ஜகார்த்தா, அக். 29- இந்தோனேசி யாவின் தெற்கு கலிமந்தான் பகுதியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மழையின்றி கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில், அங்குள்ள காடுகளில் கொழுந்துவிட்டு எரிந்த கட்டுக்கடங்காத காட்டுத்தீயை அணைக்கப் பெய்த திடீர் கனமழையால் தீயணைப்பு வீரர்கள் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக இப்பகுதியில் காடுகளில் தொடர் தீ விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதனால் உருவான நச்சுப் புகைமூட்டம் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் வரை பரவி மக்களைப் கடுமையாகப் பாதித்தது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் தன்னார்வலர்களும் இரவு பகலாகப் போராடியும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வந்தனர்.
இந்நிலையில், அக்.25 அன்று பெய்த திடீர் கனமழையைக் கண்டதும் தீயணைப்பு வீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தொடர்ந்து போராடி வந்த அவர்கள், கனமழையில் நனைந்தபடியே தங்களின் பாதுகாப்பு உடைகளுடன் சாலையிலேயே ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்ட இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
