சென்னை, மார்ச் 15- சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென அறியாத காய்ச்சலால் திடீரென உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை குடும்பத்தினரால் தொடங்கப் பட்டது. அவரது நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன.
இதன்ஒருபகுதியாக மருத்துவர் சூர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட முதியோர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பின்னர் மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எல்அய்சி மேனாள் உயரதிகாரிகள் எம்.கே.கருப்பையா, கண்ணதாசன், ஆறுமுக நயினார், எல்அய்சி வளர்ச்சி அதிகாரிகள் ஆறுமுகசாமி, அய்யாச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் முதியோர்களுக்கு சேவை செய்தவர்கள் சிறப்பிக்கப் பட்டனர்.