“சும்மா கதை விடாதே” என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் கதை விடவும் வகை தேவை என்று பல்வேறு நுணுக்கங்களை எடுத்துச் சொல்லி எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு மேலும் தம் எழுத்துகளை செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதிதாக எழுத நினைப்பவர்களுக்கு வழிகாட்டு தலையும், ஊக்கத்தையும் கொடுக்கவும் 11.3.2023 அன்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தால் சென்னை பெரியார் திடல்- அன்னை மணியம்மையார் அரங்கில் சிறுகதைப் பயிற்சிப் பட்டறை சீருடன் நடத்தி முடிக்கப்பட்டது.
சென்னை மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் இருந்து இளையோர் முதல் மூத்தோர் வரையான 65 பேர் காலை 9 மணிக்கு பயிலரங்கினுள் நிறைந் திருந்தனர். நிகழ்வு குறித்த நேரத்தில் தொடங்கி மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு, மாநிலச் செயலர்கள் சிறந்த சிறுகதை எழுத் தாளர் கோ. ஒளிவண்ணன் மற்றும் பகுத்தறிவுப் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் ஆகிய மூவர் குழு சிறப்பாக நிகழ்வைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்தனர். முன்னதாக வந்திருந்த அனைவருக்கும் அடையாள அட்டைகள், நோட்டு, எழுதுகோல் போன்றவை வழங் கப்பட்டன.
எழுதத் தூண்டும் உணர்வுகள்
அனைவரையும் வரவேற்று வரவேற்புரையை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் மா.கவிதா வழங்கினார். தொடக் கத்தில், பயிற்சிப் பட்டறையின் நோக்கத்தையும் பயிற்றுநர்களைப் பற்றியும் சிறப்பாக எடுத்து இயம்பினார் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் வா.நேரு.
முதல் அமர்வு
கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என பல தளங்களில் இயங்கி வரும் படைப்பாளியும் பல்வேறு விருதுகளைப் பெற்றவருமான எழுத்தாளர் சாம்ராஜ் சிறுகதை எழுதுவதற்கான அடிப்படைத் தேவைகள், எழுதத் தூண்டும் உணர்வுகள், காரணிகள், கதைக்கரு உருவாக்குதல், கதையைத் திருத்துதல், செழுமைப் படுத்துதல், மெருகூட்டுதல் என்று பல்வேறு செய்தி களை எடுத்துக்காட்டி பயிற்சியாளர்களின் அய்யங் களுக்கும் விடையளித்தார்.
உன்னிப்பாக கவனிக்க…
மரணத்தின் மூலமும் என்னை அழித்து விட முடியாது என்று இயற்கைக்கு மனிதன் சவால் விடுவதுதான் எழுத்து என்றும், தான் எழுதுவதை தான் மட்டுமே எழுத முடியும் என்று ஒவ்வொரு எழுத் தாளரும் நினைக்க வேண்டும் என்றும், மக்களின் அன்றாடங்களைத் தாண்டி மனதில் பதியும் வகையில் எழுத்துகள் இருக்க வேண்டும் என்றும், எடுத்துக் கொண்ட கரு நம்மை உந்தித் தள்ளி முடிக்க வைக்க வேண்டும் என்றும், எழுத்தாளர்கள் எப்பொழுதும் தம்மைச் சுற்றிய சூழலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பனவாகிய ஏராளமான தகவல்களுடன் பயிற்றுவித்து, களப்பயிற்சியாக காலையில் எழுந்தது முதல் நிகழ்விற்கு வந்து சேர்ந்தது வரை யாரை சந்தித்தோம், என்ன பேசினோம் என்று சுருக்கமாக அனைவரையும் எழுதவும் வைத்தார். புதிய அனுபவம் கொடுத்த உற்சாகமும் தேநீர் இடைவேளையும் ஆர்வமுடன் அடுத்த அமர்வில் பயிற்சியாளர்களை பங்கேற்றக வைத்தது.
இரண்டாம் அமர்வு
சிறந்த சிறுகதை எழுத்தாளரும் பகுத்தறிவுச் சிந்தனையாளருமான தமிழ் மகன் உரையாடல்கள் குறித்து உரையாடினார். கதாபாத்திரங்கள் என்ன வயது? என்ன குணம்? என்பதையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த கதைகளில் வர்ணனைகளைத் தவிர்த்து உரையாடல்களே முதல் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும், முழுக்க முழுக்க உரையாடல்கள் மட்டுமே வைத்து ஒரு பெண் கோபம் கொண்டால் என்ன நேரும் என்பதை தாம் ஒரு கதையாக எழுதி அதற்கு ‘பத்தினி’ என்ற தலைப்பை வைத்ததையும், நம் கதைகளுக்குள் சில வார்த்தைப் பொறிகளை வைக்க வேண்டும் எனவும், மண்ணின் மொழியான வட்டார மொழிகள் உரையாடல்களுக்குச் சுவை கூட்டும் எனவும் பயனுறு தகவல்களோடு பயிற்றுவித்து ஏதேனும் ஒரு கடையிலோ உணவகத்திலோ நாம் என்ன பேசுகிறோம் என்பதை உரையாடலாக அனைவரையும் எழுதச் சொல்லி அவரே வாசித்து இன்னும் அதை எப்படி செம்மைப்படுத்தலாம் என்பதையும் எடுத்துச் சொன்னார்.
தொடர்ச்சியாக, பயிற்சியாளர்கள் பயிற்றுநர்கள் என அனைவரும் மகிழ்ச்சியோடு குழுப்படம் எடுத்துக்கொண்டனர். தோழர்கள் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல், சுரேஷ் உள்ளிட் டோரின் ஏற்பாட்டில் சுவையான மதிய உணவு அனை வருக்கும் வழங்கப்பட்டது.
பிற்பகல் அமர்வு
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலரும், இந்த நிகழ்வைச் சிறப்பாக வடிவமைப்பு செய்தவரும் மேடையில் பேசலாம் வாங்க போன்ற புத்தகங்களையும், ஒளிவண்ணன் சிறுகதைகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளை எழுதியவரும், யாவரையும் ஈர்க்கும் பேச்சாளருமான கோ.ஒளிவண்ணன் தமக்கே உரித் தான நகைச்சுவை உணர்வால் பயிற்சியாளர்களை புத்துணர்ச்சியுடன் இறுதிவரை நீடிக்க வைத்தார். தான் கண்ட கனவுகள், தன்னைச் சுற்றி இருக்கிற கதா பாத்திரங்கள், தான் படித்த கதைகள் எப்படி தன்னை ஒரு சிறுகதை எழுத்தாளராக மாற்றி இருக்கிறது என்ற அனுபவங்களையும் தான் எழுதிய ‘எக்ஸ்க்யூஸ் மீ எங்க வீடு எங்கே இருக்கிறது?’ என்ற கதையைப் பற்றியும், அதை பலர் பாராட்டியதையும் எடுத்துச் சொல்லி மிக முக்கியமாக நிகழ் நொடியில் வாழ்ந்து சுற்றி நடப்பவற்றை கூர்ந்து கவனித்து எழுத வேண்டும். எதையும் நாமாகவே சொல்லி விடாமல் சிறப்பாக வேறொன்றைச் சொல்லிக் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் சிறந்த கருத்துகளை இந்த சமூகத்தில் விதையாக தூவுகிற வேலையை நம் கதைகள் செய்ய வேண்டும் எனவும் சிறுகதை எழுதுவதற்கான சில உத்திகளையும் கூறி சுவையாகப் பயிற்றுவித்தார்.
போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
தொடர்ந்து சென்ற ஆண்டு(2022) பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக நடத்தப்பட்ட எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணண் நினைவு சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மயிலாடு துறை தளபதிராஜ், இரண்டாம் பரிசு பெற்ற பெங்களூரு மலர்விழி அன்புவேல் (அவரின் சார்பாக லோ.குமரன்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் சாம்ராஜ் மற்றும் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் இணைந்து பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர். மூன்றாம் பரிசு பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த முனைவர் நடராஜா ஜெயரூபலிங்கத்திற்கு பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
முடிவாக, இந்தப் பயிற்சிப் பட்டறை – எழுது வதற்கான ஒரு தொடக்கத்தை என்னுள் விதைத்தது என்றும், வாழ்வில் பயனுள்ள நாளிது – என்றும் பலரும் தம் கருத்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கி, நாம் எழுதும் எழுத்துகள் கிஞ்சிற்றாவது இந்தச் சமூகத்திற்கு பலன் அளிக்கும் படியாக அமைய வேண்டும் என்பதுதான் முதன்மையானது என்று சிறப்பான வழிகாட்டுரையையும் வழங்கினார்.
இறுதியாக நிகழ்வுகளைத் தொகுத்து நன்றி தெரிவித்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச்செயலாலர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் உரையாற்றினார். அன்று முழுவதும் சுவைத்த பல்வேறு செய்திகளுடனும் சுவையான தேநீருடனும் பயிற்சிப் பட்டறை இனிதே நிறைவடைந்ததோடு அடுத்து எப்போது எங்கே இதுபோல் நடக்கும் என்ற ஆவலையும் அனை வருக்கும் தூண்டியது என்றால் மிகையல்ல.
தொகுப்பு: கவிஞர் ம.கவிதா,திருப்பத்தூர்