“பெண்கள் குறித்துக் கவலைப்பட்டது பெற்றோரா? பெரியாரா?”, எனத் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி கேள்வி எழுப்பினார்.
2023 ஆம் ஆண்டு, மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 365 நாளும், 24 மணி நேரங்களும் (அதாவது தூங்கும் நேரம் தவிர) தமிழ் நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடக்க வேண்டும் என அறிவிப்பு செய்தார்கள்!
அதனையொட்டி மே 27 சென்னைப் பெரியார் திடலில் தொடங்கிய இப்பயிற்சிப் பட்டறை கீரமங்கலம், தஞ்சாவூர், நீடாமங்கலம், திருநாகேஸ்வரம், செந்துறை, கல்லூர், குற்றாலம், திருவாரூர், நத்தம், இலால்குடி, துறையூர், சேந்தநாடு, கள்ளக்குறிச்சி, பட்டுக்கோட்டை, கந்தர்வகோட்டை, நடுவீரப்பட்டு, மயிலாடுதுறை, ஆத் தூர், பொள்ளாச்சி, கோயம்புத்தூர், சிதம்பரம், காரைக் கால், குன்னூர், கூடலூர், அரக்கோணம், திருத்தணி, விருதுநகர், அம்பத்தூர், பொன்னேரி ஆகிய 30 இடங் களில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி மராத்திய மாநிலம் மும்பையில் நடைபெற்றது. தொடர்ந்து 32 ஆவது மாவட்டமாக இராஜபாளையத்தில் 29.10.2023 அன்று நடந்தது. பி.எம்.ஆர்.முத்துமகால் மண்டபத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் 45 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் “பெரியாரும், பெண் விடுதலைச் சிந்தனைகளும்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி பேசியதாவது:
அடிமைத்தனமும்! உரிமை முழக்கமும்!!
ஜாதி, மதம் கூடாது, அது மனித வளர்ச்சிக்குத் தடை என்கிறோம். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் யாரும் ஜாதி போட்டுக் கொள்வதில்லை; ஒரு மனித ரைப் பார்த்தவுடன் இவர் இந்த ஜாதி என யாரையும் அடையாளம் கொள்ள முடியாது. ஆனால் ஒரே ஒரு ஜாதியினர் மட்டும் சட்டை இல்லாமல், பூணூல் சகிதம் சாலைகளிலும், கோயில்களிலும் காட்சி அளிப்பார்கள். மனிதர்களுக்கு இடையே பேதங்கள் கூடாது எனப் போராடினால், பேதங்கள் கண்டிப்பாக இருக்க வேண் டும் என்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது.
பெண்களின் உரிமைகளைப் பேசும் போது கூட எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தங்கள் மனைவிக்கு அந்த உரிமைகள் கூடாது எனச் சிலர் நினைக்கிறார்கள். தங்கள் சகோதரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதைக் கூட மகிழ்ச்சியாகவும், வெற்றியாகவும் பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு இயல்பாகி போயி ருக்கிறது நிலைமை! பெண்ணுரிமை போல ஆணுரி மையும் வேண்டும் என்கிறார்கள். எல்லா உரிமைகளை யும் பேசுவோம். அடிமைத்தனம் இருக்கிற அத்தனை இடங்களிலும் உரிமைகள் பேசத்தானே வேண்டும்!
பெற்றோர்களின் மகிழ்ச்சி!
பெண்கள் நன்கு படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள், இதற்கு மேல் என்ன உரிமை வேண்டி இருக்கிறது எனக் கேட் கிறார்கள். எது அடிமைத்தனம், அது எப்படி இருந்தது, யார் காரணம், இன்றைய சூழல் என்ன என்பதை அறிவது முக்கியம் அல்லவா?
4 வயது குழந்தைக்கு 40 வயது ஆணையும், 6 வயது குழந்தைக்கு 60 வயது ஆணையும் திருமணம் செய்து வைத்த நாடுதானே இது? இந்த ஏற்பாடுகளை ஹிந்து மதம்தானே செய்து வைத்தது. ஒரு பெண்ணுக்குக் குழந்தையிலேயே திருமணம் செய்துவிட்டால் கல்வி மறுக்கப்படும், சுயவருமானம் இருக்காது, சிந்தனைகள் எழாது, சுதந்திரம் கிடைக்காது, மொத்தத்தில் வாழ்க் கையே முடிந்துவிடும்!
அதே ஹிந்து மதம் தான் இப்போதும் இருக்கிறது. குழந்தைத் திருமணம் செய்ய முடியுமா? கல்வி மறுக்கப்படுமா? என் மகள் மருத்துவர், பொறியாளர், வழக்குரைஞர் எனச் சொல்வதில் தான் பெற்றோரின் மகிழ்ச்சியே இருக்கிறது! நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை எண்ணிப் பாருங்கள். அவ்வளவு கொடுமையாக இருக்கும்!
குற்றாலக் குளியலும்!
நெருப்புக் குளியலும்!
உடன்கட்டை ஏறுதலும் ஹிந்து மதத்தின் ஓர் அங்கம் தானே? எந்தப் பெண் விரும்பி நெருப்பில் ஏறினார்? இவர்களாகத் தள்ளிவிட்டு “ஏறுதல்” என்று சொல்லி விட்டார்கள். குற்றாலத்தில் குளிப்பதைப் போல, மகிழ்வானதா நெருப்பில் குளிப்பது? ஒருவர் இறந்துவிட்டால் அவருக்குப் பிடித்தமான சட்டை, கடிகாரம், தலையனை போன்றவற்றை நெருப்பில் போடுவார்கள். இதை ஒரு வழக்கமாக வைத்திருந் தார்கள். அதேபோல பெண்களையும் ஒரு பொருளாக நினைத்து நெருப்பில் தள்ளினார்கள். கணவர் இறந்த பிறகு நீ வாழத் தகுதியில்லை; உயிரோடு இருக்கக் கூடாது என்பதே இதன் பொருள். இதை வெளிப்படை யாக ஆதரித்த மதமும், வெளிப்படையாக செய்த மதமும் ஹிந்து மதம்தானே?
இது ஏதோ என்றைக்கோ நடந்தது என்று கருதக் கூடாது. பெண்ணுரிமைகள் என்பது ஏதோ மற்ற பெண் களுக்கு என்றில்லாமல், நம் அம்மா, சகோதரிகளின் துன்பங்களை மனதில் நிறுத்தினால் உண்மை புரியும். கணவர் இறந்த பிறகு மொட்டை அடிப்பது, அலங் கோலம் செய்வது, வெள்ளைப் புடவை கட்டுவது எல்லாம் தொடர்ந்தது. இந்த நிலை இன்று அக்கிரகாரப் பெண்களுக்குக் கூட இல்லை! ஆக கொடுமைகள் செய்தது யார்? அதை முறியடித்தது யார்? என்கிற வரலாற்றை நாம் அறிய வேண்டும்! இன்றைக்கு அதே ஹிந்து மதம் இருக்கின்ற நிலையில் வெள்ளை சேலை உடுத்த முடியுமா? அபசகுனமாக மாற்ற முடியுமா? அந்த எண்ணங்களே தோன்றாத அளவிற்கு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தியவர் பெரியார்!
பெற்றோரா? பெரியாரா?
உரிமைகள் என்பது மனிதர்களுக்குப் பொதுவான ஒன்று! அது கல்வி, வேலை வாய்ப்பு, வாக்குரிமை, சொத்துரிமை, பேச்சுரிமை, திருமண உரிமை என எல்லாமும்! இங்கே விளையாடுவதற்குக் கூட பெண் களுக்குத் தடைகள் இருந்தன. இன்னும் சொன்னால் பெண்களுக்கு விளையாடும் உரிமையே கிடையாது. இன்று ஒலிம்பிக் வரை உயர்ந்திருக்கிறார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் தோசை ஏன் வட்டமாக வரவில்லை என வீட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். தான் சமைக்கிற உணவைத் திருப்திகரமாக சாப்பிட அனுமதி இருந்ததா? திருமணத்திற்கு முன் உடல்பருமன் ஏற்பட்டால் மாப்பிள்ளை கிடைக்காது, திருமணம் ஆனபிறகு குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண் டும். எனவே உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
இதுகுறித்து யாராவது பேசிவிட்டால் வாயாடி, படித் தத் திமிர், கொழுப்பு என்பார்கள். ஆக, சாப்பிடாதே, விளையாடாதே, பேசாதே எனப் பெற்றோர்களே சொன்ன நிலையில் பெரியார் தான் வந்து ஒவ்வொன் றாகப் பெற்றுக் கொடுத்தார். அதனால் தான் பெண்கள் மாநாட்டில் “தந்தை” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு, இன்று தந்தை பெரியார் எனச் சிறந்து விளங்குகிறார்.
“செல்பி” எடுக்கும் பெண்கள்!
பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவும், உடல் வலிமையும் வேண்டும் என 1930 ஆம் ஆண்டிலேயே உடற்பயிற்சி குறித்துப் பேசியவர் பெரியார். வெளி நாடுகளில் கூட பெண்களுக்கான வாக்குரிமை தாமத மாகவே வந்தது. ஆனால் 1921 ஆண்டுகளிலே பெண் களுக்கான வாக்குரிமையை வழங்கியது நீதிக்கட்சி. இன்றைக்குப் பெண்கள் வாக்குகள் செலுத்தியதும் “செல்பி” எடுத்துப் போடுகிறார்கள். பார்க்கவே மகிழ்ச்சி யாக இருக்கிறது. அதேநேரம் இந்த வரலாறு வந்த தடங்களையும் படிக்க வேண்டும்.
பெண்களுக்கான உரிமைகளைக் கூட பிறகு பேசுவோம். முதலில் பெண் குழந்தைகள் பிறக்கவே அனுமதி இல்லை. கருவிலே கொன்றார்கள். பலரைப் பிறந்து வெளியானதும் கொன்றார்கள். பிறப்பிலேயே சாவு என்பது எவ்வளவு கொடுமையானது? பெண்கள் பிறந்து வரவே இங்கு உரிமை இல்லை. பிறகு கல்வி, வேலை வாய்ப்பு, சுய வருமானம், இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் வாழ்வதற்கான உரிமைகள் இவையெல்லாம் எப்படி கிடைக்கும்?
காது குத்து, பூப்புனித நீராட்டுதல், சீர் செய்வது, வளைகாப்பு, பிரசவம் பார்த்தல் எனப் பெண்களைச் செலவாகத்தானே பார்த்தார்கள். சொந்த அம்மாவும், அப்பாவும் இப்படி பார்த்த நிலையில், சமூகத்தின் சொத்தாகப் பெண்களை உயர்த்தியவர் தந்தை பெரியார்! சமூகத்திற்கு 100 விழுக்காடு உழைப்புத் தேவை என்றால், அதில் 50 விழுக்காடு பங்கு பெண் களுடையது.
பெரியார் செய்யாத புரட்சி என்ன?
இன்றைக்குப் பெண்கள் பங்கு பெறாத துறைகளே இல்லை. பெரியார் விதைத்த விதைகள் அவ்வளவு வலி மையானவை. இந்தியாவிலே ஆண், பெண் சமமான கல்வி தமிழ்நாட்டில் தான் உள்ளது. ஆசிரியர்களாகப் பெண்களையே நியமிக்க வேண்டும் என 1929-லேயே பேசியவர் பெரியார். காவல்துறையிலும், இராணுவத்தி லும் அதிகமான பெண்கள் வர வேண்டும் என 1931-லேயே பேசியவர் பெரியார். காதல் மணம் (1931), கைம்பெண் திருமணம் (1926), மணவிலக்கு உரிமை (1929), சொத்துரிமை (1929), சுயமரியாதைத் திருமணச் சட்டம் (1968) என அவர் பேசாத விசயங்கள் என்ன? செய்யாத புரட்சிகள் என்ன?
இன்றைக்கு இவையனைத்தையும் ஒழித்துக் கட்ட “நீட்” கொண்டு வருகிறார்கள். அனைத்துக் கல்விக்குமே நுழைவுத் தேர்வு கொண்டு வருகிறார்கள்.
எனவே நாம் கடந்து வந்த வரலாற்றை அறிந்தால் தான், வரப் போகும் ஆபத்தையும் உணர முடியும், விழிப்புடன் இருப்போம்”, எனத் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி பேசினார்.
தலைப்பும்! வகுப்பும்!
முன்னதாகத் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் இரா.கோவிந்தன் வரவேற்றுப் பேசினார். மாவட்டத் தலைவர் பூ.சிவக்குமார் தலைமை யேற்றார். தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
விருதுநகர் மாவட்ட தலைவர் கா. நல்லதம்பி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர், சாத்தூர் நகர் மன்றத் துணைத் தலைவர் பா.அசோக், விருதுநகர் மாவட்டச் செயலாளர் தி.ஆதவன். திருவல்லிபுத்தூர் நகரத் தலைவர் வழக்குரைஞர் பகிரதன், திருவில்லி புத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கு.போத்திராஜ், இராஜ பாளையம் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர்கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி “தந்தை பெரியார் – ஓர் அறிமுகம்” எனும் தலைப்பிலும், திராவிடர் கழகக் கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன் “பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புகள்” எனும் தலைப்பிலும், திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்ப மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் “வாழ் வியலே பெரியாரியல்” என்கிற தலைப்பிலும், பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு “நீதிக்கட்சி சுயமரியாதை இயக்க வரலாறு” என்கிற தலைப்பிலும், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” எனும் தலைப்பிலும் வகுப்பெடுத்தனர். சுப.பெரியார் பித்தன் “மந்திரமா? தந்திரமா?” எனும் தலைப்பில் அறிவியல் விளக்க செயல்பாடுகளைச் செய்து காட்டினார்.
சான்றிதழ் வழங்குதல்!
பயிற்சி வகுப்பில் சிறப்பாகக் குறிப்பெடுத்த இராஜபாளையம் சக்திவேல், கோரை நாச்சியார்புரம் வெங்கடேஷ், இராஜபாளையம் முத்து வெங்கடேஷ், இராஜபாளையம் தமிழன் தமிழரசு, முத்தரசன் ஆகிய 5 மாணவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன. இறுதியில் பயிற்சிப் பட்டறையில் பெற்ற பயன்களை மாணவர்கள் எடுத்துக் கூறினர். பங்கேற்ற மாணவர்கள், கழகப் பொறுப்பாளர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டனர். இப்பயிற்சிப் பட்டறையில்
ரூ.25,208 அளவில் நூல்கள் விற்பனை ஆயின.
நிகழ்வில் திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் இரா.சுமதி, திமுக மாவட்ட சிறுபான்மை அணி துணைத் தலைவர் இமாம்சா, திமுக நகரப் பொறுப்புக் குழு உறுப் பினர் உதுமான், ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்குச சான்றிதழ்கள் வழங்கினர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய கழகத் தோழர்களையும், பங்கேற்ற மாணவர் களையும் பாராட்டிப் பேசினார்.
இராஜபாளையம் நகர திராவிடர் கழகச் செயலாளர் இரா.பாண்டிமுருகன் நன்றி கூறினார்.
தொகுப்பு: வி.சி.வில்வம்