(அறுசீர் விருத்தம், அரையடிக்கு வாய்ப்பாடு: காய் மா காய்)
முன்னத்தி ஏரும் சென்றவழி
முழுதாய்ச் சென்றார் கலைஞருமே
விண்தனில் எழுந்த கதிரோனாய்
விரைந்திங்கு வந்தார் கலைஞருமே
மண்தனிலே இருந்த இருளகற்ற
மாற்றத்தைத் தந்தார் மறையோனாய்
வெண்தாடி வேந்தர் வழிதனிலே
விரைந்திங்கு வந்தார் துயர்துடைக்க.
சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைச்
சாதியத்தின் தீமை களையெல்லாம்
சமூகத்தில் உள் மக்களெல்லாம்
சமமாக என்றும் வாழ்ந்திடவே
சமூகத்தில் ஏற்ற மாற்றத்தை
சாமானி யனுமே பயனுறவே
சமூகத்தில் உள்ள இருளகற்ற
சரித்திரமாய்க் கலைஞர் வந்தாரே.
பகுத்தறிவுக் கொள்கைக் கொண்டிங்கே
பகலோனாய் மக்கள் அனைவருக்கும்
வகுத்தாரே சமூக நீதியினை
வனைந்தாரே புதிய தமிழகத்தை
பகுத்தறிவின் துணையால் அனைவருக்கும்
படிப்படியாய் மக்கள் வழிகளையே
தொகுத்தளித்தார் சிறந்த வழிகளையே
தோழமையாய் நாமும் பயனுறவே.
தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருமே
தத்தமது உரிமைப் பெறவேண்டி
வீழ்த்தப்பட் டமக்கள் வாழ்க்கையுமே
விருட்சமாக மண்ணில் நிலைப்பெறவே
சூழ்ந்திங்கு வந்த எதிர்ப்புகளை
சுடிலென மாறி ஒழித்திட்டார்
காழ்ப்புணர்ச்சிக் கொண்டு வஞ்சித்தோர்
காணாமல் ஓடச் செய்திட்டார்
தன்மானத் தந்தை வழியினிலே
தரணியிலே வந்தார் கலைஞருமே
தென்னகத்தின் சூரி யனாயிங்கே
தெளிவுடனே சமூக நீதியினை
பொன்னெனவே மக்கள் பயனுறவே
பொலிவுடனே திட்டம் பலதீட்டி
மண்தனிலே ஒடுக்கப் பட்டோரை
மாமனித னாக மாற்றினாரே.
– இரா.மதனகோபாலன், தருமபுரி