சென்னை பூங்காக்களில் பசுமை பரப்பு பணிகள் உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி நேரில் ஆய்வு!

2 Min Read

சென்னை, ஜூன் 27- சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் அகற்றப் பட்ட நிலையில், திரு.வி.க பூங்கா, நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்கா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் பசுமை பரப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி நேற்று (26.6.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகளுக்காக இப்பூங்காக்களில் இருந்த பசுமை பரப்பு சேதமடைந்தது. இதனை மீண்டும் உருவாக்கி, அங்குள்ள வசதிகளை உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், இப்பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்க ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுப் பணிகள்

அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள திரு.வி.க பூங்காவின் பசுமைப் பரப்பை ஆய்வு செய்த நீதிபதி, அதனைத் தொடர்ந்து முறையாக பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், இப்பூங்காவின் வெளிப்பகுதியில் உள்ள புல்லா அவென்யூ சாலையில் ரூ.52.68 கோடி மதிப்பீட்டில், 1600 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் நவீன நடைபாதை வளாகப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

நேரு பூங்கா: தொடர்ந்து அண்ணாநகர் நேரு பூங்காவில் ஆய்வு செய்த நீதிபதி, அங்கு புதிய மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

பனகல் பூங்கா: கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பனகல் பூங்காவில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளைப் பார்வையிட்ட அவர், பணிகள் நிறைவடைந்ததும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பசுமை பரப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ஒரு மரத்திற்கு
12 மரக்கன்றுகள் திட்டம்

மெட்ரோ ரயில் நிலையப் பணிகளுக்காக போட் கிளப், நந்தனம், பனகல் பூங்கா, கோடம் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பசுமைக் குழுவின் அனுமதியுடன் 278 மரங்கள் அகற்றப்பட்டன. அதற்குப் பதிலாக, ஒரு மரத்திற்கு 12 மரங்கள் என்ற வீதத்தில் 3,745 மரக்கன்றுகள் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மீனாட்சி கல்லூரி, அம்பேத்கர் சட்ட கல்லூரி மற்றும் லேடி வெலிங்டன் கல்லூரி ஆகிய இடங்களில் 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், திட்டப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வேரோடு எடுக்கப்பட்ட 137 மரங்கள் லேடி வெலிங்டன் கல்லூரியில் மறுநடுகை செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்களைக் கேட்டறிந்த நீதிபதி, நடப்பட்ட மரக்கன்றுகளை பசுமை மாறாமல் பராமரிக்கவும், மெட்ரோ பணிகள் முடிந்ததும் பூங்காக்களில் பழையபடி பசுமைப் பரப்பை உருவாக்கவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் ராம் குமார், மாநகராட்சி ஆணையர் சமீரன், மத்திய வட்டார துணை ஆணையர் கவுஷிக், போக்குவரத்து காவல் துணை ஆணையர்கள், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணைய வழக்குரைஞர் செவனன் மோகன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *