ஆங்கில நாளேட்டின் கேள்வி
ஓசூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஓசூர், பிப்.20 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அண்ணாமலை, பா.ஜ.க.வினர் ஏன் தேர்தல் களத்தைவிட்டு ஓடியிருக்கிறார்கள்? என்று ஆங்கில நாளேட்டின் தலையங்கம் கேள்வி எழுப்பியிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
18.2.2023 அன்று சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ஓசூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
எடப்பாடி அஞ்சுகிறார்!
செய்தியாளர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி சொல்லுங்களேன்….?
தமிழர் தலைவர்: வருகின்ற 27 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற ஈரோடு கிழக்குத் தொகுதிக் கான இடைத்தேர்தல் ஒரு திருப்பமாக இருக்கும்.
எப்பொழுதும் ஈரோடு என்பது திருப்பம்தான். அதேபோன்று, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் திருப்பம் வரும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வெற்றி என்பது மாபெரும் வெற்றியாக அமையப் போகிறது என்பதற்கு என்ன அடையாளம் என்றால், எடப்பாடி நிலை தவறி நாளும் பேசி வருவதே நல்ல அடையாளமாகும். தேர்தல் தோல்வி ஜன்னி அவரைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. அதனால்தான் அவர், தரக்குறைவாகப் பேசுகிறார்; எவ்வளவுக்கெவ்வளவு அவர் தரக்குறைவாகப் பேசுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு அவர் அஞ்சு கிறார்; திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி என்பது உறுதியாகிறது.
அதேநேரத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் இன்னொன்றையும் நிரூபித்திருக்கிறது.
ஆங்கில பத்திரிகையின்
தலையங்கம்
ஓர் ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கத்தில், ”நாங்கள் வளர்ந்திருக்கிறோம், வளர்ந்திருக்கிறோம்” என்று சொன்ன அண்ணாமலை, பா.ஜ.க.வினருக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாயிற்றே – தனித்து நின்று அவர்கள் தங்களுடைய பலத்தைக் காட்டியிருக் கலாமே! ஏன் அவர்கள் தேர்தல் களத்தைவிட்டு ஒடியிருக்கிறார்கள்? என்ற கேள்வியை நாங்கள் கேட்கவில்லை; ஓர் ஆங்கில நாளேடு கேட்டி ருக்கிறது.
தேர்தல் முடிவிற்குப் பிறகு
சில கட்சிகள் காணாமல் போகும்
ஆகவேதான், பலரை அம்பலப்படுத்தக் கூடிய தேர்தலாகவும், தேர்தல் முடிவிற்குப் பிறகு சில கட்சிகள் காணாமல் போகக் கூடிய சூழ்நிலையும் இருக்கிறது!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.