சென்னை, மார்ச் 10- இன்று இரவுக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என மின்வாரியம் பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்ட கும்பலை மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
வீடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மின் சார அளவை கணக்கெடுத்த 20 நாட்களுக்குள், அதற் கான பணத்தை மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன் கட்டணத்தைச் செலுத்திய பிறகு மீண்டும் இணைப்பு வழங்கப்படும். மின்கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை நுகர்வோருக்கு மின் வாரியம் குறுஞ்செய்தி மூலம் அனுப்புகிறது. வடமாநிலத் தில் பதுங்கல் இந்நிலையில் அண்மைக் காலமாக, `முந்தைய மாத மின்கட்டணத்தைச் செலுத்தாததால் இன்று இரவுக்குள் மின்சாரம் துண்டிக்கப்படும். உடனே, இந்த எண்ணில் கட்டணம் செலுத்தவும்’ என மோசடி கும்பல் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. அதை உண்மை என நம்பி சிலர் பணம் கட்டி ஏமாந்தனர். இதையடுத்து, மின்கட்டணம் தொடர்பாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம். நுகர்வோர் விழிப்புடன் இருக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியது. அத்துடன், இது தொடர்பாக காவல் துறையிலும் புகார் அளித்தது. மேலும், மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவும் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தியது. விசாரணையில் வதந்தி பரப்பி மோசடியில் ஈடுபட்ட கும்பல் வடமாநிலம் ஒன்றில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என மின் வாரிய விஜி லென்ஸ் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.