புதுடில்லி,மார்ச்16- -தொழிலதிபர் கவுதம் அதானியை மேன்மேலும் பணக்காரராக உயர்த்துவதுதான் இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கமா என்று காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் 14.3.2023 அன்று வெளியிட்ட காணொலியில் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்றத்தில் நாட்டின் வெளிநாட்டு கொள்கை குறித்து ஒன்றிய அரசிடம் ஆதாரத்துடன் சில கேள்விகளை எழுப்பினேன்.
அதனை அதானி வணிக விரிவாக்க கொள்கை என்றும் கூறலாம். அந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே அந்தக் கேள்விகளை மீண்டும் கேட் கிறேன்.
எத்தனை வெளிநாட்டுப் பயணங் களில் பிரதமருடன் அதானி சேர்ந்து சென்றுள்ளார்? வெளிநாடுகளுக்குப் பிரதமர் அரசுமுறைப் பயணம் மேற் கொண்ட பின், எத்தனை நாடுகளுக்கு அதானி சென்றுள்ளார்? வெளிநாடு களுக்குப் பிரதமர் சென்று திரும்பிய பின், எத்தனை நாடுகளுடன் அதானி வணிக ஒப்பந்தங்களில் கையொப்ப மிட்டார்?
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டில், குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்தபோது, அவரை ஆஸ்திரேலியா வில் உள்ள குயின்ஸ்லாந்து மாநில மேனாள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெஃப்ரி வில்லியம் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு அதானி முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரேலியாவில் 15.5 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.1.27 லட்சம் கோடி) மதிப்பிலான நிலக்கரி மற்றும் ரயில் திட்ட ஒப்பந்தத்தை அதானி பெற்றார்.
2014-ஆம் ஆண்டு நவம்பரில் ஆஸ்தி ரேலியாவில் ஜி20 நாடுகளின் மாநாட் டில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது, அந்நாட்டுக்கு அதானி சென்றார். இந்தப் பயணத்தில் அதானிக்கு பாரத் ஸ்டேட் வங்கி 1 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.8,200 கோடி) கடன் அளிக்கும் ஒப்பந்தத்தில் அதானியும், அப்போதைய எஸ்பிஅய் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் கையொப்பமிட்டனர். குயின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தைக் கைப்பற்றவே இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
2015-ஆம் ஆண்டு ஜூனில் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி வங்கதேசம் சென்றார். இந்தப் பயணம் மூலம் பெரிய அளவில் அதானி குழுமம் பலனடைந்தது. அந்த ஆண்டு 1,600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க வங்க தேசத்துடன் அதானி பவர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் மூலம், வங்கதேசத்துக்கு மின்சாரம் விநியோகிக்க அதானி பவர் நிறுவனம் அனல் மின் நிலையம் அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் வங்கதேசத்தில் உள்ள விலையைவிட 5 மடங்கு அதிக விலைக்கு மின்சாரத்தை விற்பனை செய்து அதானி கொள்ளையடித்ததாக நிபுணர்கள் தெளிவாகக் குறிப்பிட்டனர்.
2016-ஆம் ஆண்டு ஆளில்லா விமான கருவிகள் துறையில், இஸ்ரேல் நிறுவன மான எல்பிட் ஐஸ்டார், இந்திய நிறுவனமான ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜீஸுடன் அதானி ஒப்பந் தம் ஒன்றை மேற்கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் ஒரு ‘மாயாஜாலம்’ இருந்தது.
அது என்னவெனில் எல்பிட் நிறுவனத்துக்கு எம்அய்-17 ஹெலிகாப்டர்களை பராமரித்து மேம்படுத்தும் ஒப்பந்தத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 110 மில்லியன் டாலர்களாகும் (சுமார் ரூ.900 கோடி).
2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். அப்போது பாதுகாப்பு சாதனங்களை இந்தியா-இஸ்ரேல் கூட்டாக உருவாக்கி ஒத்துழைப்பு வழங்கும் என்று அறிவித்தார். அதற்கு அடுத்த ஆண்டு ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் 500 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.4,100 கோடி) மதிப்பிலான இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட ஒப்பந்தங்கள் அதானி குழுமத் துக்குக் கிடைத்தது.
இதுதொடர்பாக அந்த ஆண்டு ஜூனில், இலங்கை மின்சார வாரியத் தலைவர் எம்.சி.ஃபெர் னாண்டோ கூறுகையில், ‘2021-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி இலங்கை அதிபர் என்னை அழைத்து எரிசக்தி திட்டங்களை அதானி குழுமத்துக்கு அளிக்குமாறு இந்திய பிரதமர் மோடி அழுத்தம் அளிப்பதாகக் கூறினார்’ என்று தெரிவித்தார்.
இதுதான் இந்தியாவின் வெளியு றவுக் கொள்கையா? அல்லது அதானி யின் வணிகத்தை ஒட்டுமொத்த உலகத் துக்கும் விரிவுபடுத்தும் கொள்கையா? அதானியை மேன்மேலும் பணக்கா ரராக உயர்த்துவதுதான் இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கமா?
நாட்டை மாயையில் வைத்துள்ள பிரதமர்:
ஜப்பான், சுவீடன், மலேசியா, ஈரான், சீனா, பாகிஸ்தான் என எந்த நாட்டிலும் ஒப்பந்தம் ஒன்றை பெற போட்டி நடைபெற்றால், அதில் அதானி குழுமம் வெற்றுபெறுவது உறுதி. கடந்த 9 ஆண்டுகளாக இந்தி யாவை ஒரு மாயையின் கீழ் வைத்துள்ள மோடி, உலக நாடுகளுக்குப் பயணிக்கும் போது அதற்காகவே அதானியை தன் பக்கம் வைத்துள்ளார் என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் காணொலியில் ராகுல் காந்தி சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான ஒளிப்படங்களும் இடம் பெற்றுள்ளன.