
நாம் அனைவருமே பாட்டியிடம் கதைகள் கேட்டிருப்போம். பாட்டி கதை சொல்லச் சொல்ல நம் மனக் கண்ணில் அவர் சொல்லும் சம்பவம் காட்சியாக விரியும். ஒரே கதை, கதை சொல்பவர் ஒருவர்தான் என்றாலும், கேட்பவர்கள் எல்லோருக்கும் ஒரே காட்சி தோன்றுவதில்லை. அவரவர் பார்த்த இடங்களை மனிதர்களை பொருத்திக் கற்பனை செய்து கொள்வோம். எல்லோரின் கற்பனையும் ஒரே போன்று இருப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் இந்த வேறுபாடு சிந்திக்கும் பொருள் சார்ந்தது மட்டும் அல்ல.
அதை எப்படி கற்பனை செய்கிறோம் என்பதையும் சார்ந்தது. இதை புரிந்துகொள்ள ஒரு சிந்தனை ஆய்வு (Thought Experiment) செய்வோம்.
உங்கள் முன்னுள்ள பாத்திரத்தில் சூடான பிரியாணி இருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
செய்தபின் கீழுள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்
- உங்கள் மனக் கண்ணில் பிரியாணி தெரிகிறதா?
- அதற்கு நிறமுண்டா?
- அதன் உருவம், நிறம் தெளிவாக இருக்கிறதா?
இவ்வாறு மனக் கண்ணில் பிம்பங்களை உருவாக்கும் தன்மைக்கு ஆங்கிலத்தில் ‘Phantasia’ என்று பெயர். இது கிரேக்கச் சொல்லாகும். இதற்கு ‘கற்பனை’ என்பது பொருள்.
ஒருவரால் மிகத் தெளிவாகக் கற்பனை வழி மனக் கண்ணில் பிம்பங்களை உருவாக்க முடிந்தால் அந்நிலைக்கு உயர்தெளி கற்பனையாக்கம் (Hyperphantasia) என்றும், எந்த பிம்பங்களும் உருவாக்க இயலாத தன்மை கற்பனையாக்கமின்மை (Aphantasia) என்றும் வரையறுக்கப்படுகிறது. கற்பனையாக்கம் அவரவர் பார்வை, கேட்பவை, சுவை, நுகர்தல், உடல் இயக்க நிலை ஆகிய புலன் சார்ந்த அறிவின், அனுபவங்களின் அடிப்படையில் உண்டாகிறது; கற்பனையாக்கத்தின் நிலையையும் இவைதான் நிர்ணயிக்கின்றன.
கற்பனையாக்கம் செய்யும் தன்மையின் அடிப்படையில் கீழுள்ளவாறு வகைப்படுத்தப்படுகிறது.
உயர்தெளி கற்பனையாக்கம் (Hyperphantasia)
மனக் கண்ணில் வேண்டிய பிம்பங்களை மிகத் தெளிவாக உருவாக்கும் தன்மை உயர்தெளி கற்பனையாக்கம் எனப்படுகிறது. இந்நிலையில் பிம்பங்களை உருவாக்க எந்தச் சிரமமும் இல்லாமல் கற்பனையாகத்தான் நினைகின்ற, செவிவழி கேட்கின்ற, படிக்கின்ற விவரணைகளுக்கு ஏற்ப மிகத் துல்லியமான, உண்மையில் உள்ளது போன்றே பிம்பங்களை உருவாக்க முடியும். உலக மக்கள் தொகையில் 2-3% இந்நிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தெளி கற்பனையாக்கம்(Vivid Imagery)
தெளிவான, வண்ணமயமான பிம்பங்களைக் கற்பனை என்ற உணர்வோடு உருவாக்கும் தன்மை தெளி கற்பனையாக்கம் எனப்படுகிறது.
சராசரி கற்பனையாக்கம்(Average Imagery)
ஓரளவு தெளிவான, ஆனால் சற்று மங்கலான அல்லது குறைவான விவரங்களைக் கொண்ட பிம்பங்களை உருவாக்கும் நிலையாகும்.
தெளிவற்ற கற்பனையாக்கம் (Hypophantasia)
மிக மங்கலான, தெளிவற்ற, வடிவமற்ற பிம்பங்களை உருவாக்கும் நிலையாகும்.
இந்த இடையில் உள்ள மூன்று நிலைகளில் உலகின் 93-97% மக்கள் அடங்குவர்.
கற்பனையாக்கமின்மை (Aphantasia)
விவரணைகளுக்கு ஏற்ப மனப் பிம்பங்களை உருவாக்கிப் பார்க்க இயலாத தன்மை ‘கற்பனையாக்கமின்மை’ எனப்படுகிறது. இந்நிலையில் கொடுக்கப்படும் விவரணைகள் வெறும் தகவலாக (Plain Facts) மனதில் விரியுமே தவிர பிம்பங்களாக அல்ல.
எடுத்துக்காட்டாக, இரவு வானத்தைக் கற்பனை செய்யும் போது நிலவு, விண்மீன்கள், கோள்கள், அவற்றின் நிறம் ஏற்கனவே பார்த்த நினைவு அடிப்படியில் பிம்பமாக அல்லாமல் வெறும் தகவலாக நிலவு வட்டமாக இருக்கும், விண்மீன்கள் மின்னுவதாகத் தெரியும் என்பவை தகவலாக மட்டுமே தோன்றும். இது பிறப்பிலிருந்தே இருக்கும் நிலை அல்லது விபத்துக் காரணமாகவோ, பிற சிகிச்சைகள் காரணமாகவோ ஏற்பட்ட நிலை என்று இரு வகைப்படும்.
இந்நிலையில் ஒருவரால் யாரின் முகத்தையும் நினைவுகூர முடியாது. முகத்தன்மைகளை மட்டுமே நினைவுகூர முடியும். இடங்களை நினைவுகொள்வதில் கூட சிரமம் இருக்கும். ஆனால் இவையேல்லாம் கற்பனை செய்வதில் தானே தவிர, கண்ணில் நேரடியாக பார்ப்பதற்கு அல்ல.
கற்பனையாக்கமின்மை கண்டறியப்பட்ட வரலாறு
MX என்பவர் 2005ல் செய்த அறுவைச் சிகிச்சைக்குப் பின் தன்னால் பிம்பங்களை உருவாக்க முடியவில்லை. இவர் மருத்துவர் ஆதம் ஜீமென்-அய் சந்தித்தபின் நடத்த விரிவான ஆய்வுக்குப் பின் 2009இல் முதன் முதலாகப் பிம்பங்களற்ற சிந்தனை கண்டறியப்பட்டு 2015இல் இந்நிலைக்கு Aphantasia என பெயரிடப்பட்டது.
இது மூளையின் ஒருவகையான செயல்பாடே தானே தவிர குறைபாடோ, நோயோ அல்ல. இடக்கைப் பழக்கம் போல் மூளைச் செயல்பாட்டின் ஒரு தன்மை ஆகும். இது எந்தவகையிலும் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காது. இப்படி தனக்கும் பிறருக்கும் உள்ள சிந்தனை வேறுபாட்டையே இதைப் பற்றிப் படிக்கும் போது தான் தெரிய வந்ததாகச் சொல்கின்றனர். இந்நிலைக்கான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
உங்களின் கற்பனையாக்கத்தின் நிலைப்பற்றி அறிய https://aphantasia.com/study/vviq என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள எளிய கேள்விகளுக்குப் பதிலளித்துத் தெரிந்து கொள்ளலாம்.
– மகேஸ்வரன் ப
