சென்னை, ஆக. 22- ரேசன் கடையில் பொருட்கள் வாங்க அசல் ரேசன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 20.8.2026 அன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் ப.வெங்கடரமணன் பேசியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 38,438 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதிகபட்சமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1,495 கடைகள் இயங்கி வருகின்றன. இதற்கு, அடுத்தபடியாகச் சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ரேசன் பொருள் வாங்க, அந்த கடைக்குத் தான் போக வேண்டும் என்று இல்லை. அருகில் இருக்கும் எந்த கடையிலும் வாங்கிக் கொள்ளலாம். சிலர் கடை வரை வந்து, ரேசன் கார்டு மறந்து விட்டோம் என்று சென்று விடுகின்றனர். கார்டு soft copy இருந்தால் போதும், அட்டை நம்பர் இருந்தால் கூட போதும்.
வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் மற்றும் வாடகை வீடு மாறிச் செல்பவர்களுக்கு அரசின் இந்த நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், எந்தக் கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்ற இந்த வசதி குறித்து இன்னும் பலருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் சட்டப்பேரவையின் வாயிலாக இதனை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி
– நேர்முகத்தேர்வு எப்போது?
டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, ஆக.22- தடை தற்போது நீங்கியுள்ள நிலையில், நேர்முகத்தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 2,176 பேரில் 785 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு 2018 ஜூன் 10 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. விதிகளின்படி 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்காமல் வெறும் 33 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் பிறகு உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டது. இதனால் நியமன நடைமுறைகளில் சுமார் 8 ஆண்டுகள் தடை நீடித்தது. இந்த தடை தற்போது நீங்கியுள்ள நிலையில், நேர்முகத்தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
