பாட்னா, மார்ச் 11 தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய போலி காட்சிப் பதிவு தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து பீகார் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் போலி காட்சிப் பதிவு வெளியிட்ட பீகாரை சேர்ந்த ‘யூ டியூபர்’ மணிஷ் காஷ்யப், யுவராஜ்சிங் மற்றும் அமன்குமார், ராகேஷ் திவாரி ஆகியோர் மீது பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கடந்த 6-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. அவர்களில், அமன்குமார் கைது செய்யப்பட்டார். மணிஷ் காஷ்யப், யுவராஜ்சிங் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பல தடவை தாக்கீது அனுப்பியும் அவர்கள் வரவில்லை. தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.