கண்டதும் – கேட்டதும்
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுதலைக்கு மட்டுமல்ல, வாழ்வியலுக்கும் ஆசிரியர் என்பதை வாழ்வியல் சிந்தனை கள் மூலம் மட்டுமல்ல, வாழ்ந்து காட்டக் கூடியவராக இருப்பதை, கடந்த 2023 பிப்ரவரி 7ஆம் தேதி அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை உடனிருந்து பார்த்தவர்களுக்கு, “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல” புரிந் திருக்கும். ஆம் தன்னுடைய 90 ஆம் வயதிலும் உழைப்பின் உற்சாக உருவமாக இருக்கக் கூடியவர் நம் அறிவுக்கெட்டிய வரையிலும் அவர் ஒருவர்தான்! ”பெரியார் ஒருவர்தான் பெரியார்” என்பதைப் போல, “ஆசிரியர் ஒருவர்தான் ஆசிரியர்” என்று பாடலாம்! சரி, உடுமலைப்பேட்டை ஆய்வு மாளிகையில் அப்படி என்னதான் நடந்தது?
6 ஆம் தேதி, இரண்டாம் கூட்டமாக உடுமலைப் பேட்டைக்கு இரவு 9.30 க்கு, உற்சாகமாக வேக நடையில் மேடைக்கு வருகிறார். உடுமலைப்பேட்டை மக்கள் ஆசிரியரை நேரில் பார்த்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆகவே அவரைப்பற்றிய அவர்களது எண்ணம், திராவிடர் இயக்கத்தின் ஒரே மூத்த தலைவர்! பெரியாருடன் இருந்த தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர்! வயதைப் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாவிட்டாலும், நல்ல வயதாகிவிட்டிருக்கும். ஆகவே தளர் நடையில் வருவார். எப்படியாவது அருகில் பார்த்துவிட வேண்டும் என்று கொட்டும் பனியிலும் ஆவலுடன் நேரமாயிற்றே, பனி வேறு பொழிகிறதே என்று கலைந்து சென்று விடாமல், பெரும்திரள் கூட்டமாக காத்துக் கொண்டிருந்தனர். அப்படி எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, அவரது உற்சாக வேகநடையும், மக்களைப் பார்த்து வசீகரப் புன்சிரிப்புடனும், கூப்பிய கரங் களுமாக வந்தவரைப் பார்த்து மக்கள் உற்சாகத்திலகங்களாக மாறிவிட்டனர். அடடே.. நமது கணிப்பு பொய்யாகிவிட்டதே என்று மகிழ்ந்து உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விசில் அடித்து கொண்டாடித்தீர்த்துவிட்டனர். இயல்பாகவே ஆசிரியர் மக்களைப் பார்த்துவிட்டால் உற்சாகமாகிவிடுவார். இப்போது கேட்கவா வேண்டும்? சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத்திட்டம் என்ற மூன்று ஆழமான கருத்துகளை வெடிச்சிரிப்பு வரும்படியாக பேசிவிட்டார்.
மக்களுக்கு அய்யோ.. 9:40 க்கு ஆசிரியரிடம் ஒலி வாங்கியை கொடுக்கிறார்களே, 10 மணிக்குள் கூட்டம் முடிந்து விடுமோ என்ற கவலை இருந்தது. ஆனால், ஆசிரியர் பேசும் போதே, “இவ்வளவு பனியிலும் நீங்கள் காத்திருக்கிறீர்கள். ஆகவே நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்” என்று கூறியே தொடங்கினார். அதுபோலவே 10:30 மணி வரையிலும் பேசினார். கூட்டம் கொஞ்சமும் கலையாமல் முடியும் வரையிலும் இருந்து கேட்டதோடு, “ஏம்பா, 90 வயசானவங்க மாதிரியா பேசறாரு? என்று வாயைப் பிளந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தனர். கடவு ளைப் பற்றி, மூட நம்பிக்கைகளைப் பற்றி விமர்சனம் செய்து தான் ஆசிரியர் பேசுகிறார். அதில் நம்பிக்கை உள்ள மக் களே அதை ரசித்து கைதட்டி மகிழ்ந்தனர். இளைஞர்களுக்கு ஆசிரியரின் வயதைக் காட்டிலும் அவர் பேச்சில் இருந்த தர்க்கமும், நியாயமும் கவர்ச்சிகரமாக இருந்ததால் அவர் களும் வயதானவர்களைப் போலவே ரசித்தும், சிரித்தும், கைதட்டியும் மகிழ்ந்தனர். இப்படி 10:30 க்கு கூட்டத்தை முடித்துக்கொண்டு பிறகு வேறொரு இடம் சென்று இரவு உணவு முடித்து, அங்கிருந்து உடுமலைப்பேட்டை ஆய்வு மாளிகை சென்று தோழர்களுடன் சற்றுநேரம் அளவளாவி விட்டு அவர் உறங்கச் சென்ற போது நிச்சயம் நேரம் நள்ளிரவைத் தாண்டி இருக்கும்.
அடுத்த நாள் காலையில் 6 மணிக்கெல்லாம் நடை பயிற்சிக்கு தயாராகிவிட்டார். அந்த ஆய்வு மாளிகையின் காவல்காரர் மோகன், ஆசிரியர் நடைபயிற்சி முடியும் வரை அவரை கவனித்தபடி இருந்திருக்கிறார். பின்னர் அவர், தோழர்களிடம் பேசும் போது, ”அய்யா ஒரு மணி நேரத் திற்கும் மேலாக நடந்திருப்பாருங்க. அவர் கூட வந்தவங்க ளெல்லாம் பின்தங்கிட்டாங்க” என்று பூரிப்புடன் சொன்னார். தோழர்கள், “ஆசிரியருக்கு வயது 90 ஆச்சுங்க” என்று சொன்னதும், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்ததைப் போன்ற வியப்பு படர்ந்தது. தானாகவே கைகளைக் கூப் பினார். “அவரு நல்லா இருக்கோணுங்க” என்றார். அவரது அன்பும், அக்கறையும் கண்கலங்க செய்துவிட்டது. திடீ ரென்று, “இங்க நடக்கிறதப் பார்க்கும்போது முதலமைச்சர் வந்து தங்கி இருக்கிற மாதிரி தோணுதுங்க” என்றார். சற்று முன்னர்தான் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிதான் வந்து சென்றார். உள்ளூரில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள், கருஞ்சட்டைத் தோழர்கள் ஏதோ திருவிழாவிற்கு வருவதைப் போல குடும்பம் குடும்பமாக அலையலையாக ஆய்வு மாளிகைக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். ஆசிரியரைக் கண்டு அளவுகடந்த உற்சாகத்துடன் திரும்பிய வண்ணமும் இருந்தனர். இப்படியொரு தலைவரை; இப்படி யொரு இயக்கத்தை வேறு எங்கு காண முடியும்? இதைக் கண்டு தான் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து அவரே, ”இன்றளவில் திராவிடர் கழகத் தலைவரைப் போல பெரிய ஆள் இல்லீங்க! வயசுலயும் பெரியவர் இவர்தான்” என்றார். உற்சாகத்தில் அவருக்கு திராவிடர் இயக்கம் தொடர்பாக பல்வேறு நினைவுகள் முட்டி மோதி இருக்கக்கூடும். ஆனால் உடனடியாக நினை வுக்கு வந்த தகவலாக, “கோட்டூர் மலையாண்டி பட்டினம் ஆசிரியர் கண்ணன் – லலிதா ஆகியோரின் திருமணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தாலி மறுப்புத்திருமணமாக நடந்தது” என்றார். பேசப்பேச ஆசிரியரின் முக்கியத்துவம் புரிந்துவிட அவருக்குள் இனம்புரியாத ஒரு எண்ணம் பரபரத்ததுக் கொண்டிருப்பதை புரிந்துகொண்ட தோழர்கள், என்னவென்று விசாரித்த போது, “அய்யாவுடன் ஒரு போட்டோ எடுத்துக்கலாங்களா” என்றார் அடக்க முடியாத ஆவலுடன். தோழர்களும் உடனே, பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர் இராகுணசேகரனைக் காட்டி, “அவரிடம் போய் சொல்லுங்கள்” என்றனர். அவர், தன்னு டைய இணையர் ஜமுனாராணியை அழைத்துக்கொண்டு வந்து, “இரண்டு பேரும் சேர்ந்து அய்யாவுடன் போட்டோ எடுத்துக்கலாங்களா?” என்று மீண்டும் கேட்டார். தலை யசைத்ததும், விறுவிறுவென்று பரப்புரைப் பயண ஒருங்கி ணைப்பாளரிடம் சென்று கோரிக்கை வைத்து, அவர் சம் மதித்ததும் காத்துக்கொண்டிருந்து ஆசிரியருடன் ஒளிப் படம் எடுத்துக்கொண்டார். இதே போல் பலரும் ஆசிரி யருடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ள காத்துக்கொண்டிருந் தனர்.
அந்த ஆய்வு மாளிகையே அன்று குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. அதற்கேற்ப உடுமலைப் பேட்டையில் சுவர் எழுத்துகளும், சுவரொட்டிகளும், பதாகைகளும், கழகக் கொடிகளும் எங்கெங்கும் காணும்படியாக இருந்தன. எல்லோரையும் சந்தித்ததோடு அல்லாமல் அதற்குப்பிறகும் ஆசிரியர், வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் இல்லம் சென்றார். தன்னுடைய பால்ய நண்பர் இல்லம் சென்றார். மற்றுமொரு காலம் சென்ற பார்ப்பனரான கொள்கை நண்பர் சுப்பிரமணியம் இல்லம் சென்று சுப்பிரமணியத்தின் மக னைக் கண்டு விசாரித்துவிட்டுத்தான் அடுத்த நிகழ்வுக்குப் புறப்பட்டார். அப்பப்பா… அன்றாடம் ஆசிரியருடன் உடனி ருப்பவர்களுக்கே அவரது உழைப்பு மலைப்பைத்தருகிறது.
வாழ்க ஆசிரியர்! வாழ்க தமிழ்நாடு!
– உடுமலை வடிவேல்