சுயமரியாதை இயக்க மாநாட்டில், ஒவ்வொரு காரணத்தையும் வைத்துக்கொண்டு, பலரையும் மாநாட்டிற்கு வரவழைத்து எல்லாரிடத்திலிருந்தும் அந்தக் கருத்துகளைப் பெற்றிருக்கிறார்!
‘‘மாற்றுக் கருத்தைப் பேசினாலும் நான் வரவேற்கிறேன்; அவர்களுடைய கருத்துகளுக்கு நான் பதில் சொல்கிறேன்’’ – தந்தை பெரியார்
இயக்கத்தைக் கட்டியது – கொள்கையைப் பரப்பியது அதுவே ஒரு தனித் தத்துவம் –
தனி வரலாறு – அவருடைய சிந்தனையினுடைய கூர்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
‘‘மாற்றுக் கருத்தைப் பேசினாலும் நான் வரவேற்கிறேன்; அவர்களுடைய கருத்துகளுக்கு நான் பதில் சொல்கிறேன்’’ – தந்தை பெரியார்
இயக்கத்தைக் கட்டியது – கொள்கையைப் பரப்பியது அதுவே ஒரு தனித் தத்துவம் –
தனி வரலாறு – அவருடைய சிந்தனையினுடைய கூர்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
சென்னை, ஜூலை 14 சுயமரியாதை இயக்க மாநாட்டில், ஒவ்வொரு காரணத்தையும் வைத்துக்கொண்டு, பலரையும் மாநாட்டிற்கு வரவழைத்து எல்லாரிடத்தி லிருந்தும் அந்தக் கருத்துகளைப் பெற்றிருக்கிறார். ‘‘மாற்றுக் கருத்தைப் பேசினாலும் நான் வரவேற்கிறேன். ஏனென்றால், அவர்களுடைய கருத்துகளுக்கு நான் பதில் சொல்கிறேன்’’ என்று அவர், இந்த இயக்கத்தைக் கட்டியது – கொள்கையைப் பரப்பியது என்பது இருக்கி றதே, அதுவே ஒரு தனி தத்துவம் – தனி வரலாறு. அதுவே அவருடைய சிந்தனையினுடைய கூர்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
்கடந்த 6.7.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பொழுது போக்கு மாதிரி எதையோ பேசிவிட்டுப் போய்விடலாம் என்று
நான் நினைப்பதில்லை!
நான் நினைப்பதில்லை!
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ என்ற சிறப்பான தலைப்பில் இந்த ஆய்வுத் தொடர் சொற்பொழிவு நண்பர்கள், தோழர்கள் சுட்டிக்காட்டியதைப் போல நான்காவது தொடராகும். என்னுடைய பல பணிகளின் நெருக்கடிகளுக்கு இடையிலே, நான் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டிருப்பது என்பது ஒரு 40 நிமிடம் பேச வேண்டும் என்பதே! அந்த 40 நிமிடம் பேச்சுக்காக, ஒரு மூன்று அல்லது நான்கு 40 நிமிடங்களைச் செலவழிக்க வேண்டும். நம்முடைய தோழர்கள் தானே, பொழுது போக்கு மாதிரி எதையோ பேசிவிட்டுப் போய்விடலாம் என்று நான் நினைப்பதில்லை.
எனக்கு இருக்கிற ஆர்வம், குன்றாத ஆர்வமாக இருப்பதற்குக் காரணம், தோழர்கள் தருகின்ற ஓர் ஆதரவுதான்!
இதற்காக உழைக்க வேண்டும், படிக்க வேண்டும். ஒரு தேர்வுக்குப் போகின்ற மாணவன் எப்படி அதற்கு முன்னாலே முழு ஆயத்தத்தோடு செல்லக்கூடுமோ, அது மாதிரி என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நண்பர்கள் கூட கேட்டார்கள், ஒரு நாள் கூட இடைவெளியே விடாமல், வரிசையாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்களே? என்று. பேசுவதற்குக் கூட எனக்கு இருக்கிற ஆர்வம், குன்றாத ஆர்வமாக இருப்பதற்குக் காரணம், தோழர்கள் தருகின்ற ஓர் ஆதரவுதான். இயக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது.
15 நாள்களாவது ஓய்வெடுக்க வேண்டும்!
எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கிறது என்று சொன்னால், பலத்த இருட்டடிப்புக்கிடையே, நம்முடைய விஷயம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, எதிரிகள் மட்டுமல்ல, நம்முடைய இனத்தவர்கள் கூட நடத்துகிற ஊடகங்கள் எல்லாவற்றிலேயும் அதில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், அய்யா காலத்தில் இருந்து நமக்கு அது பழக்கப்பட்ட ஒன்று. ஆகவேதான், அந்த விளம்பரங்களை வைத்து நாம் எதிர்பார்த்து இருக்கக்கூடியவர்கள் அல்ல. அந்தச் சூழ்நிலையிலே வருகிற போது, பல நேரங்களிலே என்னுடைய தொண்டை சரியாக இருப்பதில்லை. அதற்காக ENT டாக்டரிடம் செல்வேன். அங்கே சென்றவுடன், அவர், அதற்குரிய மருந்துகளையெல்லாம் கொடுத்துவிட்டு, ‘‘நீங்கள், தொண்டைக்கு ஒரு 15 நாளாவது ஓய்வு கொடுக்கவேண்டும்’’ என்பார். சீதாராமன் என் கூட வருவார்.
அவர் சிரித்துக்கொண்டே, ‘‘ஆசிரியர், சாயந்திரம் கூட்டத்திற்குப் போகிறார்’’ என்று சொல்வார்.
டாக்டரும், ‘‘என்னங்க’’ என்பார்.
அய்யா ஒன்றைச் சொல்வார், அது நமக்கெல்லாம், வயதானவர்கள் எல்லாருக்குமே ஒரு நல்ல வழிகாட்டி அது.
அய்யாவிடம் ஒருமுறை, ‘‘அய்யா, இப்பொழுதெல்லாம் நீங்கள் வேகமாகப் பேசுறீங்களே, கொஞ்சம் மென்மையாகப் பேசலாமே, இப்படி சில பேர் நினைக்கிறார்கள்’’ என்றோம்.
அதற்கு அய்யா அவர்கள், தெளிவாக விளக்கம் சொன்னார். ‘‘ஒருவன் ட்ரெயினை பிடிக்க வேண்டும் என்று போகிறான் என்றால், ‘பஸ்ட் பெல்’ அடிப்பார்கள். இப்பொழுது அதுபோன்று இல்லை. பழைய காலத் தோழர்களுக்குதான் தெரியும். இன்றைய இளைஞர்களுக்கு அது தெரியாது. ஒரு தண்டவாளத்தைக் கொஞ்சம் கட் பண்ணி, தொங்க விட்டிருப்பார்கள். அந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு உள்ள ஸ்டேஷனிலிருந்து ரயில் புறப்படும்பொழுது, ஸ்டேசன் மாஸ்டர், ஒரு பெல் அடிப்பார்.
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக…
(ஆனால், இப்பொழுது அதுபோன்ற நிலை இல்லை. ரயில் எங்கே இருக்கிறது? எப்பொழுது புறப்படுகிறது? எங்கே வந்து கொண்டிருக்கின்றது என்ற தகவல்களையெல்லாம் கைப்பேசியிலேயே தெரிந்துகொள்கிறார்கள். இன்னும் 10 நிமிடத்தில் இந்த ஸ்டேசனுக்கு ரயில் வந்துவிடும் என்று சொல்கிற அளவிற்கு அறிவியல் வளர்ந்து இருக்கிறது.)
பிறகு, ரயில், ஸ்டேசனை நெருங்குகிறபொழுது இரண்டாவது பெல் அடிப்பார், ஸ்டேசன் மாஸ்டர்.’’
எனக்குப் பிறகு இந்தக் கருத்தை யாரும் இவ்வளவு தைரியமாகச் சொல்வார்கள் என்பது உறுதி கிடையாது: தந்தை பெரியார்!
இதைச் சொல்லிவிட்டு, அய்யா சொல்வார், வாழ்க்கையில எனக்கு பர்ஸ்ட் பெல் அடிச்சாச்சு; செகண்ட் பெல் அடிக்கிறப்போ நான் மெதுவாகப் போய் வண்டியைப் பிடிக்க முடியுமா? வண்டியைப் பிடிக்க வேண்டும் என்றால், வேகமாகத்தான் ஓட வேண்டும். அது மாதிரி, எனக்குப் பிறகு இந்தக் கருத்தை யாரும் இவ்வளவு தைரியமாகச் சொல்வார்கள் என்பது உறுதி கிடையாது. ஆகவேதான், வேகமாகச் சொல்கிறேன்’’ என்பார்.
அது மாதிரி சொல்ல வேண்டிய கருத்துகளை வேகமாகச் சொன்னால்தான் சரியாக இருக்கும்.
அதுமட்டுமல்ல, என்னைப் பொறுத்தவரையில், நான் பேசுவதென்பது எனக்கு வயதைக் குறைக்கிறது. உற்சாகத்தைப் பெருக்குகிறது. ‘‘அறிவை விரிவு செய் – அகண்டமாக்கு’’ என்று புரட்சிக்கவிஞர் சொன்னார் அல்லவா – அது மாதிரி நம்முடைய அறிவை, நாம் விருத்தி செய்வது. நமக்கு நாமே எப்படி டானிக் சாப்பிடுகிறோம்; அல்லது வைட்டமின்களைச் சாப்பிடுகிறோமோ அப்படித்தான்.
அய்யா அவர்களுடைய அந்தச் சிந்தனை வளத்தைப் பார்க்கும்போது, இந்தச் சுயமரியாதை இயக்கத்தை அவர் எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப பார்க்கிற போது மிகவும் வியப்பாக இருக்கிறது.
‘டி.கே.சி.’ என்று அழைக்கப்பட்ட
டி.கே.சிதம்பரநாத முதலியார்
டி.கே.சிதம்பரநாத முதலியார்
பெரியாருடைய கருத்துக்கு அப்பாற்பட்டவராக, பெரியாருடைய தத்துவங்களுக்கு சில நேரங்களில் எதிராகப் பேசி, இலக்கியம் என்கிற பெயரில், கம்பராமாயணத்தில் பெரிய சுவை காணக்கூடியவர் டி.கே.சிதம்பரநாத முதலியார். டி.கே.சி. என்று அவரை அழைப்பார்கள். கடுமையாக அவரைப்பற்றி கவிதை எழுதி இருக்கிறார், புரட்சிக்கவிஞர் அவர்கள். அப்படிப்பட்ட டிகேசி போன்றவர்களும் கூட, அய்யாவிடத்தில ஒரு பெரிய ஈர்ப்பு. அவருடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட – அய்யாவினுடைய தத்துவத்தினுடைய சிறப்பு என்ன? அவருடைய அணுகுமுறை – அவருடைய பரந்த சிந்தனை – எந்தவிதமான சுயநலமும் இல்லாமல், ஒரு பொதுநலத்தை முன்னாலே நிறுத்தி பணி முடித்த அந்த ஆற்றல் என்பவற்றை வியந்து போற்றுவார்கள். அந்த அடிப்படையில் திரு.வி.க., ஆர்.கே.சண்முகம் போன்றவர்களைப்பற்றி கடந்த சொற்பொழிவில் எடுத்துச் சொன்னேன்.
இந்தச் சொற்பொழிவிலும் ‘‘தமிழர் தலைவர்’’ புத்தகத்திலிருந்துதான் எடுத்துச் சொல்லவிருக்கிறேன். இது ஒரு சுரங்கம் மாதிரி – நிறைய விஷயங்களை எடுத்துச் சொல்லலாம்.
பார்ப்பனல்லாதாரிலேயே மிக உயர்ந்த ஜாதியினர் என்று ஜாதிப் பெருமையைப் போற்றுபவர்கள்!
1927 இல் சுயமரியாதை மாநாடு நடக்கிறது. அதுவும் எங்கே நடக்கிறது என்று சொன்னால், திருநெல்வேலியில் நடக்கிறது. அவையெல்லாம் சைவர்கள் நிறைய இருக்கக்கூடிய, உயர்ஜாதியினருக்குப் பக்கத்தில் நாம் அல்லது அதைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கக்கூடிய, தொண்டை மண்டல துளுவ வேளாளர்கள், சைவப் பிள்ளமார்கள் போன்றவர்கள் இருக்கக்கூடிய, பார்ப்பனல்லாதாரிலேயே மிக உயர்ந்த ஜாதியினர் என்று ஜாதிப் பெருமையைப் போற்றுபவர்கள் வாழுகின்ற பகுதியாகும். அந்த வகையறாவைச் சேர்ந்தவர்தான் டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள். அவர் முற்போக்குக் கருத்துகளையும் சில நேரங்களில் சொல்லி இருக்கிறார். அய்யாவுடைய கருத்துகளை ஏற்கக்கூடியவர். நிகழ்ச்சிகளுக்கு அவரை, அய்யா அழைத்திருக்கிறார்.
சுயமரியாதை இயக்க மாநாட்டில், ஒவ்வொரு காரணத்தையும் வைத்துக்கொண்டு, பலரையும் மாநாட்டிற்கு வரவழைத்து எல்லாரிடத்திலிருந்தும் அந்தக் கருத்துகளைப் பெற்றிருக்கிறார். ‘‘மாற்றுக் கருத்தைப் பேசினாலும் நான் வரவேற்கிறேன். ஏனென்றால், அவருடைய கருத்துகளுக்கு நான் பதில் சொல்கிறேன்’’ என்று அவர், இந்த இயக்கத்தைக் கட்டியது – கொள்கையைப் பரப்பியது என்பது இருக்கி றதே, அதுவே ஒரு தனி தத்துவம் – தனி வரலாறு. அதுவே அவருடைய சிந்தனையினுடைய கூர்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது.
அந்த வகையில் நண்பர்களே, பச்சை அட்டைக் ‘குடிஅரசு’தான் பெரிய அளவுக்குப் புரட்சி செய்த ஒன்று என்பதை எல்லோரும் நாம் அறிவோம்.
அப்படிப்பட்ட பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ ஏட்டில் இருந்து மிக முக்கியமான ஒரு பகுதியைப் பற்றிச் சொல்கிறேன்.
(தொடரும்)
