சென்னை, மார்ச் 6- ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மடிப்பாக்கத்தில் திமுக பெண் கவுன்சிலர் மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ் கட்டளை, திருவள்ளுவர் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் பண்டரிநாதன். இவரது மனைவி பிரேமலதா இவர் தாம்பரம் மாநகராட்சி 18ஆவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.
இவர்களது மகன் கோபிநாத் (28) பி.இ. பட்டதாரி. நேற்று முன்தினம் 4.3.2023 அன்று இரவு நீண்ட நேரமாகியும் அவரது அறைக் கதவு திறக்கப்படாததால் 5.3.2023 அன்று அதிகாலை பிரேமலதா சென்று பார்த்துள்ளார். அப்போது கோபிநாத் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந் ததை கண்டு அதிர்ந்தார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த மடிப்பாக்கம் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இவர் ஆலைன் ரம்மி சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண் டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவரது அறையில் சிக்கிய கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் தாம்பரம் அருகே இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தால் தற்கொலை செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.