திரிபுராவில் ஆட்சியைப் பிடித்த பிஜேபியின் ஆணவ வன்முறை வெறியாட்டத்தை எதிர்த்து சி.பி.எம். சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து மார்ச் 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை விட 10 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி, இம்முறை 33 தொகுதிகளில் தான் வெற்றிபெற முடிந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை முழுமை பெறுவதற்கு முன்னதாகவே பாஜகவினர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதலை தொடுத்தார்கள். கட்சிகளின் ஊழியர்களை மட்டுமல்ல, மேற்கண்ட கட்சிகளை ஆதரித்த வாக்காளர்களையும் குறி வைத்து தாக்கினார்கள். இப்போதும், இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது. எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களின் வீடுகள், கடைகள், கட்சி அலுவலகங்கள் குறி வைத்து கொளுத்தப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் 3 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
பாஜகவினர் தொடுத்து வரும் தாக்குதலுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த செயல் வீரர்களின் ரப்பர் தோட்டங்கள், அறுவடைக்கு தயாராகி யுள்ள பயிர்கள் போன்ற வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கி வருகிறார்கள். ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் வாகனங் களை அழிப்பதன் மூலம் அன்றாட வருவாயை அழிக்கிறார்கள். 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் இத்தகைய முறையில்தான் வன்முறைகள் தொடர்ந்தன. மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த 25 பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இத்தகைய வன்முறைக்குப் பிறகும் இடதுசாரிகள் – காங்கிரஸ் கட்சியினர் 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்களே என்ற ஆத்திரத்தில் தான் எதிர்க்கட்சிகளை அழிக்க பாஜக முற்பட்டுள்ளது. மேற்கண்ட கொலைவெறித் தாக்குதல்கள் ஆளும் பாஜகவின் திட்டமிட்ட வன்முறை தான். கொலை வெறி, வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்திடவும், வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்திரி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார். ஆளுநரின் அணுகுமுறைக்கு பின்னணி உள்ளது. மாநில முதலமைச்சர் வன்முறை நடந்த சில இடங்களை பார்வையிட்டபின் எதிர்க்கட்சிகள் தான் வன்முறையில் ஈடுபடுகின்றன என பொய்யான அறிக்கையை விட்டுள்ளார்.
திரிபுராவில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை தொடர்பாக ஆய்வு நடத்தச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திரிபுரா மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் தேர்தலுக்குப் பின்பு இங்கு வன்முறை வெடித்தது. குறிப்பாக சேபாஹிஜலா மற்றும் கோவாய் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. வன்முறை குறித்து இடதுசாரி, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நேஹல்சந்திராநகரில் ஆய்வுக்கு வந்த நாடாளுமன்ற குழு மீது பாஜகவினரும் ஹிந்துத்துவ அமைப்பினரும் தாக்குதல் நடத்தினர். ‘பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அங்கு இருந்த ஒரு வாகனம் கடும் சேதமடைந்தது. மேலும் இரண்டு கார்கள் சூறையாடப்பட்டன. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் காயமடையவில்லையென்றாலும் அவர் களது வாகனங்கள் சேதமடைந்தன. இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக குழுவில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இளமாரம் கரீம் அகர்தலாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திரிபுராவில் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வன்முறைகளை தீவிரமாக கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை நாட்டு மக்களுக்கும் தெரிவிப்பதற்காக நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவோம். மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு அவர்களது வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுள்ளன” என்றார்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஓர் ஆட்சி ஒன்றியத்தில் இருப்பதால் இந்த அராஜகம்.
இந்த நிலையைக் கண்டித்து நேற்று சென்னையில் மாநில சிபிஎம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தியது.
தமிழ்நாட்டைப் போல வேறு மாநிலங்களிலும் இது போன்று மக்கள் சக்தியைத் திரட்டி ஒன்றிய பாசிச ஆட்சியை வீழ்த்திட முனைய வேண்டும். குறிப்பாக தேசிய கட்சிகள் இதனை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.