தக்க ஆதாரங்களுடன்அம்பலப்படுத்துகிறது
‘தி கார்டியன்’ லண்டன் ஏடு
லண்டன், மார்ச் 9- லண்டனிலிருந்து வெளியாகின்ற ‘தி கார்டியன்’ ஏடு ஜவகர்லால் நேரு மீதான பிரதமர் மோடியரசின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறான வையாக உள்ளன என்று தக்க ஆதாரங்கள்மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் ஜவகர்லால் நேரு மீதான மோடி அரசின் குற்றச்சாட்டுகளை அன்றைய காலகட்ட காஷ்மீர் கடிதங்கள் பொய்யாக்குவதாக ‘தி கார்டியனில்’ தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் நேரு தனது ராணுவ மூத்த அதிகாரியின் அறிவுரைப்படி செயல்பட்டார் என
‘தி கார்டியன்’ குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு தனது ராணுவ மூத்த அதிகாரி அறிவுறுத்தலின்படியே பாகிஸ்தானுடன் 1948ஆம் ஆண்டு நடைபெற்ற போரை நிறுத்திக்கொண்டார்.
காஷ்மீரின் சிறப்புத் தகுதியை கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. பாகிஸ்தானியர் களிடமிருந்து கூடுதல் நிலப்பரப்பை கைப்பற்றாமல் நேரு தவறு செய்துவிட்டதாகவும் பாஜக அரசு குற்றம் சாட்டியது.
1948ஆம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடை யான போரில், இந்தியா – பாகிஸ்தானை வெல்லும் நிலையில் இருந்ததாகவும், அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக நேரு அரசு, அய்க்கிய நாடுகள் சபையை அணுகியது மிகப்பெரிய தவறு என தற்போதைய உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், நேரு மீதான பாஜகவின் இந்த குற்றச்சாட்டு களை, பல ஆண்டுகளாக பராமரித்து வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் கடிதங்கள் பொய்யாக்கு வதாக ‘கார்டியன்’ அறிவித்துள்ளது.
நேரு தனது மூத்த ராணுவ அதிகாரியால் 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டதை அந்தக் கடிதங்கள் சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகான நேரு ஆட்சியில், ராணுவ ஜெனரல் சர் பிரான்சிஸ் ராபர்ட் ராய் புச்சரின் கடிதங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
1948ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நேருவுக்கு புச்சர் எழுதிய கடிதத்தில், ‘‘காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். ஒட்டுமொத்த ராணு வத்தையும் துடிப்புடன் இயங்கவைப்பது சாத்தியமில்லை. ராணுவ வீரர்கள் பலவீனமாகவும், இளம் வீரர்கள் போதிய பயிற்சி இன்றியும் உள்ளனர். ராணுவ வீரர் களுக்கு உயிரூட்டும் வகையில் தற்போது ஓய்வு தேவைப்படுகிறது” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதற்கு நேரு அளித்த பதில் கடிதத்தையும் ‘தி கார்டியன்’ சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, ‘‘1948 டிசம்பர் 23 இல் நேரு எழுதிய பதில் கடிதத்தில், தற்காப்பு நிலையில் இருக்கும் பாகிஸ்தானை எஞ்சியுள்ள ராணுவ வீரர்களைக் கொண்டு எதிர்ப்பது அரிது என்பதை புரிந்துகொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீரின் வான்வழிப் பரப்பில் குண்டு களை வீசித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட் டுள்ளதாக வந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் தனது சாலை அமைப்பை விரிவாக்கம் செய்து இந்தியாவுக்கு எதிராக பலத்தைப் பெருக்கி வருவதாகவும் தகவல் வெளியாகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 28 தேதியிடப்பட்ட புச்சரின் பதில் கடிதத்தில், ‘‘பாகிஸ்தானின் சாலை அமைக்கும் பணிகளைத் தடுக்க ராணுவ நடவடிக்கை எடுக்க முடியாது என்று நான் கருதுகிறேன். இந்தப் பிரச்சினைக்கு அரசியல் அணுகு முறையை நான் பரிந்துரைக்கிறேன்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்துக்காக நேரு அய்.நா. சபையை அணுகியதன் விளைவாக 1949 ஜனவரி 1ஆம் தேதி பாகிஸ்தான் உடனான போர் முடிவுக்கு வந்தது.
இந்தக் கடிதங்கள் மூலம் இந்திய ராணுவ மூத்த அதிகாரியின் அறிவுறுத்தலின்படியே நேரு செயல்பட் டது உறுதியாகியுள்ளதாக ‘தி கார்டியன்’ விளக்கியுள்ளது.
காஷ்மீரின் இந்தக் கடிதங்களை குறிப்பாக புச்சர் எழுதிய கடிதங்களை, அபாயகரமானது எனக் குறிப் பிட்டு மோடி அரசு வெளியிடாமல் பாதுகாக்க முயற்சிப்ப தாக கடந்த மாதம் ‘தி கார்டியன்’ விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.