புதுடில்லி, மார்ச் 12- இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் ஒன்றிய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாறுபடும் காலங்களில் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். இந்தாண்டு பருவநிலை மாறுபாடு, அரங்கிற்குள் அதிக மக்கள் ஒன்றுகூடுவது, மக்களின் பழக்கவழக்கங்கள் போன்ற காரணங்களால், வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக H3N2, H1N1, அடினோ வைரஸ் போன்ற வைரஸ் காய்ச்சல் அதிக ரித்து வருவது மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி முகக்கவசம் அணிவது, சமூக இடை வெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் என சுகாதார நடைமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிப்பது குறித்து அவர்களுக்கு விழிப்புர்ணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.