ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முதலில் கடைப்பிடித்தது மனுதர்மம்தான்
பா.ஜ.க. ஆட்சியில் நீதிபதிகளுக்கு கூடுதல் தகுதி, காவி மனப்பான்மையா?
தர்மபுரி. பிப்,20. சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற மூன்று முக்கிய பொருளில் தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் பரப்புரை பெரும் பயணத்தில் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தர்மபுரியில் தமிழர் தலைவர்!
தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில்
19-02-2023 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவாஜி தலைமை தாங்கி வழிநடத்தினார். மாவட்டச் செயலாளர் தமிழ் பிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தி.மு.க. பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் செங்கல் மாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளர் பட்டு சுப்பிரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் நிசுமுதீன், ஆதித்தமிழர் பேரவை தொண்டரணி அமைப்பாளர் சிவா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பிரதிநிதி சாதிக்பாட்சா, தி.மு.க. பொறுப்பாளர் இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
தந்தை பெரியார் நமக்களித்த அறிவுக்கொடை!
தமிழர் தலைவர் தனது உரையில், ”எனக்கு முன் னால் பேசி விடைபெற்றுச் சென்றிருக்கும் மதிவதனி எம்.எல். படித்து, நமது இயக்கத்திலே பிரச்சாரம் செய்கிறார். அந்தக் காலத்தில் கா.சு.பிள்ளை எனும் கா.சுப்பிரமணிய பிள்ளை, பெரிய தமிழறிஞர். நெற்றி நிறைய பட்டை அடித்திருப்பார். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர். அந்தக் காலத்தில் எம்.எல். பயின்ற ஒரே தமிழர். கா.சு.பிள்ளை என்ற அவருடைய பெயர், எம்.எல்.பிள்ளை என்றே மாறிப் போனது. அன்றைக்கு அது வியப்புக்குரியது.ஆனால் இன்றைக்கு நம்முடைய பிள்ளைகளைப் பார்த்தீங்கன்னா, எம்.எல். படிச்சிருக்காங்க, நமது தீர்த்தகிரி நீதிபதியாக இருக்கிறார். இது எவ்வளவு பெருமை. இந்த அறிவுக்கொடையை நமக்களித்தவர் தந்தை பெரியார். இந்த திராவிட மாடலின் இன்றைய நீதிக்கட்சியின் நீட்சியாக இருப் பவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று ஆழ மான கருத்தை விதைத்து பலத்த கைதட்டலுடனேயே தொடங்கினார்.
சமூக நீதிக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் யார்?
தொடர்ந்து, நீதிக்கட்சி நினைவில், “நேற்று (18-02-2023) நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரான டாக்டர் நடேசனார் நினைவு நாள். அவர்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பார்ப்பனரல் லாதவர்கள் தங்கி படிக்க ‘திராவிடன் இல்லம்’ என்ற விடுதியை ஏற்படுத்திக் கொடுத்தவர். அதற்குப் பிறகு 1928 இல் கம்யூனல் ஜி.ஓ. வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபின் 1951 இல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தீர்ப்பளிக்கின்றன? வெகுண்டெழுந்து போராடுகிறார் தந்தை பெரியார்! அன்றைய பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் முதல் சட்டத் திருத்தத்தை கொண்டு வருகின்றனர். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் மட்டும் இருந்த கம்யூனல் ஜி.ஒ. இந்தியா முழுமைக்கும் வருகிறது. அப்படி போராடிப் பெற்ற உரிமைகளைத்தான், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் பறிக்க நினைக்கின் றனர்” என்றார்.
உயர்ஜாதி ஏழைகளின் யோக்கியதையை பச் சையாக அம்பலப்படுத்தினார். ஆகவே, இவர்களி டமிருந்து சமூக நீதியை பாதுகாக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப்பயணம்” என்று பயணத்தின் நோக்கத்தை சுருக்கமாகச் சொல்லி மக்கள் மனத்தில் பளிச் சென்று பதிய வைத்தார். மேலும், முதன் முதலில் ஜாதி வாரியாக இட ஒதுக்கீட்டை கடைப்பிடித்தது மனுதர்மம்தான் என்பதையும் சொல்லத் தவறவில்லை.
டில்லியிடம் கையேந்தி நிற்பதா?
பிறகு, மக்கள் திட்டங்களுக்கான நிதியை குறைக்கும் கொடுமையைச் சொல்லி, காந்தி ஊரக வேலைவாய்ப்பை ஒரு உதாரணமாகச் சொன்னார். அதையொட்டி, தமிழ் நாட்டின் வருமானத்தை எல்லாம் டில்லி பேரரசர்களுக்கு கப்பம் கட்டி விட்டு, “அவர்களிடம் நாம் பிட்சாந்தேகி என்று கையேந்தி நிற்கிறோம்” என்று சொல்லி மாநில உரிமைகளுக்கேற்பட்டிருக்கும் கதியை சுருக்கென்று தைக்கும்படி எடுத்துரைத்தார். தொடர்ந்து, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை கடுமையாக கண்டித்தார். அதனால் ஏற்படப்போகும் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் ஆபத்தை ஒளிவு மறைவு இன்றி மக்கள் முன் எடுத்து வைத்தார். பின்னர், மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சும்மா விளையாட்டுக்குச் சொல்லி ஏமாற்றியதோடு, தமிழ்நாட்டில் சேதுக்கால்வாய் திட்டத்தை மூடநம் பிக்கையை சொல்லி நிறுத்தி வைத்து இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற விடாமல் தடுக்கும் வஞ்சனையையும் மக்களுக்கு உறைக்கும்படி சொல்லி, இழந்த உரிமைகளை மீட்கும் போராட்டத்தில் மக்களின் ஒத்துழைப்பை கோரி தனது உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
கழக அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், கழக மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மண்டலத் தலைவர் அ.தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் கதிர், வேட்ராயன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கவிதா, பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ் திலீபன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கதிர். செந்தில் இணைப்புரை வழங்கி சிறப்பித்தார். இறுதியில் மாவட்ட அமைப்பாளர் காமராஜ் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
சேலத்தில் தமிழர் தலைவர்!
அங்கிருந்து தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, சேலம் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர். அங்கு, தாதகாப்பட்டியில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அ.ச.இளவழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பா.வைரம் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல தலைவர் சி.சுப்பிரமணியம், மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பழனி. புள்ளையண்ணன், மாவட்ட கழக காப்பாளர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
ஏன், தமிழ்நாடு சமூக நீதி மண்!
அவர் தனது உரையில், “தமிழ்நாடு சமூக நீதி மண்! இதுதான் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடியது” என்று தொடங்கிய அவர், அதற்கு ஆதாரமாக ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியில் ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் அவர்களின் 6 அடி உயர வெண்கலச் சிலையை திறந்து வைக்க தன்னை அழைத்திருந்ததையும், இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்த சமூக நீதி பற்றாளர்கள் அதில் கலந்து கொண்டதையும், சிலை திறப்பு விழா அகில இந்திய மாநாடு போல் நடைபெற்றதையும், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் மேனாள் அமைச்சர் தன்னிடம், ‘எப்படி 69% இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் சட்டம் ஆக்கினீர்கள்? என்று வியப்புடன் கேட்டார். நான், “அதைவிட வியப்பான தகவலை அவருக்குச் சொன்னேன். அதாவது, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கக்கூடிய மூன்று பார்ப்பனர்களை வைத்து அதை சாதித்தோம் என்று சொன்னேன் – தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமராக இருந்த ஆந்திரப் பார்ப்பனரான நரசிம்மராவ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பார்ப்பனரான குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆகியோர்தான் அந்த மூவர் என்று தெரிந்து கொண்டதும், கருநாடகத்துக்காரர் மேலும் வியப்படைந்ததை குறிப்பிட்டு, தமிழ்நாடு ஏன் சமூக நீதி மண் என்பதற்கு காரணம் சொன்னார்.
நீதிபதிகளுக்குத் தகுதி
காவி மனப்பான்மையா?
தொடர்ந்து, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாற்றை சுருக்கமாக கூற வந்தவர், இட ஒதுக்கீடு 50 க்கும் மேலே போன போது, தகுதி, திறமை என்னாவது என்று கதறிய வர்கள் இன்று 10% இடஒதுக்கீட்டை பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, “அதுதான் மனுதர்மம்” என்றார். பின்னர், “சிலர் இப்ப எங்கே இருக்கிறது மனுதர்மம்? என் கிறார்கள். இல்லைதான். ஏன் இல்லை? பெரியார் இருக்காரு அதனால இல்லை! திராவிட மாடல் ஆட்சி இருக்கு, அதனால இல்லை! நாளைக்கே இதெல்லாம் இல்லைன்னா அடுத்த நாளே வந்திடுமே!” என்று கேள்வி கேட்டு பதில் சொல்லி மக்களுக்கு இருந்த அந்த மயக்கத்தையும் போக்கினார். பொதுத்துறை நிறு வனங்களை தனியார் மயமாக்குவதால் மறைமுகமாக இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து என்பதை விளக்கினார். அமெரிக்காவில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு இருப்பதை சுட்டிக்காட்டினார். அதே போல் இங்கும் வரவேண்டும் என்றார். நீதிமன்றங்களில் நீதிபதி களாக உயர்நீதி, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயர் ஜாதியினர் இருப்பதைக் குறிப்பிட்டு, “மோடி ஆட்சியில் நீதிபதிகள் ஆவதற்கு காவி மனப்பான்மை ஒரு தகுதி! ஆர்.எஸ்.எஸ்.காரராக இருப்பது தகுதியாக்கப்படுகிறது” என்று சமூக நீதிக்கு இருக்கும் ஆபத்தை புரியும்படி எளிமையாக சொன்னார். ஆளுநர்கள் மூலம் போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிக்கும் சட்டவிரோதத்தை மக்கள் முன் எடுத்து வைத்தார். மேலும், சேது சமுத்திரத் திட்டம் குறித்து நீதிக்கட்சி காலத்திலிருந்து விரிவாகப் பேசினார். தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. வின் துரோகம், பா.ஜ.க. வின் ஓரவஞ்சனை ஆகியவற்றை விளக்கினார். இவையெல்லா வற்றையும் தாண்டி, வெற்றி பெறுவதற்கு மக்கள் ஒத் துழைப்பது அவசியம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் சி.பி.அய். மாவட்ட செயலாளர் மோகன், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ்,ம.ம.க.மாவட்ட செயலாளர் இமாம் மொய்தீன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் உதய பிரகாஷ், கழக அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட அமைப்பாளர் பூபதி, மாநகர தலைவர் இளவரசன், மேட்டூர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மேட்டூர் கழக மாவட்ட செயலாளர் கா.நா.பாலு, மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் இராவண பூபதி நன்றி கூறினார்.
கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3 இல் தொடங்கி, மார்ச் 10 அன்னை மணியம்மையார் பிறந்தநாளில் கடலூரில் நிறைவுறும் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டம் முடிவடைந்தது.