புத்தர் கி.மு.563-இல் பிறந்தார். தந்தை சுத்தோதனன். கபில வாஸ்த்து அவருடைய ராஜ்யம் மிகவும் செல்வாக்கான சூழ்நிலையில் பதினாறு பதினேழு வயதுவரை சாவு, கஷ்டம், துன்பம் என்றால் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்தார். ஒருநாள் அரண்மனையை விட்டு தப்பி ஓடி ரகசியமாக ஊரைச்சுற்றி பார்த்தபோது தள்ளாடும் கிழவர்களைப் பார்த்தார். நோயாளிகளைப் பார்த்தார்; இறந்த உடல்களின் கடைசிப்பயணத்தை பார்த்தார். புத்தர் மனத் தில் ஒரு பூகம்பமே வெடித்தது. பிறப்பு என்றால் என்ன? முதிர்வு என்றால் என்ன? சாவு ஏன் வருகின்றது? சாவுக்குப் பிறகு என்ன இருக்கின்றது? என்ற இவைகள் சித்தார்த்தனை குடைந்தன. தனது மாமன் மகள் யசோதரையை மணந்தார். ராகுலன் என்ற குழந்தை பிறந்த போது “ஓ! அறுபடவேண்டிய இன்னும் ஒரு தளை” என்று கவலையோடு நினைத்தார். ஒருநாள் இரவு தூங்கும் தனது மனைவியையும், குழந்தையையும் முத்தமிட்டு பிரிந்து காரிருளில் காடுகளில் மறைந்தார்! அதன் பிறகு கடுமையான பல ஆண்டு கெட்டலைந்த சீரழிவிற்குப் பிறகு புத்தராகத்தான் தெரிகின்றார்! இருபத்தி ஒன்பது வயதில் இளமையின் இனிமைகள் கொஞ்சித்தழுவிக் குலாவும் கோடி சுக பேரெழிலைத் துறந்து அந்த இளநெஞ்சின் தீரத்தில் உல கின் சரித்திரத்தை மாற்றி எழுதும் உற்சாகத்தின் உத்வேகம் நிச்சயம் தெரிகின்றது.
பெரியாரும் புத்தரும் செல்வந்த சூழ்நிலைகளிலேயே பிறந் தவர்கள். தொண்டு வாழ்க்கைக்கு வந்திருக்க வேண்டியவர்கள் அல்ல. ஆனால், இளமை முதலே தொண்டு வாழ்க்கையில் அபார ஈடுபாடு காட்டினார்கள். புத்தரின் மகன் ராகுலன் பிறந்தபோது சொல்லும் வார்த்தையும் பெரியாரின் மனைவி நாகம்மை இறந்த போது சொல்லும் வார்த்தையும் இரண்டாயிரம் ஆண்டு இடை வெளிக்குப் பிறகு மிக மிக ஆச்சரியமாக ஒரே மாதிரி ஒலிக்கின்றன! இன்னும் ஒரு தளை! ஒருபாரம் – ஒருசுமை என்று உறவுகளை நினைக்க வேண்டுமானால் போர்வீரனின் வெறித்தனத்தோடு பொதுத்தொண்டில் ஈடுபாடு உள்ளவர்களால்தான் அது முடியும். பாமர மக்களின் பாமரமொழியில் பேசி சஞ்சாரியான, நீண்ட தொண்டு வாழ்க்கை வாழ்ந்ததில் பெரியாரும் புத்தரும் ஒன்றே – ஒப்புமை இங்கே முடிந்து விடுகின்றது.
புத்தர் அசைத்தது ஒரு கிளை
புத்தர் கடவுளை எதிர்க்கவில்லை; ஆத்மாவை எதிர்க்க வில்லை; மோட்சத்தை எதிர்க்கவில்லை. ஆனால், இவைகளுடன் பார்ப்பனர்களுக்கு இருக்கும் பிணைப்பை எதிர்த்தார். ஆனால் பெரியார்? ஓ! அவர் ராட்சதர்களுக்கு எல்லாம் மகாராட்சதர் ஆன ராட்சத சக்ரவர்த்தி! கடவுள், பேய், பிசாசு, ஆத்மா, மோட்சம், பிதிர் லோகம், திதி திவசம், என்று – பார்ப்பன சுரண்டல் கூடாரத்தின் நடுத்தூண், கடைத்தூண், உத்திரம், ஜன்னல், கூரை, அஸ்திவாரம் அத்தனையையும் பிய்த்து எறிந்தார்! பக்கம் பக்கமாக. பார்ப்பன மாளிகைக்கு பந்தம் பந்தமாகி பெரியார் இட்ட தீ அடடா, அதை எப்படித்தான் விளக்குவது? ஓங்கார தீபமாக, ஒலி எழுப்பி பல முனையும் எரிகிறது! தொடர்ந்து எரிகிறது. கடைசி மூளை அணு இருக்கும்வரை அந்த அறிவுத் தீ எரியவே செய்யும்! இதனால் பார்ப் பனர்களின் நெஞ்சு இப்போது மீண்டும் எரிகின்றது. பார்ப்பனர் நெஞ்சுக்குப் பக்கத்தில் நெருப்புப் பந்தத்தை, புத்தர் பிடித்தார் – பிறகு அசோகன் ஆளுமையுடன், பரவலாக எங்கும் பிடித்தார்; பிறகு இரண்டாயிரம் ஆண்டு இருண்ட காலத்திற்குப் பிறகு பெரியார் படு தீவிரமாகப் பிடித்தார்! இன்று பார்ப்பனர் அடைத்த வீடுகளுக் குள்ளே புழுங்கிச் சாகிறார்கள். கட்டிய வேட்டிக்குள்ளே நடுங்கிச் சாகிறார்கள். இதே நிலை புத்தர் காலத்திற்குப் பிறகும் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டது.
– சங்கமித்ரா அவர்கள் எழுதிய
“பார்ப்பனர்கள் அழித்த இந்திய சாம்ராஜ்ஜியங்கள்” என்ற நூலிலிருந்து… பக்கம் 15 -16