கவுஹாத்தி, மார்ச் 12- வட கிழக்கு மாநிலமான அசாமின் நல்பாரி கிராமத்தைச் சேர்ந்த பிரசஞ்சித் ஹலோய் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடக்கவிருந்தது.
இவர்களின் திருமணத்திற்காக இரு வீட்டாரும் இணைந்து விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் திருமணம் நடைபெற இருந்த இடம்களை கட்டியிருந்தது. இந்நிலையில், மண்டபத்திற்கு மணமகன் தள்ளாடியபடி வந்ததை பார்த்த மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
மணமகன் மட்டுமின்றி, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பலரும் குடி போதையில் இருப்பதை பார்த்தனர். தொடர்ந்து திருமண நிகழ்வுகள் நடைபெற்றபோது மண மேடையில் மாப்பிள்ளைக்கு உட்காரக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு போதை தலைக்கேறி மயங்கி அருகில் இருந்தவர் மீது மணமகன் சாய்ந்தார்.
இதை பார்த்த மணமகள் கண்ணீர் சிந்தினார். மணமேடைக்கு வரமுடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். திருமண நாளிலேயே இப்படி இருக்கிறார் என்றால் வாழ்க்கை முழுவதும் எப்படி இவருடன் வாழ முடியும், பல்வேறு கனவுகளுடன் வந்த மணப்பெண் வேதனை அடைந்தார். இதனால், உடனே திருமணத்தை நிறுத்துமாறு தன் பெற்றோரிடம் முறையிட்டார்.
இதையடுத்து, பஞ்சாயத்து தலைவரை அழைத்து, மண மேடையில் நிகழ்ந்தவற்றை தெரிவித்ததுடன், காவல்துறையிலும் புகார் அளித்தனர்.திருமணத்திற்கு செலவிட்ட தொகையை மணமகன் வீட்டாரிடம் இருந்து பெற்றுத் தருமாறும் மணமகள் வீட்டார் கேட்டுள்ளனர்.
இதனிடையே, மணமேடையில் மாப்பிள்ளை போதை தலைக்கேறிய நிலையில், தள்ளாட்டத்துடன் இருக்கும் காட்சிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.