கல்வி நிறுவனங்களுக்கு ஏ.அய்.சி.டி.இ. உத்தரவு
சென்னை, நவ.25 அனைத்து கல்வி நிறுவனங்களிலும் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த கருத்தரங்குகள், அது சார்ந்த நிபுணர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என ஏ.அய்.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.அய்.சி.டி.இ.) சார்பில் அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், ஏ.அய்.சி.டி.இ. இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவ னங்களின் இயக்குநர்கள், முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1983இன் கீழ் குழந்தைகள் உள்பட அனைவருடைய மனித உரிமைகளையும் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் பொறுப்பு தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு இருக்கிறது. இந்த ஆணையம் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையை எண்ணி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவலை கொண்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் தாங்கமுடியாத உளவியல் தாக்கத்துக்குள் ளாகிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்களுடைய ஒட்டு மொத்த வளர்ச்சியே சீர்குலைந்து போய்விடுகிறது.
இந்த அச்சுறுத்தலை தடுப்பதில் அரசுகள், நிறுவனங்கள் உள்பட அனைவருக்கும் பங்கு உண்டு. தற்போதுள்ள டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க ஒன்றிய-மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் குழந்தை பாலியல் தொந்தரவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அதன்படி, அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வு, கருத்தரங்குகள், அது சார்ந்த நிபுணர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.