அலட்சியம் வேண்டாம் – பொதுமக்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கையும் – வேண்டுகோளும்!
புதுவகைக் கரோனா தொற்று நாளும் பரவி வருகிறது – அலட்சியம் வேண்டாம்; முகக்கவசம், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல், தனி நபர் இடைவெளியைப் பின்பற்றுவீர் என்று பொது மக்களுக்கு எச்சரிக்கை கலந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
நம் நாடான இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் எச்3என்2 (பி3ழி2) என்ற புதுவகைக் கரோனா தொற்று – இன்புளூயன்சா காய்ச்சல் வெகு வேகமாகப் பரவி வரும் ஆபத்தினை உணர்ந்து, அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அனைத்து மக்களும் முந்தைய கரோனா கொடுந்தொற்று (கோவிட்-19) காலத்தைப் போலவே, பல தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்க அலட்சியம் காட்டாமல் – மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது இன்றி யமையாதது.
கரோனாவுக்குப்பின்
மீண்டுமொரு தாக்குதல்!
குறிப்பாக ஏற்கெனவே கரோனாவினால் பாதிக்கப் பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதயம் மற்றும் பல நோய்களுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வருவோர் அனைவரும் மிகவும் கவனச் சிதறல் இன்றி, வரு முன்னர் காப்பதற்காக நடவடிக்கைகளில் ஆர்வங் காட்ட முன்வரவேண்டும்.
முகக்கவசம் அணிதல்,
அடிக்கடி சோப் போட்டு கைகளைக் கழுவுதல்
தனி நபர் இடைவெளி
போன்றவற்றில் சமரசமின்றி ஈடுபடுதல் தேவை.
எச்3என்2 என்ற இந்த இன்புளூயன்சா வகைக் காய்ச்சல், முந்தைய கரோனா தொற்றின் உருமாற்றம் என்பதால், டெங்கு காய்ச்சலுடன், ஒமைக்ரான் ஆகவும் பரவிடும் அபாயம் உள்ளது என்று தொற்று நோய் மருத்துவர்கள் கூறி, நம்மை வருமுன்னரே பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
உயிர்க் கொல்லியாக மாறும்
ஆபத்தும் உள்ளது
தமிழ்நாடு அரசும், அத்துறை அமைச்சரும் இது பற்றி மக்கள் பீதி அடையாமல் கடைப்பிடிக்கவேண்டிய தடுப்பு முறைகளை எளிதாகப் பின்பற்றினால், இந்த நிலையிலிருந்து நாம் தப்பித்துக் கொண்டு நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நன்நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டி வருகிறார்கள்!
உடல்வலி, இருமல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சளி ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருப்பின், உரிய முறையில் மருத்துவர்களையும், மருத்துவமனை சிகிச்சைகளையும் உடனடியாக நாடுவதும், தேடி ஓடு வதும் நம்மைக் காத்துக் கொள்ளும் நல்ல முயற்சிகள் என்பதை மறவாதீர்!
சமீபகாலங்களில் இன்புளூயன்சா காய்ச்சல், நிமோனியா காய்ச்சல், டெங்கு காய்ச்சல் எனப் பல தொற்றுகள் பரவி வருவதால், அலட்சியம் கூடாது.
இருவாரம்வரைகூட இந்த உடல் நலிவு இருக்கக் கூடும்.
இந்திய நாட்டில் இதுவரை மூன்று பேருக்கு இத் தொற்று உயிர்க் கொல்லியாகி இருக்கிறது என்ற தகவல்கள் வந்துள்ளன.
இளைஞர் ஒருவர் மரணம்
‘‘திருச்சியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் பெங்களூருவில் வசித்து, அவர் கோவா சென்று, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார் என்பது வேதனைக்குரியது. இந்தியாவில் இத்தகைய உயி ரிழப்புகளுக்கு எச்3என்2 நோய்த் தொற்று காரணமா? அல்லது வேறு காரணமா? என்று மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.
எனவே, மிகுந்த தற்பாதுகாப்புடன் நடந்து மீண்டெழுவோம்!
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பிரச்சாரப் பணியை சமூக வலைத்தளங்கள், திண்ணைப் பிரச்சாரம்மூலம் கழகத் தோழர்கள் செய்யலாம்!
பெரியார் காட்டிய வழிமுறை!
‘‘கடவுளை மற; மனிதனை நினை” என்பது நம் தலைவர் தந்தை பெரியார் காட்டிய வழிமுறையாகும்!
கவனம்! கவனம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.3.2023