2-ஆவது முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். நீட் தேர்வு விலக்கு குறித்து, ஏற்கெனவே விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு அனுப்பிய கடிதத்துக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தந்த நிலையில், மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கான விளக்கத்தையும் சட்ட வல்லுநர்களின் துணையுடன் தமிழ்நாடு அரசு அனுப்பிவைத்தது.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதியதாக மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கூட்டாட்சி கொள்கையை மீறுவதாக அத்தேர்வு உள்ளது. நீட் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது