சென்னை, மார்ச் 5- மானியத்தில் உரம் பெற ஜாதிப் பெயரை கேட்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-
விவசாயிகள் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசு, மானிய விலையில் உரங்களை வாங்க விவசாயிகள் ஜாதி குறித்த விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உரம் வாங்குவதற்கு ஜாதி குறித்த விபரத்தை தெரிவிக்க வேண்டுமென்ற அவசியம் என்ன? எதற்காக பாஜக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது? எதிர்காலத்தில் ஜாதிய அடிப்படை யில் தான் உர மானியம் வழங்க பாஜக திட்டமிடுகிறதா? ஜாதி குறித்த விபரத்தை கேட்ப தன் மூலம் பாஜக அரசு விவசாயிகள் மீது மேலும் தாக்குதலை தொடுத்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மானிய விலையில் உரங்களை விவசாயிகள் வாங்க ஆதார் அட்டை நகலை கொடுத்து பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பிப். 21 அன்று ஆதார் நகலுடன் விவசாயி தனது ஜாதி பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகள் உரத்தை வாங்குவதற்கு சிட்டாவையும், ஆதார் நகலையும் காண்பித்தால் போதும். ஜாதி குறித்த விபரத்தை ஏன் தெரிவிக்க வேண்டும்? தற்போது இந்த தகவலை உரக்கடைக்காரர்கள் உரம் வாங்கச் செல்லும் விவசாயிகளிடம் கூறும் போது விவசாயிகள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்து வருகிறார்கள். எனவே, அந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும், ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.