சென்னை,பிப்.25- சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வுள்ளது.
சென்னையில் பொது இடங்களில் கழிப்பறை வசதியை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி மண்டலம் 5, 6 மற்றும் 9ஆவது மண்டலத்தின் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்படுத்துதல், திருப்பி அளித்தல் என்ற முறையின் கீழ் கழிப்பறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து ஒப்பந்தம் கோரி இருந்தது.
ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகளை மேற் கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 362 இடங்களில் ரூ.430.11 கோடி மதிப்பில் பொது மக்கள், தனியார் பங்களிப்புடன் பொதுக் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. இதற்கான பணிகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், “5ஆவது மண்டலத்தில் 51 கழிப்பறைகள் புதிதாக கட்டப்படவுள்ளன. 71 கழிப்பறைகளில் சிறிய அளவில் மேம்பாட்டு பணியும், 105 கழிப்பறைகளில் பெரிய அளவில் மேம்பாட்டு பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
6ஆவது மண்டலத்தில் 36 கழிப்பறைகள் புதிதாக கட்டப்படவுள்ளன. 17 கழிப்பறைகளில் சிறிய அளிவில் மேம்பாட்டு பணியும், 81 கழிப்பறைகளில் பெரிய அளவில் மேம்பாட்டு பணியும் மேற்கொள்ளப்படவுள்ளன. 9ஆவது மண்டலத்தில் மெரினா கடற்கரையில் 3 கழிப்பறைகள் புதிதாக கட்டப்படவுள்ளன. 8 கழிப்பறைகளில் சிறிய அளவிலான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும். ஓராண்டு காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பாடு மற்றும் கட்டு மான பணிகள் நிறைவு பெற்றவுடன் கழிப்பறைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த நவீன கழிப்பறைகளில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வசதி, சிசிடிவி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு உள்ளிட்டவை இருக்கும்” என்று அவர் கூறினார்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறை கிணறு கண்டுபிடிப்பு
விழுப்புரம், பிப்.25- விழுப்புரம் அருகே தென் பெண்ணை ஆற்றில் சங்ககால உறைக்கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் மற்றும் பிடாகம், குச்சிப்பாளையம் – தென்பெண்ணை ஆற்றில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன், பட்ட ஆய்வு மாணவர்கள் இமானுவேல், கோபி, வரலாற்றுத்துறை மாணவர்கள் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூமியின் மேற்பரப்பில் 25க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் இரு ந்ததை கண்டறிந்தனர். இதில் 9 உறைகிணறுகள் நல்ல நிலையில் உள்ளன. மற்ற உறைகிணறுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மண் அரிப்பு ஏற்பட்டதால் உறைகிணறுகள், பூமியின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், பொதுவாக உறைக் கிணறுகள் 2 வகைகளாக உள்ளன. ஒன்று சொருகு வகை உறைக்கிணறு, மற்றொன்று அடுக்கு வகை உறைக்கிணறு. இங்கு கண்டறிந்த உறைகிணறுகள் அடுக்கு வகையை சேர்ந்தவை. மிகவும் வறட்சியான காலங்களில் இந்த உறை கிணறுகள் மக்களின் தண்ணீர் தேவையை பெரிதும் பூர்த்தி செய்து வந்துள்ளன. தண்ணீரை தெளிய வைக்கவும், மணல் சரியாமல் இருக்கவும் இது போன்ற அடுக்கு வகை உறைக் கிணறு அமைப்பை அக்காலத்தில் ஏற்படுத்தியுள் ளனர். இவற்றிலிருந்து மக்கள் சுகாதாரமான குடிநீர் பெற்றனர். இந்த உறைக்கிணறுகள் சங்க காலத்தை சார்ந்த தாகும். இதன் மூலம் இப்பகுதியில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. மேலும் இங்கே இருக்கும் உறைக்கிணறுகள் அழிவின் விளிம்பில் இருப்பதால் இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். அரசு அருங்காட்சி யகத்தில் இந்த உறைக்கிணறுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். தென்பெண்ணையாற்றில் சங்க கால நாகரீகம் சிறந்து விளங்கி இருக்கிறது. இதைப் பற்றிய தொல்லியல் ஆய்வு கள் இன்னும் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டால் நடுநாட்டு பகுதியில் சங்ககால மக்களின் பண்பாடுகளை வெளிக்கொணரலாம் என்று அவர்கள் கூறினர்.
இதுதான் கடவுள் சக்தியா?
மேல்மலையனூர் தேரோட்ட விழாவில் 2 பக்தர்கள் உயிரிழப்பு
விழுப்புரம், பிப். 25- விழுப்புரம் மாவட்டம் மேல்மலை யனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழாவை யொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், சுட்டெரித்த வெயிலில் மயங்கி விழுந்து ஒருவரும் பலியாகினர்.
அது பற்றிய விவரம் வருமாறு:- வேலூர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் விநாயகம்(வயது 60). இவர் தேரோட்டத்தை காண்பதற்காக மேல்மலையனூருக்கு வந்தார். தேரை வடம்பிடித்து இழுத்தபோது பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் நெட்டி தள்ளிக்கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய விநாயகம், கீழே விழுந்தார். இதை கவனிக்காத பக்தர்கள், அவரை மிதித்து சென்றனர். இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் தேரோட்டத்தின்போது வெயில் சுட்டெரித்ததால் மேல்மலையனூர் அருகே உள்ள கோடிக் கொல்லை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(52) என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவர்கள் 2 பேரது உடலையும் வளத்தி காவல் துறையினர் கைப்பற்றி உடற் கூராய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.