சென்னை, மார்ச் 15- இந்தியாவின் நவீன கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட வகையில் முதலிடத்தில் இருந்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசினை முந்தி, உலகின் உயர்ந்த பல் மருத்துவ நிறுவனமாக தமிழ் நாட்டின் சவீதா பல் மருத்துவக் கல்லூரி உருவெடுத் துள்ளது.
உலகின் மிகப்பெரிய அறிவியல் தரவுத்தளமான ஸ்கோபஸில், இந்தியாவின் மதிப்புமிக்க பல் மருத்துவக் கல்லூரியான சவீதா பல் மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை 2023 மார்ச் மாதத்தில், 8,920 ஆக உயர்ந்தது. ஹார்வர்டு டென்டல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் 8,854 ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தாண்டி, இந்த அரிய சாதனையை அந்தக் கல்லூரி படைத்தது.
இந்தப் புதிய மைல்கல் குறித்து சவீதா பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் என்.எம். வீரய்யன் பேசுகை யில், “ஆராய்ச்சி, நோயாளி பராமரிப்பு, கண்டுபிடிப்பு ஆகியவற்றில் எங்களுடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு போன்றவை காரணமாக பல் மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர்களில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளோம். இந்த சாதனை இந்தியாவின் வளர்ந்து வரும் கல்வித் துறை சார்ந்த திறமைக்கு ஒரு சான்றாகும்” என்று குறிப்பிட்டார்.