சென்னை, மார்ச் 16- சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறையின் மாதாந்திரக் கலந்துரையாடல் கூட்டம் 11.3.2023 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தென் சென்னை பகுதி மயிலாப்பூர் தோழர் பவானி இல்லத்தில், அவரது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பங்கேற்ற அனைவரையும் பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழகத் தோழர் தங்கமணி வரவேற்று உரையாற் றினார்.
துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, அஜந்தா, எண்ணூர் விஜயா, யுவராணி, இளவரசி ஆகியோர் முன்னிலையில், உலக மகளிர் நாள் மற்றும் அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் பற்றிய கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, அன்னை மணியம்மையார் ஆற்றிய பணிகளைப் பற்றி தோழர் மணியம்மை எடுத்துரைத்தார்.
“உலக மகளிர் நாள்” பற்றி புதிதாக இணைந்த தோழர்கள் உதவிப் பேராசிரியர் சசிமேகலா அவர்களும், மனநல ஆலோசகர் திருமகள் அவர்களும் வழங்கினர்.
மகளிரின் சமுதாய விழிப்புணர்வை அறிய…
பங்கேற்ற மகளிரின் சமுதாய விழிப்புணர்வை அறிய, சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி செயலாளர் இறைவி பல துறைகளிலும் முதன்மை பெற்று விளங்கிய பெண்மணிகள் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி), நாத்திக இயக்கத்தின் முதல் பெண் தலைவர் அன்னை மணியம்மையார், கள்ளுக்கடை மறியலில் ஈடு பட்டு, காந்தியாரால் பாராட்டப்பட்ட தோழர்கள் நாகம்மையார், எஸ்.ஆர்.கண்ணம்மாள், முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற ரஷ்ய வீராங்கனை வாலண்டினா, இந்தியாவின் கல்பனா சாவ்லா, கல்வி வள்ளல் காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த லூர்து அம்மாள், சென்னை மாநகராட்சியின் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பெண் உறுப்பினர் – அண்ணல் அம்பேத்கர் அவர்களால் சகோதரி என்று அழைக்கப்பட்ட பெண்ணியப் போராளி மீனாம்பாள் சிவராஜ், இவருடன் இணைந்து தந்தை பெரியாருக்கு”பெரியார்” என்று பட்ட மளித்த தர்மாம்பாள், மகாராட்டிர மாநிலத்தின் சமுதாயப் போராளி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சமுதாயப் பெண் குழந்தைகளுக்குத் தன் கணவர் ஜோதிராவ் பூலே யுடன் இணைந்து கல்வி கற்பித்த சாவித்ரிபாய் பூலே, திராவிட பாரம்பரியத்தில் இருந்து முதன்முதலில் ஒன்றிய அமைச்சரான தாழ்த்தப்பட்டோர் சமுதாய வீராங்கனை சத்தியவாணி முத்து ஆகியோரின் படங்களைக் காண்பித்து அவர்களை அடை யாளம் கூறுமாறு மகளிர் அனைவரையும் கலந்துரையாடலில் உற்சாகமாகப் பங்கேற்கச் செய்தார்.
லூர்து அம்மாள் – சத்தியவாணி முத்துவை….
இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை அனைவரும் அறிந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. ஆனால், தோழர்கள் லூர்து அம்மாள் மற்றும் சத்தியவாணி முத்து ஆகியோரை யாராலும் அடையாளம் கூற இயலவில்லை. இவர்களைப் பற்றியும், மற்ற பெண் தலைவர்கள் பற்றியும் கழகத் தோழர்கள் இறைவி, இன்பக்கனி, மணியம்மை ஆகியோர் எடுத்துரைத்தனர்.
நிறைவாக அம்மா சொப்பன சுந்தரி நன்றி கூற, கலந்துரை யாடல் இனிதே முடிந்தது. வருகை தந்த அனைவருக்கும் தென் சென்னை கழகத் தோழர் பவானி இரவு உணவு வழங்கிச் சிறப்பித்தார்.
பங்கேற்றோர்
பா.வெற்றிச்செல்வி, சி.அமல சுந்தரி, கி.மெர்சி அஞ்சலா மேரி, சி.ஹேமாவதி, ம.சீதா, பா.நதியா, பா.மணிமேகலை, க.பண்பொளி, அன்புமணி, க.மாட்சி, வி.வளர்மதி, வி.யாழ் ஒளி, மு.பாரதி பி.அஜந்தா தமிழ்ச்செல்வி, அமுதா, ஜெய் சங்கரி, ஓவியா, சென்னை மண்டல மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, வெ.கா.மகிழினி. பெரியார் பிஞ்சுகள் கலந்துகொண்டனர்.