சென்னை, நவ. 2- ‘தமிழ்நாடு நாள்’ ஜூலை 18 மட்டுமே. வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம் என்று தவெக அரசுக்கு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
நவம்பர் 1 எல்லைப் போராட்ட தியாகிகள் நாள். வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம். நவம்பர் 1ஆம் நாளை ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா என்பதே அடிப்படையான கேள்வி. இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்து கொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம். இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன.
தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாநிலையில் இருந்து 1952 டிசம்பர் 15ஆம் நாள் பொட்டி சிறீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன.
மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள்.
உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்ட தியாகிகள் நாள். அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காக தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா? நிச்சயமாக இல்லை.
‘தமிழ்நாடு’ என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அந்த கோரிக்கைக்காக 1956ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாநிலையில் இருந்து அக்டோபர் 13ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். 1967 ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
‘தமிழ்நாடு’ என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18. இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஜூலை 18அய் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர். அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30ஆம் நாள் ‘ஜூலை 18’ தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதேவேளையில், நவம்பர் 1அய் ‘எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக’ நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ரூ. லட்சம் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1அய்யும் ‘தமிழ்நாடு நாள்’ என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது? வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும். அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்;
ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது. நவம்பர் 1 மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள். ஜூலை 18 தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள்.
தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்ற தீர்மானத்தை நிறைவேற்றிய அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம். நவம்பர் 1அய்ப் போற்றுவோம்; ஜூலை 18இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம். ‘தமிழ்நாடு நாள்’ ஜூலை 18 மட்டுமே! தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க–! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காக தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா? நிச்சயமாக இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
