நூல்:“நூற்றாண்டு காணும் ஆளுமைகள் பேரா.க.அன்பழகனார் நினைவுத்தடம்”
ஆசிரியர்: முத்தையா வெள்ளையன்
வெளியீடு:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2022
பக்கங்கள்: 821
விலை: 540/-
இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் முத்தையா வெள்ளையன் அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு பேராசிரியர் அவர்களது முக்கிய நூல்களை மட்டும் தொகுத்து எடுத்துக் கொடுத்துள்ளார்கள். 21 நூல்கள் கொண்ட தொகுப்பாகவும் 821 பக்கங்களில் முத்துக் கோத்தாற்போல் அமைக்கப்பட்டுள்ளது.
திராவிடக் கொள்கை தன்மானம் மட்டுமல்ல. தமிழினத்தின் மானத்தைக் காப்பாற்ற எழுத்திலும், பேச்சிலும், வாழ்விலும், வழிகாட்டுவதிலும் பேராசிரியராக இருந்தவர்.
கல்லூரியிலே பேராசிரியராக இருந்து மாணவச் செல்வங்களைத் தமிழ்ப் பண்பாட்டின் மாண்பு கெடாமல் செதுக்கித் தந்த இந்தப் புதுமைச் சிற்பி கழகக் கண்மணிகளுக்கும் பேராசிரியராக இருந்து அண்ணா வழங்கிய “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” எனும் மூன்று கட்டளைகளுக்கும் பதவுரை, பொழிப்புரைகளைத் தெளிவுரைகளாக இருந்தவர்.
இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தின் கருவூலங்களாக என்றைக்கும் போற்றப்பட வேண்டியவை. இவர் ஏற்றுக் கொண்ட எளிமையான பொது வாழ்வு எல்லோர்க்கும் வழிகாட்டக் கூடியது. அதனால் பேராசிரியர் எழுதிய “கலையும் வாழ்வும்‘‘ – 1945இல் வெளிவந்த நூல் முதல் தொகுக்கப்பட்டுள்ளன. கலை என்பது ஒரு மனிதன் உள்ளத்தில் தோன்றிய உணர்வு – அப்படியே காவிய வடிவிலோ, ஓவிய வடிவிலோ வெளிப்பட்டு மற்றோர் மனிதன் உள்ளத்திலே சென்று பதியுமானால் அதுவே உணர்வுக் கலை. ஒரு மனிதன் உள்ளத்திலே தோன்றிய எண்ணம் அப்படியே தொழில் வடிவிலே வெளிப்பட்டு உருவம் பெற்று மற்றோர் மனிதனுக்கு பயணிக்குமானால் அதுவே பொருள்கலை என்றும் கலையைப் பற்றி எடுத்துரைக்கிறார் பேராசிரியர்.
முதல்முதலாக மதத்திற்காக – கலையைக் கையாளத் தொடங்கியவர் சீத்தலைத் சாத்தனாரே. அதற்குப் பின் மதக் கருத்து, இலக்கிய உருவம் பெறுவதிலே போட்டியிடத் தொடங்குகிறது.
கலையானது சமுதாய வளர்ச்சிக்கே தவிர பிற நோக்கத்திற்குக் கலையில் இடமிருக்கத் தேவையில்லை என்ற எண்ணத்தினாலேயாம். மிக வளர்ச்சி நோக்கமே, அங்கே அரசியல் கட்டுப்பாட்டிற்கு இயைந்து கலைவளர்க்க வேண்டும் என்கிறார் பேராசிரியர்.
“தொண்டா? துவேஷமா?’’ என்ற நூலில் நாம் எந்த மதத்தவரையும் அவருடைய மதத்திற்காக வெறுக்கவில்லை. ஆதரிக்கவுமில்லை. எந்த மதத்தவர்களிடையேயும் விரோத மூட்டவில்லை. எம்மதமும் எமக்குச் சம்மதம். அவை பகுத்தறிவுக்கு ஒத்து வருகின்ற அளவு வரையில் மூடநம்பிக்கைகளையும், கற்பனைகளையும் பரப்புவது ஹிந்து மதமாயினும், இஸ்லாமாயினும், சமணமாயினும், கிறித்துவமாயினும், சைவமாயினும் அந்த அளவுக்கு எம்மாலியன்ற வரை அவற்றின் குறைகளை உணர்த்தி வருகிறோம்.
சமரச சன்மார்க்க ஞானிகளும், சிந்தனைச் செல்வர்களான சித்தர்களும் கண்டறிந்து பாடிய உண்மைகளை, நாம் பழக்கத்திலும் பண்பிலும் கொண்டுவரும்படி, பகுத்தறிவை வளர்க்கிறோம். இயற்கையாகவே அரண் செய்யும் திராவிடப் பண்பாட்டைக்காத்து வளர்த்து வருகிறோம். எம்மதத்தினரால் உரைக்கப்பட்டதாயினும், நாமறியும் எந்த நல்ல கொள்கையையும் நாம் ஏற்கத் தயங்கவில்லை. நாம் எப்படி மத விரோதிகள் ஆவோம்? என்று வினவுகின்றார் பேராசிரியர் அவர்கள்.
திராவிட மக்கள் பல வகையாலும் பரிதாபமிக்க நிலையிலுள்ளனர். இன்றைய திராவிடன் உழைப்பால் வாடி, ஊதியமின்மையால் ஏங்கி உணவின்றி நொந்து, பக்திப் போதையால் புரட்சி உணர்ச்சி மங்கி, ஆரிய மாயையில் அறிவிழந்து, கல்வி இன்மையால் கண் பார்வை கெட்டு, பரிதாபத்திற்குரிய பஞ்சையாய் இருக்கிறான். இருக்கிறானா? அல்ல, அல்ல நாளும் மடிகிறான் என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் பேராசிரியர்.
“மானத்தோடும் வாழ்வோம்!” என்ற நூலில் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்ட தோழர்கள் எவ்வளவு உறுதி காட்டினார்களோ, அந்த உறுதி இன்றைய இளைஞர்களிடம் மெல்ல மெல்லக் கரைந்து போயிருக்கிறது. அன்றைக்குத் தமிழர் நாம் என்ற உணர்வு, நம் தாய்மொழி தமிழ், அதைக் காக்கும் கடமை நமக்கு உண்டு என்கிற அடிப்படையில் பிறந்த உணர்வு நமக்கிடையிலே ஜாதி வேறுபாடு கிடையாது, கூடாது. பார்ப்பனனும் உயர்ந்தவனல்லன், தாழ்த்தப்பட்டவனும் இழிவானவனல்லன், எவரையும் பிறவியினால் உயர்வு என்றும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்ற அந்த சுயமரியாதை உணர்வு நம் இயக்கத் தோழர்களிடம் ஓர் உறவு, கட்டுப்பாடு, ஒரு நெருக்கமான தோழமை வளர்ந்திருந்தால் – நம்மில் ஒருவருக்கு ஒரு துன்பம் தொல்லை வருகிறது என்று சொன்னால், அனைவரும் தங்களுக்கு வந்ததாகக் கருதுகிற ஒரு மனப்பான்மையை அன்றைக்குப் பெற்றிருந்ததை நான் இன்று எண்ணிப் பார்க்கிறேன் என்று தேச ஒற்றுமை¬யும் சுயமரியாதை எண்ணத்தையும் எடுத்துக் கூறுகிறார்.
“இன உணர்வும் தேசியமும்“ என்ற தலைப்பில் கோவை அண்ணா சிந்தனையாளர் பேரவையில் பேராசிரியரின் அரிய உரையில், உண்மையான ‘தேசியம்‘ இனப்பற்றிலிருந்து முகிழ்ப்பது – மலர்வது இயல்பான இனப்பற்றுக்கு இடமில்லாதபோது தேசியம் முகிழ்க்காது – மலராது; கருகிய மொட்டு ஆகும்.
ஒரு நாட்டின் பெருமையும் சிறப்பும் அந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் இயல்பான இன உணர்வு வளரவும் நிலைக்கவும் எந்த அளவு அந்த நாடு இடந்தருகிறது என்பதைப் பொறுத்தே உருவாகிறது என்று வரையறை தருகிறார்.
“மாமனிதர் அண்ணா” என்ற நூலில் தமிழ்நாட்டின் வரலாற்றில், இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவராக விளங்குபவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெற்றிருந்த பெரும் புலமையால் தமது கூர்ந்த நுண்ணறிவைப் பயன்படுத்தி பேச்சிலும், எழுத்திலும் இணையற்றவராக விளங்கி, சமுதாய சீர்திருத்தம், பகுத்தறிவு இயக்கம், தமிழ்மொழி வளர்ச்சி, ஹிந்தி ஆதிக்க எதிர்ப்பு, தமிழ்க்கலை மறுமலர்ச்சி, தமிழ் உணர்வு, மக்களாட்சி உரிமைகள், பொருளியல் சமநீதி இலட்சியம், மாநில சுயாட்சி ஆகிய அத்தனை இலட்சியங்களும் மக்களிடம் இடம்பெற – வெற்றி பெற பாடுபட்டார்.
அறிஞர் அண்ணா, தமிழ்நாட்டின் எழுச்சியின் சின்னமாக, மிகப் பெரிய மாற்றத்தின் முன்னோடியாக, அறிவுச்சுடராக, அரசியல் புயலாக ஒரு காலக்கட்டமாகவே வாழ்ந்தார்கள். அவர் விட்டுச் சென்ற பணியை அவரது அடிச்சுவட்டின் வழி இன்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தொடரப்படுகிறது என்பதை எடுத்துரைக்கிறார் பேராசிரியர் அவர்கள்.
“தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்” என்ற நூல் தந்தை பெரியார் பற்றி உரையாற்றும்போது சமுதாயத்தில் பிராமணியச் செல்வாக்கு முதலில் பல்லவர் ஆட்சியிலும், பின்னர் இடைக்கால சோழர் ஆட்சியிலும் வேரூன்றி ஏராளமான சதுர்வேத மங்கலச் சாசனக் கட்டளைகளுடன் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தலாயிற்று. “வருணாசிரம – மனுதர்ம நெறி” தமிழர்களை ஒன்றுபட முடியாத அளவுக்குப் பிரித்து வைத்ததுடன், குலத்தையே ஜாதியாக நம்பும் பேதம் வளர்க்கச் செய்ததுடன் – ‘இழிபிறவி’ என்னும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களான – தம்மினும் இழிபிறவியாகப் பஞ்சமர்களைக் கருதச் செய்தது. வரலாற்று அடிப்படையில் கூறப்படும் ஒரு செய்தி – ஆரிய மதச் சாத்திர ஜாதி எண்ணங்களை அடியோடு ஏற்க மறுத்தவரே தீண்டப்படாதவராக ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் என்பவராவார்.
வரலாற்று அடிப்படையில் ஒரு தனி இனமாக, தனி நாட்டுக்குரியவராக, தனி ஆட்சி நடத்துபவராக, தனி மொழி, கலை, நாகரிகம், இலக்கியம், இலக்கணம், வாழ்க்கை நெறி கொண்டவர்களாவர். பல்வேறுபட்ட குல (கூட்ட) மக்களாக வாழ்ந்த நிலையை ஏதுவாக்கி வருணாசிரமக் கொள்கையைப் புகுத்தி – தமிழர்களைச் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் தாழ்த்திடும் நிலையை உருவாக்கினர்.
பிறப்பால் பேதம் கற்பித்தல், மதத்தால் மூடநம்பிக்கை வளர்த்தல், வைதிகத்தால் சடங்குகளைச் செய்தல், இதிகாச புராண சாத்திரங்களை நம்புதல், புரோகிதத்தின் செல்வாக்குக்குப் பணிதல், வடமொழிக்குத் தனி மகிமை அளித்தல், இப்படிப்பட்ட ஒவ்வொன்றையும் அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எடுத்து ஒழிப்பதிலே – அதற்கான மனமாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துவதிலே பெரியார் வெற்றி கண்டார்.
“அறிவில் வயதில் முதியவராவார் என்றும் வாய்மைப் போருக்கு இளையார்” என்னும் புரட்சிக்கவிஞரின் போற்றுதலுக்குப் பெரியார் உரியரானார். எனவே, பெரியார் அவர்களால்தான் இன்றையத் ‘தமிழன்’ உருவாகியிருக்கிறான். தமிழனாக உருவாகாத, உணர்ச்சி பெறாத் தமிழர்களும் இருக்கிறார்கள். எனினும், பெரியார் இல்லையேல், உணர்ச்சியுள்ள தமிழனே இருந்திருக்க மாட்டான் எனலாம்’’ என்று குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் அவர்களின் மொத்த 51 நூல்களில் சில குறிப்பிட்ட 21 நூல்களை மட்டும் தேர்வு செய்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அவரது நூற்றாண்டு விழாவின் சிறப்பாக வெளியிட்டுள்ளது. பதிப்பாசிரியர் முத்தையா வெள்ளையன் அவர்கள் மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்து இனமானப் பேராசிரியரை நம் கண்களுக்கு எதிரே அமர்த்தி நமக்கு சுயமரியாதை உணர்வையும், பகுத்தறிவையும் இந்த நூலில் உணர்த்துகிறார்.
இனமானம் – தன்மான உணர்வு வேண்டும். அந்த இனமான – தன்மான உணர்வூட்டுவதையே இலக்காகக் கொண்டு தன்னுடைய மாணவப் பருவம் முதல் மறையும் வரை கொள்கை தவறாது உழைத்த இனமானப் பேராசிரியரின் வாழ்வு அனைவருக்குமான பாடம் ஆகும்.