பூமியின் சுழற்சி புரிதலை துல்லியப்படுத்திய பண்டைய சூரிய மறைப்புப் பதிவு!

2 Min Read
- Advertisement -

 

நகோயா பல்கலைக்கழகத்தின் வானியல் ஆராய்ச்சிக் குழு, துல்லியமாகத் தேதியிடப்பட்ட மிகப் பழைமையான முழு சூரிய  மறைப்புப் (கிரகணப்) பதிவுகளில் ஒன்றை மீண்டும் ஆய்வு செய்துள்ளது.

கி.மு. 709 ஜூலை 17 அன்று, பண்டைய சீனாவின் கூஃபு (Qufu) நகரில் இருந்த லூ டச்சி (Lu Duchy) அரசவையில் இந்த சூரிய மறைப்பு கவனிக்கப்பட்டது. இந்த நிகழ்வு, 200 முதல் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுக்கப்பட்ட “வசந்த, இலையுதிர்காலக் குறிப்பேடுகளில்” (Spring and Autumn Annals) பதிவாகியுள்ளது. “சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டது” என்று அந்தத் தொகுப்பு நூலில் அது தெளிவாகக் கூறுகிறது. வரலாற்று நிலவியலையும், நவீன வானியல் கணக்கீடுகளையும் இணைத்து, கூஃபு நகரிலிருந்து அந்த  சூரிய மறைப்பு எப்படித் தெரிந்திருக்கும் என்பதை அறிவியலாளர்கள் மீட்டுருவாக்கம் செய்தனர்.

சூரிய மறைப்பு நிகழ்ந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட “ஹான்ஷு” (Hanshu, ஹான் வம்சத்தின் நூல்) என்ற நூல், சூரிய மறைப்பில், மறைந்த சூரியன் “மேலும் கீழும் முழுவதும் மஞ்சள் நிறமாக” இருந்ததாக விவரிக்கிறது. இது வழக்கத்துக்கு மாறான ஒரு குறிப்பு ஆகும். முழு சூரிய மறைப்பின்போது வெறும் கண்ணுக்குத் தெரியும், சூரியனின் மங்கலான வெளிப்புற வளிமண்டலமான கரோனாவை இது தொடர்புபடுத்துகிறதா என ஆராயப்பட்டது. இது சரியென்றால், கரோனா பற்றி இன்றுவரை எஞ்சியுள்ள மிகப் பழைமையான எழுத்து விவரிப்புகளில் இதுவும் ஒன்று என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரான நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹிசாஷி ஹயகாவா (Hisashi Hayakawa) கூறுகிறார்.

ஆனால் தொடக்கத்தில், இந்தப் பதிவு நவீன வானியலுடன் முரண்படுவது போலத் தோன்றியது. பூமியின் பண்டைய சுழற்சி பற்றிய தற்போதைய மதிப்பீடுகளைப் பயன்படுத்தி சூரிய மறைப்பின் பாதையைக் கணக்கிட்டபோது, லூ அரசவை இருந்ததாக முன்பு கருதப்பட்ட இடத்திலிருந்து முழு சூரிய மறைப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று வந்தது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் ஒரு வரைபடப் பிழை என்று பின்னர் தெரியவந்தது. தொல்லியல் அகழ்வாய்வு அறிக்கைகளும், வரலாற்று நிலவியல் சான்றுகளும், முந்தைய கணக்கீடுகள் பண்டைய கூஃபுவை அதன் உண்மையான இடத்திலிருந்து சற்றுத் தள்ளி வைத்திருந்ததைக் காட்டின.

ஹயகாவா விளக்குவதுபோல், இந்தத் திருத்தம் “முழு சூரிய மறைப்பின்போது பூமியின் சுழற்சியைத் துல்லியமாக அளக்கவும், சூரியனின் சுழற்சி அச்சின் திசையைக் கணக்கிடவும், கரோனாவின் தோற்றத்தை உருவகப்படுத்தவும் எங்களுக்கு உதவியது.” கரோனாவின் சாத்தியமான வடிவத்தை ஆராய்ந்ததில், நீண்ட காலமாக மிகக் குறைவாக இருந்த சூரியச் செயல்பாடு, அந்தக் காலத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கலாம் என்று குழுவின் பகுப்பாய்வு சுட்டுகிறது. Astrophysical Journal Letters இதழில் வெளியான இந்த ஆய்வு முடிவுகள், பண்டைய காலத்தில் பூமி சுழன்ற வேகம் பற்றிய இன்னும் துல்லியமான சான்றுகளை வழங்குகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *