பெண்களுக்கு எதிரான பாலியல், வரதட்சனை கொடுமைகள் அதிகரிப்பு
புதுடில்லி,மார்ச்19- தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சனை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பெறப்படும் புகார்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது என ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்தார்.
இது தொடர்பான கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:
தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சனை தொடர்பாக கடந்த 2020-ஆம் ஆண்டில் 330 புகார் களும், 2021-ஆம் ஆண்டில் 341 புகார்களும், கடந் தாண்டில் 357 புகார்களும் பெறப்பட்டன. பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்பாக 2020-ஆம் ஆண்டில் 1,236 புகார்களும், 2021-ஆம் ஆண்டில் பெரிய ஏற்றத்துடன் 1,681 புகார்களும், கடந்தாண்டில் 1,710 புகார்களும் பெறப் பட்டன. மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் வரதட்சினை, பாலியல் வன்கொடுமை முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தேசிய பெண்கள் ஆணையத்தில் பதியப்படும் புகார்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
பெண்கள் தொடர்பான குற்றங்களை விசாரிக்க 411 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் உள்பட 764 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களில் சுமார் 1,98,000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில் ஒன்றிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.