ஒற்றைப் பத்தி

2 Min Read

விஜயபாரதம்?

இந்தப் பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஒரு வார இதழை நடத்துகிறது – அதில் வெளிவந்த கேள்வி – பதில்களுக்கு நமது கேள்வியும், பதிலும்!

எந்த நிலையிலும் பொங்கல் பண்டிகையை மத சார்பற்ற பண்டிகையாக மாற்ற முடியாது. எந்தவொரு கிறிஸ்தவனோ, முஸ்லிமோ தனது வீட்டின் முன்பு பொங்கலிட்டு, சூரியனுக்குப் படைப்பதில்லை. காளைகளையோ, பசுக்களையோ பூஜை செய்து வழிபடுவதில்லை. கூட்டமாக பொங்கல் செய்து சாப்பிடுவது மட்டும் பொங்கல் பண்டிகையல்ல.

சிந்தனை: தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழாவை ‘சங்கராந்தி’ என்று சமஸ்கிருதமாக்கி, அதற்குள் பார்ப்பனீய ஹிந்து மதச் சரக்கைத் திணித்தவர்கள் யார்?

***

கேள்வி: தென் மாவட்டங்களில் பல கோவில்களில் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் தரிசனம் செய்யும் வழக்கம் உள்ளதே?

பதில்: முற்காலத்தில் கோவில் செல்லும் பக்தர்கள் ஆறு, குளம், கடல்களில் நீராடி அகத் தூய்மையுடன் இறைவனைத் தரிசிக்கும் வழக்கம் இருந்து வந்தது. அதனுடைய தொடர்ச்சியே தற்போதும் அக்கோவில்களில் வழக்கமாக இருக்கிறது.

சிந்தனை: அது என்ன முற்காலத்தில்? இக்காலத்தில் இல்லாமல் போனது ஏன்? பல கோவில்களில் அந்த வழக்கம் இருந்தது என்றால், மற்ற கோவில்களில் நீர் நிலைகளில் நீராடாமல் – அதாவது அகத்தூய்மை இல்லாமல் இறைவனைத் தரிசிக்கலாமோ!

வாய்க்கு வந்தது எல்லாம் ஆள் ஆளாக்கு உளறுவதுதான் ஹிந்து மதமோ!

***

கேள்வி: கற்பக விருட்சம் என்றழைக்கப்படுவது எது?

பதில்: முற்காலத்தில் அனைத்தையும் தருவது கற்பக விருட்சம் என்றழைக்கப்பட்டது. தற்போது பனை மரமும், தென்னை மரமும் அந்த இயல்பைப் பெறுகின்றன. அதன் அனைத்துப் பாகங்களும் ஏதாவது ஒரு வகையில் பயன்படுகின்றன.

சிந்தனை: முற்காலத்தில் அனைத்தையும் தருவது கற்பக விருட்சமாம்! சரி, இக்காலத்தில் அது எங்கே போனதாம்? பனை மரமும், தென்னை மரமும் கற்பக விருட்சம்தான் என்று கூறும் துணிவில்லையே விஜயபாரதத்துக்கு!

வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும்தான் ஏதோ ஒரு வகையில் பயன்படுகின்றன. அதையும் கற்பக விருட்சத்தில் சேர்த்துக் கொள்ளலாமா?

***

கேள்வி: கோவிலுக்குக் காணிக்கையாக வந்த வேஷ்டி, சேலைகளை நாம் பயன்படுத்தலாமா?

பதில்: அவைகளை உரிய பணத்தை செலுத்தி வாங்கி அணியலாம். கோவில்களிலிருந்து எதைப் பெற்றாலும் அதற்குரிய விலையைச் செலுத்துவது அவசியம்.

சிந்தனை: இதற்குப் பதில் கூறுவது காஞ்சி சங்கராச்சாரியாராகவிருந்த ஜெயேந்திர சரஸ்வதிதான்.

”கோவில்களுக்குப் போவது ஒரு வகை ஃபேஷன்; பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது.”

(1976, மே மாதத்தில் காஞ்சிபுரத்திலே நடைபெற்ற அகில இந்திய ஹிந்து மாநாட்டில் – ஜெயேந்திர சரஸ்வதி கூறியது).

‘விஜயபாரதம்’ பதில் சொல்லுமா?

–  மயிலாடன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *