சென்னை, மார்ச் 14 பெரம்பூரில் மெட்ரோ ரெயில் பணிக்காக மாநகராட்சி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த முருகன் கோவில் இடித்து அகற்றப்பட்டது.
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ஆயிரம் சதுர அடி கொண்ட காலி நிலம் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கொடுங்கையூர் சின்னாண்டி மடம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சோலை மற்றும் அவருடைய மனைவி இருசம்மாள் ஆகியோர் இந்த இடத்தை ஆக்கிரமித்து முருகன் கோவில் கட்டியிருந்தனர்.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்காக இந்த கோவில் அமைந்துள்ள இடத்தை மெட்ரோ அதிகாரிகள் தேர்வு செய்து, மாநகராட்சியிடம் அனுமதி கேட் டனர். அதற்கு சம்மதம் தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவிலை இடித்து அகற்றும்படி கடந்த டிசம்பர் மாதம் சோலை-இருசம்மாள் தம்பதிக்கு தாக்கீது வழங்கினர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி முருகன், 71ஆ-வது வார்டு உதவி செயற்பொறியாளர் பாபு ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் 3 பொக்லைன் எந்திரம் உதவியுடன் கோவிலை இடிக்க நேற்று (13.3.2023) அதிகாலை 5 மணியளவில் வந்தனர். முன்னதாக கோவிலுக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக எம்.கே.பி. நகர் காவல் உதவி ஆணையர் தமிழ்வாணன் தலைமையில் 3 ஆய்வாளர்கள், 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செம்பியம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் தயாராக இருந்தனர். முதலில் கோவிலில் இருந்த முருகன், வள்ளி உள்ளிட்ட சாமி சிலைகள் அகற்றப்பட்டு கோவில் நிர்வாகியிடம் ஒப்படைக்கப் பட்டது.
பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் முருகன் கோவில் இடித்து அகற்றப்பட்டது.