‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் (காணொலி) ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தக ஆய்வுரை – முனைவர் சுபாஷினி

10 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மலேயாவில், மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருடைய
சுயமரியாதைத் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்றார்!
1929 ஆம் ஆண்டிலேயே மலேயாவிலேயும்
சுயமரியாதைத் திருமண முறை பரவலாகி இருந்திருக்கிறது!
‘ராமசாமி’ என்ற பெயரைப் பார்த்து, ‘சாமியார்’ என்று நினைத்து ‘அருள்வாக்கு’ கேட்ட பெண்கள்!

சிங்கப்பூர், ஆக.18 மலாக்கா தம்பான் பகுதியில், 30.12.1929 அன்று, மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருடைய சுயமரியாதைத் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொள்கிறார். அந்தக் காலகட்டத்தில், மலேயாவிலேயும் சுயமரியாதைத் திருமண முறை பரவலாகி, இருந்திருக்கிறது. அந்தத் தாக்கம் அந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்றார் முனைவர் சுபாஷினி அவர்கள்.

‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின்
359 ஆவது நிகழ்வு

கடந்த 18.7.2026 அன்று சிங்கப்பூரில்  ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவினரின் 359 ஆவது நிகழ்வாக ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தகத்தின் ஆய்வுரையினை ஜெர்மனியிலிருந்து காணொலிமூலம், முனைவர் சுபாஷினி அவர்கள் நிகழ்த்தினார்.

அவ்வாய்வுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அய்யா அருண் என்பவர் ஈப்போவில் மிக முக்கிய மான ஒருவர். அவருடைய வீட்டில் மதிய உணவு; அதற்குப் பிறகு அங்கிருந்து பெரியார் அவர்கள் ரயில் வண்டியில் கோலாலம்பூருக்குச் செல்கின்றார். ஈப்போ – கோலாலம்பூர் – சிங்கப்பூர்.

பெரியாரைச் சந்தித்து, பழங்களைக்
கூடை கூடையாகக் கொடுக்கிறார்கள்!

24, 25, 26 ஆகிய மூன்று நாள்கள் வரிசையாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  ஒரு நாள் கூட இடைவெளி கிடையாது. அவர் ரயிலில் செல்லும்போது, ரயில் நிலையத்தில், ரயில் நிற்கும்போது  மக்கள், பெரியாரைச் சந்தித்து, பழங்களைக் கூடை கூடையாகக் கொடுக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில், ஒரு ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் நிற்கும். அந்தச் சமயத்தில், நிறைய பேர் சந்திக்கிறார்கள். அப்போது ரயில் கோலாலம்பூரில் நிற்கிறது. ராமச்சந்திரா என்பவரின் வீட்டிற்குச் சென்று, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, திரும்பவும் ரயில் பயணத்தைத் தொடருகிறார்.  பிறகு, ரயில் சிங்கப்பூரைச் சென்றடைகிறது.

சிங்கைக்கு காலை 7 மணிக்கு, 25ஆம் தேதி, டிசம்பர் மாதம் – அதாவது கிறிஸ்மஸ் அன்றைக்குப் போய்ச் சேருகிறார். ரயில் நிலையத்தில், ஏராளமான மக்கள் வந்திருக்கிறார்கள். பெரியார் அவர்களை வரவேற்பதற்காக, வெறும் தமிழர்கள் மட்டுமல்ல, அய்ரோப்பியர்கள், சீனர்கள், ஜப்பானியர், மலாயக்கா ரர்கள் உள்பட. அதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழவேள் கோ.சாரங்கபாணி!

ஏனென்றால், அந்த அளவுக்கு அங்கே பணிகள் நடந்திருக்கிறது.  ஒரு விளம்பரத்தை ஏற்பாடு செய்தி ருந்தார்கள் என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் திரு. கோ.சாரங்கபாணி அவர்களுடைய பணிகள் தான். இப்பொழுது சாரங்கபாணி அவர்கள் பற்றி நான்  சொல்லவேண்டும்.

சிங்கைக்குப் பெரியார் அவர்கள் ரயிலில் சென்று இறங்கும்போது, பேண்ட் வாத்தியங்கள் இசை முழங்க, 300–க்கும் மேற்பட்டவர்கள் மாலை போட்டிருக்கிறார்கள். பிறகு பெரியார் அவர்கள் பயணிக்கின்ற வாகனத்தைத் தொடர்ந்து  200 மோட்டார் வாகனங்கள் தொடர்ந்து வந்ததாம். 1929 இல் இது நடந்திருக்கிறது என்றால், நினைத்துப் பாருங்கள். அதாவது ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு.

பெரியார் பயணித்த வண்டிக்கு முன் சென்ற வண்டியில், பேண்ட் வாத்தியக்காரர்கள் சென்றனர்.  வண்டி ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, கடைகள், வாச லில் பன்னீர் தெளிக்கின்றார்கள். பூக்களைக் கூடை கூடையாக அள்ளி வீசுகின்றார்கள். வண்டியின் முன்புறம் விழுந்து வணங்குகின்றார்கள். இதெல்லாம் யோசிச்சு பார்க்க முடியுமா? பெரியார் நடந்து வருகிறார், வாகனத்தில் செல்லும்போது, அவருடைய வண்டியைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள். இவையெல்லாம் பெரியார் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களே இல்லை. என்றாலும், மலேசிய மக்கள், சிங்கை மக்கள் அந்தக் காலகட்டத்தில் அவ்வாறு செய்திருக்கின்றார்கள். சிங்கப்பூரில், ராமசாமி நாடார் பங்களாவில் பெரியார் அவர்கள் தங்குகிறார். அங்கே,  பத்திரிகையாளர்கள் வந்து பேட்டி எடுக்கிறார்கள். பிறகு ‘நியூ ஓரல்ட்’ நாடகக் கொட்டகையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு அலெக்சாண்டர் தியேட்டரில், சுயமரியாதைத் தொண்டர்களுடைய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7000 பேர் கலந்துகொண்ட நிகழ்வு!

அந்நிகழ்ச்சியில், 7000 பேர் கலந்துகொள்கி றார்கள். அதை நினைத்து பார்க்கவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்பொழுது நாம் ஒரு நிகழ்ச்சி நடத்தினால், 50 பேர் வருவதே, பெரிய கேள்வியாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில், தந்தை பெரியார் ‘‘சுயமரியாதை இயக்க கொள்கைகள்’’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் உரையாற்றி னார். இந்நிகழ்வில், கோ.சாரங்கபாணி அவர்கள், இவர் ‘முன்னேற்றம்’ பத்திரிகைக்கு  துணை ஆசிரியராக இருந்தவர். அதற்கு பிறகு ‘தமிழ்முரசு’ நாளேட்டிற்கு ஆசிரியராக, உரிமையாளராக இருந்தவர். அவர்தான் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, நன்றியுரையையும் வழங்குகிறார்.

மலேயா முழுவதும் இருக்கின்ற சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும்!

பிறகு,  மறுநாள் 26 ஆம் தேதி, சிங்கை, டவுன் ஹாலில், இந்தியர் சங்க மாநாடு நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில், ‘‘மதுவிலக்கு’’ பற்றிய உரையை வழங்கு கிறார். பாமர கடவுள்கள், காட்டேரி, கருப்பன், வீரன் இதெல்லாவற்றுக்கும் படைக்கும் பொழுது, சுருட்டு, மதுபாட்டில் எல்லாம் வைப்பார்கள். மலேசியாவில், இன்றுவரை அதெல்லாம் உண்டு. அந்த மாதிரியான கோயில்களுக்கு வந்து மக்கள் தோட்டப்புறங்களில் வேலைக்குச் சென்று, உழைத்த பணத்தையெல்லாம், வழிபாட்டிற்கும், குடிப்ப தற்கும்தான் செலவழிக்கின்றார்கள். இது சரியல்ல என்பதுபற்றி பேசினார். அந்த மாநாட்டில் 10 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மலாயா முழுவதும் இருக்கின்ற சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்கின்ற விழைவை ஒரு முக்கிய தீர்மான மாக நிறைவேற்றுகின்றார்.

1963 வரைக்கும் சிங்கப்பூர்,
மலேயாவின் ஒரு பகுதிதான்!

உங்களுக்கெல்லாம் தெரியும், மலேசியாவின் கீழ் பகுதியில் சிங்கப்பூர் இருக்கும். சிங்கப்பூர் தனித்தீவு. அதாவது, 1963 வரைக்கும் சிங்கப்பூர், மலேயாவின் ஒரு பகுதிதான். 1957 இல் மலேசியாவுக்குச் சுதந்திரம் வருகிறது. அதற்குப் பிறகு, மலேயாவும் – சிங்கப்பூரும்  பிரிய வேண்டும் என்கிற ஆலோசனைகள் நடைபெற்று, அதற்குப் பிறகு சுமுகமான வகையில், இந்தப் பிரிவு நடந்து, மலேசியா ஒரு தனி நாடாகவும், சிங்கப்பூர் ஒரு தனி நாடாகவும் ஆகின்றது.

‘‘சுயமரியாதை இயக்கம்
என்றால் என்ன?’’

ஆனால், 1929 இல், சிங்கப்பூர், மலேயாவினுடைய ஒரு பகுதி தான். பெரியார் அவர்கள், அங்கிருந்து ஜோஹூருக்குத் திரும்ப வருகிறார். அது, மலேயா வினுடைய கடைசி மாநிலம். அங்கே இருக்கின்ற தமிழ் மக்கள்  நாடகக் கொட்டகை ஒன்றில், பெரிய வரவேற்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறகு ‘‘சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன?’’ என்ற தலைப்பில், இரண்டு மணி நேரத்திற்குப் பெரியார் அவர்கள் உரை நிகழ்த்துகிறார். அந்த உரையை நிகழ்த்திவிட்டு, தனக்குக் கிடைத்த நேரத்தில்,  இரண்டு முக்கியமான இடங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றார்.

ஒன்று,  கிளைட்டார் என்ற பகுதி, பிரிட்டிஷ் கப்பற்படைக்குச் சொந்தமானது. அங்கே சென்று, ‘‘எப்படி கப்பல் செய்கிறார்கள்? அந்தக் கப்பற்படை எப்படி இருக்கிறது? ப்ளோட்டிங் டாக்ஸ்லாம் எப்படி இருக்கிறது? கப்பலை எப்படி ரிப்பேர் செய்கிறார்கள்? என்பதையெல்லாம் பார்க்கிறார்.

பிறகு,  ஆகாய விமான பயிற்சிப் பள்ளிக்குச் சென்று,  எப்படி ஆகாய விமானங்கள் செயல்படுகின்றன? ஆகாய விமானங்கள்குறித்து, அங்குள்ள பயிற்சியாளர்களிடம் பேசி, நிறைய விளக்கங்களைப் பெறுகின்றார். இந்த இரண்டு விஷயங்கள், அவர் தனது ‘லேர்னிங்’ என்கிற வகையில் பார்த்தார்.

எப்படி பிரச்சாரத்தை, அவர் மற்றவர்களுக்காக செய்கிறாரோ, அதே சமயத்தில், தனக்கான ஒரு ‘லேர்னிங் ஆக்டிவிட்டி’ என்பதையும் அவர் அந்தப் பயணங்களில்  சேர்த்திருந்தார் என்பதை அவருடைய  அஜெண்டாவில் இருந்து நமக்குத் தெரிகிறது.

பிறகு, இரண்டு மணிக்கு மீண்டும் அவர் சிங்கப்பூ ருக்கு வந்து விடுகின்றார். அங்கே  பல சங்கத்தாருடன் சேர்ந்த ஒரு சந்திப்பு ஒன்று நடக்கின்றது. பிறகு, மாலை 5 மணிக்குத் தேநீர் விருந்து நடக்கின்றது. அந்த தேநீர் விருந்து என்பது, ‘ஹை கிளாஸ்’ ஆன ஒரு ‘எலைட் குரூப்க்கான’ ஒரு பெரிய ஒரு நிகழ்ச்சி. அய்ரோப்பியர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். ஏனென்றால், காலனித்துவ ஆட்சி அந்தக் காலகட்டத்தில் என்பதால். 500 பேர் பங்கு பெற்ற  ஒரு பெரிய தேநீர் விருந்து. பிறகு, மாலை 6 மணிக்கு ஒரு பெரிய பொதுக்கூட்டம் – ‘‘சுயமரியாதை இயக்கம் தோன்ற வேண்டிய அவசியம் என்ன?’’ என்ற தலைப்பில் நீண்டதொரு ஒரு உரையை ஆற்றுகின்றார்.

‘‘கோயில் கட்டுவதால்
ஏற்படும் கெடுதல்!’’

பிறகு, சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு, நேராக மலேசியாக்குள் வர ஆரம்பிக்கிறார்.  பத்து பகாட்டிற்கு வரும்போது, அங்கே அவருக்கு மேள வாத்தியங்களுடன் ஓர் ஊர்வலம் நடக்கிறது. பிறகு நாட்டுக்கோட்டை நகரத்தாருடைய விருந்து; பிறகு, நான்கரை மணிக்கு  சினிமா கொட்டகையில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘‘கோயில் கட்டுவதால் ஏற்படும் கெடுதல்’’ என்ற தலைப்பில், இரண்டு மணி நேரத்திற்கு உரையாற்றினார் தந்தை பெரியார் அவர்கள்.

பிறகு, இரவு 8.30 மணிக்கு, ஈப்போ அய்யா தலை மையில் ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு நிகழ்ச்சிகள்; எத்தனை நிகழ்ச்சிகள் – ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம். அடுத்ததாக அங்கிருந்து மேலே வரும்போது, மூவார்க்கு வந்து விடுகின்றார்.  நீங்கள் பார்க்கும்போது,  மலேசியா மேப்  இருந்தால், உங்களுக்கு நன்றாகப் புரியும் என்பதற்காக  நான் சேர்த்திருக்கிறேன். ஏனென்றால், நிறைய பேருக்கு,  ஊரின் பெயர்கள் எல்லாம் தெரிவது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

மலேயாவில், பெரியார் அவர்கள்
சென்ற ஊர்கள்!

நீல வண்ணத்தில்,  நான்  போட்டிருக்கேன் அல்லவா, பெரியார் அவர்கள் சென்ற ஒவ்வொரு ஊர்களின் இடத்தையும், இதில் நீங்கள் பார்க்கலாம். அதாவது, மேலே பினாங்கில் தொடங்கி, அப்படியே கீழ தைப்பிங், ஈப்போ என்று வந்து, சிராங்கூன் வந்து, மூவார்க்கு வந்து, சிங்கப்பூர் வந்து, பிறகு திரும்பவும் சிங்கப்பூரில் இருந்து அவர் மேலே போகிறார். இப்போது மூவார் வந்துவிடுகின்றார். அங்கு கேசவமேனன் இருக்கிறார். கேசவமேனன்  யார் என்றால்,  வைக்கம் போராட்டம்பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அங்கே  ஒரு போராட்டத்தை நடத்தியவர்தான்  கேசவமேனன் அவர்கள். அவர் ஒரு வழக்குரைஞர்.

அவர் மலேசியாவுக்கு வந்து, மலேசியாவிலே தங்கி விடுகின்றார். அவருடைய தலைமையில் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அதை நினைத்து. பெரியார் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றார். அந்த நிகழ்ச்சி யில், அவருடன் வந்த திரு.இராமநாதன் என்பவர், நகரத்தார் பெண்கள் எவ்வகையில் துன்பப்படுகின்றனர் என்கிற விஷயத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். ஒரு குறிப்பிட்ட ஜாதியில் இருக்கின்ற பெண்கள், ஜாதியினால் எந்த அளவுக்குச்  சிறைப்படுத்தப்படுகின்றார்கள் என்பதைப்பற்றி அவர் தன்னுடைய உரையில் குறிப்பிடுகின்றார்.

நாகம்மாள், வைக்கத்தில் நடத்திய சத்தியாகிரகப் போராட்டம்!

பிறகு கேசவமேனன், பெரியார் அவர்களுடைய காங்கிரஸ் தொண்டைப் பற்றியும்,  நாகம்மாள் அவர்கள் வைக்கத்திற்கு வந்து நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தை பற்றியும் உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

அதனைக் கேட்ட மலேசியாவில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய எழுச்சி ஏற்படுகிறது என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.  பிறகு, இரவு 8 மணிக்கு, சாரங்கபாணி அவர்கள் ஏற்பாட்டில்  ஒரு பொதுக்கூட்டம் நடந்து, இரவு 11 மணிக்கு தான் அந்த நிகழ்ச்சி முடிகிறது.

30.12.1929 அன்று நடந்த
சுயமரியாதைத் திருமணம்!

பிறகு, மறுநாள் 30.12.1929 அன்று,  மலாக்கா தம்பான்  என்ற பகுதிக்குப் போகிறார்கள். அங்கே மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருடைய சுயமரி யாதைத் திருமணத்தில் கலந்துகொள்கிறார். அந்தக் காலகட்டத்தில், மலாயாவிலேயும் சுயமரியாதைத் திருமண முறை பரவலாகி இருந்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.  அந்தத் தாக்கம் அந்த அளவுக்கு வந்துவிட்டது.

மாலையில், பிரான்சிஸ் ஸ்கூல் என்கிற ஒரு பள்ளிக்கூடத்தில் உரையாற்றுகிறார். அங்கே 5000 பேர் கூடுகிறார்கள். ‘‘சுயமரியாதை இயக்கம்’’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் உரையாற்றினார். பெண்கள் நிலை, தீண்டாமைக் கொடுமைபற்றியெல்லாம் உரை யாற்றினார்.

‘ராமசாமி’  என்ற பெயரைப் பார்த்து,
சாமியார் என்று நினைத்து ‘அருள்வாக்கு’ கேட்ட பெண்கள்!

அந்த இடத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடைபெறுகிறது. ‘ராமசாமி’ என்ற பெயரைப் பார்த்துவிட்டு, இவர் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்ற சாமியார் என்று நினைத்துக் கொண்டு, இரண்டு பெண்கள் அவரிடம் வந்து, ‘‘என்னுடைய மகளுக்குக் குழந்தை பிறக்க வில்லை, சாமி; எனக்குக் கொஞ்சம் அருள்வாக்குக் கொடுங்க’’ என்று கேட்கிறார்கள்.

திராவிடர் கழகம்

அப்பொழுது அவர் சொல்கிறார், ‘‘நான் சாமியார் இல்லை அம்மா. எனக்கே பிள்ளை இல்லை; வேண்டும் என்றால், என் மனைவி நாகம்மாளிடம் கேளுங்கள், அவர் பக்கத்தில்தான் இருக்கிறார்’’ என்று சொல்லிவிட்டு,  இதையெல்லாம் நீங்கள் சாமியாரிடம் போய்க் கேட்கக்கூடாது என்று சொன்ன பிறகும், அந்தப் பெண்கள் கேட்காமல், ‘‘நீங்கள் அருள்வாக்குக் கொடுத்தே ஆக வேண்டும்; என்னுடைய மகளுக்குக் குழந்தை இல்லை’’ என்று சொல்கிறார்கள்.

பெரியாரும், ‘‘சரி இரண்டு வருஷத்தில் குழந்தை பிறக்கும் பிறக்கும்’’ என்று சொல்லி, அந்தப் பெண்களை  சமாதானம் செய்து அனுப்பி வைத்த கதை எல்லாம் கூட இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில், மக்கள்  முழுத் தெளிவோடு இருந்தார்களா? என்றால், இல்லை என்பதுதான் உண்மை. இவருடைய பெயரைப் பார்த்து, பெரியார் ஒரு சாமியார் என்று நினைத்துக் கொண்டு, அருள்வாக்கு கேட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது, அந்தளவு நிலைமை இருந்திருக்கிறது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *