வெளிநாட்டு படையெடுப்பால் அழிக்கப்பட்ட மதவழிபாட்டுத் தலங்களின் மறுகட்டமைப்புப் பணியை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மகாராட்டிரா மாநிலம் புனேவில் சிவாஜியின் வாழ்க்கை அடிப்படையிலான பூங்காவை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முகலாய ஆட்சி மற்றும் பிற வெளிநாட்டு படையெடுப் புகளின்போது பல்வேறு ஹிந்து மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட சப்தகோட்டீஸ்வரர் வழிபாட்டுத்தலத்தை கோவா முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த் மறுசீரமைப்பு செய்தார். அதேபோன்று, மராத்திய அரசரால் தென் இந்தியாவில் பல்வேறு ஹிந்து மத வழிபாட்டுத் தலங்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. ஹிந்து மத வழிபாட்டுத் தலங்கள் முன் மிகப்பெரிய தடுப்பு வாயில்கள் அமைத்து அந்த கட்டமைப்பை மீண்டும் கொண்டுவர சிவாஜி முயற்சித்தார். சத்ரபதி சிவாஜிக்கு பின்னர் இந்து மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டமைக்கும் வழக்கத்தை பஜிரோ பீஷ்வா, நானாசாகிப் பீஷ்வா, மாதவ்ராவ் பீஷ்வா கடைசியாக புனியஅசோக் அகில்யதேவி கொண்டிருந்தனர். இன்று ராமர் வழிபாட்டுத் தலம் கட்டுதல், காசி விஸ்வநாதர் தலத்தை மேம்படுத்தல், தங்கத்தால் அலங்கரித்து சோம்நாத் வழிபாட்டுத் தலத்தை அமைத்தல் போன்ற பணிகளை பிரதமர் மோடி முன்னெடுத்துச் செய்து கொண்டிருக்கிறார்’ என்றார் உள்துறை அமைச்சர்.
“ஒட்டகத்தைப் பார்த்துப் பழித்ததாம் கொக்கு” என்று ஒரு பழமொழி உண்டு. ஒன்றிய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் பேச்சு அதைத்தான் நினைவூட்டுகிறது.
இந்தியா முழுவதும் இருந்த ஆயிரக்கணக்கான பவுத்த விகார்களை ஹிந்துக் கோயில்களாக மாற்றியவர்களா இதனைப் பேசுவது!
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தக்கத் தரவுகளுடனும், ஆதாரங்களுடனும் எந்தெந்த பவுத்த கோயில்கள் எல்லாம் ஹிந்துக் கோயில்களாக மாற்றப் பட்டன என்பதற்கு ஒரு நூலே எழுதியுள்ளார். அதே போல சமணப் பள்ளிகளும் உருமாற்றப்பட்டன.
“கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கை யாழ்வார், நாகப்பட்டினத்துப் பவுத்த விகாரையொன்றில் முழுவதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்தரின் உருவச் சிலையைக் கவர்ந்து கொண்டு போய், அப் பொன்னைக் கொண்டு திருவரங்க திருப்பதியில் திருமதில் எழுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளை செய்தார்” என்பது குருப்பரம் பிரபாவம் முதலிய வைணவ நூல்களினால் தெரிய வருகிறது. (“பவுத்தமும் தமிழும்” பக்கம் 47,48).
இந்நூலின் 77ஆம் பக்கத்தில் காணப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை.
“ஹிந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் அவதாரமாக ஏற்றுக் கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. சாஸ்தா அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டு பின்னர் முருகர் அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும் விநாயகன் என்றும் பெயர்கள் உள்ளன. இப் பெயர்களை நிகண்டுகளில் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பவுத்தக் கோயில்களை பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்ச பாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர். அதேபோல விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளையார்) கோயி லாகவும் மாற்றி விட்டனர். இது போல ஏராளம் உண்டு.
“பூரி ஜெகந்நாதர் ஆலயம் பழங்காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தது” – இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? சாட்சாத் விவேகானந்தர்தான் (ஆதாரம் நூல்: “இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே, வருக!”)
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, ஹிந்துக் கோயில்களை மீண்டும் புத்தர் கோயிலாக மாற்றத் தயார் தானா?