சென்னை, மார்ச் 3 தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 காட்சிப் பதிவுகள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. முக்கியமாக இந்த காட்சிப் பதிவுகள் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த தமிழ்நாடு காவல்துறை அந்த காட்சிப் பதிவுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது:-
சமூக வலைதளங்களில் 2 போலி காட்சிப் பதிவுகள் பரவி வருகிறது. அந்த காட்சிப் பதிவுகள் பீகார் தொழி லாளர்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன. அவை தவறானவை, போலியானவை. இரு காட்சிப் பதிவுகளும் ஏற்கெனவே முன்பு நிகழ்ந்த இருவேறு நிகழ்வுகளை திரித்து வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு பதிவு திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு பதிவு கோவை யில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். இதுதான் உண்மை. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான காட்சிப் பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.