சென்னை மார்ச் 12 ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் அந்த சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்வதை ஆளுநர் ஆதரிக்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் வடசென்னை மாவட்ட கிளை சார்பில் மின்ட் மணிக்கூண்டு அருகில் நேற்று (11.3.2023) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று பேசியதாவது: ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதைத் தடுக்க தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் கூடி ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்தை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அப்போது ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, அக்.19ஆ-ம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு, விளக்கம் கேட்டு அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார். அதற்கான பதிலையும் அரசு அனுப்பியது. இதற்கிடையே ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தினரை அழைத்து ஆளுநர் பேசியுள்ளார். பின்னர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், இந்த சட்ட மசோதாவை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி திருப்பிஅனுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை 44 பேர் இறந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், அதற்கான சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமை மாநில அரசுக்கு உண்டுஎன ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார்
தமிழ்நாடு மக்களின் பிரதிநிதிகளால் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி, அந்த சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகளை ஆதரிக்கிறார். இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.