குருதி தேவை என்றால்
குலத்தைப் பார்ப்பதுண்டா?
கண்கொடை தேவை என்றால்
கடைஜாதி என்று வெறுப்பதுண்டா?
சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு
சிவப்பு, கருப்பு மனிதரைத் தேடுவதுண்டா?
இதய மாற்றுச் சிகிச்சைக்கு
இனத்தைத் தேடி ஓடுவதுண்டா?
பார்ப்பனர் என்றால் எல்லோருக்கும்
பாகுபாடு இன்றி ஒரே மாதிரிக் குருதியா?
பிற்படுத்தப்பட்டோர் எல்லோருக்கும் – ஒரே
பிரிவு ரத்தம் என்பது உண்மையா?
தாழ்த்தப்பட்டோர் என்றால்
தானம் வேண்டாம் உறுப்பு என்பாரோ?
சிறுபான்மையோர் என்றால்
சிறுநீரக உறுப்பில் மாற்றமுண்டோ?
சுயநலம் என்று வரும்போது
சுயபிரகாசம் போல் ஜொலிப்பது ஏன்?
மதங்களை, ஜாதிகளை எல்லாம்
மறந்தும் நினைப்பதுண்டா?
மருந்து மாத்திரைகளில்
மாச்சரிய முத்திரைகள் உண்டா?
பார்ப்பனர் மட்டும்
பத்து மாதத்தில் பிறந்தவர்களா?
பார்ப்பனரல்லாதாரெல்லாம்
குறைப் பிரசவங்களா?
மனித குலம் ஒன்றே என்ற
மனப்பான்மை இல்லாதது ஏன்?
இதைத்தான் கேட்டார்
ஈரோட்டில் பிறந்த எம் பெரியார்!
ஒரு மண்ணுக்கு மட்டும் சொந்தமல்ல
உலகப் பந்துக்கே சூரியன் அவர்!
உலகய மயமாகிறார் பெரியார்
பெரியார் உலக மயமாகிறார்!
“மண்டைச் சுரப்பை உலகுதொழும்!”
மானமிகு புரட்சிக்விஞர் சொன்னார்.
எத்தனைத் தொலைநோக்கு?
ஏற்றிப் போற்றுவோம்.
ஈடில்லா ஒரே உலகத் தலைவர்
எந்தைப் பெரியாரன்றோ!
பெரியார் மறையவில்லை
பேரண்டப் பேரொளியாய் வாழ்கிறார்!
வாழ்க எம்மான்
வையத்து நாட்களெல்லாம்!
– கவிஞர் கலி.பூங்குன்றன்
