அனைத்து மாநிலங்களிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு திட்டமிடுவோம் – தீவிரமாக முயற்சிப்போம்: முதலமைச்சர் முழக்கம்

2 Min Read

அரசு, தமிழ்நாடு

கோவை, மார்ச் 12- இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபடப் போவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா, சின்னியம் பாளையத்தில் நேற்று (11.3.2023) நடந்தது. இவ்விழாவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அவரது முன்னிலையில் அதிமுக, தேமுதக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்த 4 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது அவர் பேசியதாவது: சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நம்பிக்கைதான் காரணம். வரும் மக்களவைத் தேர்தலில் இதே போன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.

நம்முடைய இலக்கு மக்களவைதேர்தல்தான். கடந்த முறை மக்களவை தேர்தலில் ஒரேஒரு இடத்தை இழந்தோம். வரவிருக்கக்கூடிய மக்களவைத் தேர்தலில் அந்த இடத்தையும் இழக்கக் கூடாது. புதுச்சேரியையும் சேர்த்து 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இது ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதச் சார்பற்ற கூட்டணியின் வெற்றி மட்டுமல்ல. வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான, அந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடப் போகிறோம். அதற்கு நீங்கள் பக்கபல மாக இருக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேசும்போது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி. மு.பெ.சாமிநாதன், காந்தி, கயல்விழி செல்வ ராஜ், மாவட்ட செயலாளர்கள் தொ.அ.ரவி, தளபதி முருகேசன், மேனாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, மேயர் கல்பனா, மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் கோவை செல்வராஜ், வி.சி.ஆறுக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று (11.3.2023) மாலை, தமிழ்நாடு விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா கோவை கருமத்தம்பட்டியில் நடந்தது.

புதிய ஜவுளிப் பூங்கா

இதில் முதலமைச்சர் பேசியதாவது: மேற்கு மண்டலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். தறி தொழிற்சாலைகளுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டு, இவற்றுக்கான அனைத்து பொதுகட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படும். ஒற்றுமையாக அனைத்து மக்களும் வாழக்கூடிய மாநிலம் தான் தமிழ்நாடு. அதை சிதைக்க சிலர் முயற்சிக்கின்றனர். வதந்திகள் மூலமாக பொய்களை பரப்பி இந்த ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். அவை எழுந்த வேகத்தில் அமுக்கப்பட்டு விடுகின்றன.

அனைவருக்கும் இந்த ஆட்சி தினமும் செய்து வரும் நலத்திட்ட உதவிகளில் இருந்து மக்களை திசை திருப்ப அவர்கள் செய்யக்கூடிய தந்திரங்கள் தான் இதுபோன்ற பொய்களும், வதந்திகளும். இதற்கு நான் அஞ்சமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, காந்தி, சு.முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *