புதுடில்லி, பிப். 25- அதானி குழுமம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று (24.2.2023) தள்ளுபடி செய்தது.
அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரிக்க குழு அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பாக மூடி முத் திரையிடப்பட்ட உறையில் பதில் மனுவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உச்சநீதிமன்றமே குழு வில் இடம்பெறும் உறுப்பினர் களை முடிவு செய்யும் என வழக்கை கடந்த வாரம் ஒத்தி வைத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அதானி குழுமம் -ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை ஊட கங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் எம்.எல். சர்மாகூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் மாண்பையும், தீர்ப்பையும் விமர்சிக்க கூடிய வகையில் உள்ள ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்தி களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ‘‘இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு எதி ராக எந்தவித தடை உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை.
அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் தொடர்பான வழக்கில் கூடிய விரை வில் உரிய உத்தரவுகளை பிறப்பிப் போம்’’ என்று தெரிவித்தார்.