சென்னை, பிப். 22- ரயில் பயணிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று ரயில்வே காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் வனிதா எச்சரிக்கை விடுத்தார். கடந்த 16ஆம் தேதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீற லில் ஈடுபட்ட வழக்கில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேல் ஏற்கெனவே கொல்லம் மாவட்டம் குன்னாகோட்டை காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு இருப்பது விசாரணையில் தெரியவந் துள்ளது. அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டாலோ அல்லது ரயில்வே பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும். ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் பெண்கள், பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கும், குற்றம் செய்வதற்கும் சூழ்நிலையும், சந்தர்ப்பமும் தான் காரணம்.
இந்த மொழி பேசுபவர்கள், இந்த ஊரை சேர்ந்தவர்கள் தான் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை காவல் துறைக் கண்காணிப்பாளர் ரமேஷ், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ரோகித் குமார் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.