* தந்தை பெரியார்
மீள்வாசிப்பு – ஓர் பார்வை!
ஆலடி எழில்வாணன்
தந்தை பெரியார் அவர்களின் பல படைப்புகளில் மிகவும் முக்கியமான படைப்பாக இன்றும் கருதப்படுவது, அவர் 1942இல் எழுதி வெளியிட்ட, “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகமே என்றால் அது மிகையாகாது. இந்தப் புத்தகம் இதுவரை மூன்று லட்சம் பிரதிகளுக்கும் மேலாக அச்சிட்டு விற்பனையாகி உள்ளதை நினைக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு புத்தகம் 81 ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது எனில் அதில் உள்ள கருத்துகளும், சில தகவல்களும் இன்றும் பொருந்துகிறது என்பதே விடையாகிறது. சமீபத்தில் மார்ச் 8 2023, நமது அய்ன்ஸ்டீன் கல்லூரிகளில் மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது சுமார் 600 மாணவிகளுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தை அன் பளிப்பாக வழங்கியபோது மீண்டும் இதனை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இழையோடியது. பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப்புத்தகத்தை வாசித்திருந்தாலும் மீள்வாசிப்பு செய்யும்போது தந்தை பெரியார்மீது பற்றுதல் அதிகமாகிறது.
பெண்ணுரிமையைப் பெரியார் கையாண்டுள்ள விதம், பெண்கள் ஏற்றமடைய வேண்டிய இன்னும் பல துறைகள் மற்றும் உரிமை பெற வேண்டிய பல விடயங்களை எல்லாம் இப்புத்தகத்தால் நம்மால் எளிதாக உணர முடிகிறது. பெண்ணுரிமை, பெண் முன்னேற்றம் மற்றும் பெண் பாதுகாப்பு போன்ற வற்றால் சமுதாயம் அடையும் நன்மை மற்றும் சம நிலையை சிறப்பாக எடுத்துரைக்கிறார் தந்தை பெரியார்.
கற்பு, வள்ளுவரும் – கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவை விவாக விளக்கம், சொத்துரிமை, கர்ப்பத்தடை மற்றும் பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும் போன்ற 10 தலைப்புகளில், சுமார் 80 பக்கங்களில் அடக்கி தனது சிந்தனைகளையும், கருத்துகளையும் மிக அருமையாக எடுத்துரைக்கிறார். தந்தை பெரியார் ஒரு மாபெரும் சிந்தனையாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதையும் இப்புத்தகம் நிரூபிக்கிறது. நாம் பெண்களைப் பற்றி நெருடலாக, உணர்ச்சிப்பூர்வமாக நினைக்கும் சிலவற்றை நெற்றிப்பொட்டில் அடித்தால் போல் நேரிடையாக எழுதித் தனது பேனாவை சாட்டையைப் போல சுழற்றியுள்ளார் தந்தை பெரியார்.
தமிழ்நாடு இன்று பல துறைகளில் முன்னிலை அடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணமாக தந்தை பெரியார் குறிப்பிட்ட சமூக நீதியும், பெண்ணுரிமையும் விளங்குகின்றன. திராவிட இயக்கங்கள் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றைக் கொள்கை களாக ஏற்று ஆட்சியளவில் செயல் படுத்தியதன் பலனை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். தமிழ்நாடு மேன்மேலும் ஏற்றமடைய இன்னும் பெரி யாரின் சிந்தனைகள் செயலாக்கமாக வலுவடைய வேண்டும், விரிவடைய வேண்டும்.
“பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தில் நான் ரசித்து வியந்த சில வரிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
“அங்க அமைப்பிலன்றி, அறிவின் பெருக்கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்குள் ஏற்றத் தாழ்வான வித்தியாசம் எதுவும் காண இயலுமா? இயலவே இயலாது.”
1921ஆம் ஆண்டின் ஜனசங்கி செய்திப்படி ஹிந்துக் கைம்பெண்ணின் தொகையினை நோக்கு கையில், அய்யகோ! என் நெஞ்சம் துடிக்கின்றது!
1 முதல் 5 – 11,892
5 முதல் 10 – 85,937
10 முதல் 15 – 2,32,147
15 முதல் 20 – 3,96,172
20 முதல் 25 – 7,42,820
25 முதல் 30 – 11,63,720
ஆக மொத்த விதவைகள்: 26,326,788
பெண்களுக்கு தொழில், படிப்பு ஆகிய இரண்டும் பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டு விட்டால் பணம் சம்பாதிக்கும் சக்தி வந்துவிடும். பின்னர் தங்கள் கணவன்மார்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கவும் அல்லது பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கணவனோடு சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தக்கூடிய தன்மையும் உண்டாகிவிடும்.
எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழி களுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பன ரல்லாதவர்களுக்கு சமத்துவம் கிடைக்குமா? என் பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.
“பல தலைமுறைப் பழக்கத்தால் பெண்கள் அக்கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றனர்” என்று நாம் எழுதியிருப்பதும், அதைத் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் தாழ்ந்த நிலையை ஏற்றுக்கொள்வது போலாகும்.”
சமீபமாக சில காட்சிப் பதிவுகளை கண்டு வியந்துள்ளேன். குறிப்பாக திருமணமான பெண்கள் புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது பிறந்தவீடு பாசத்தால் உணர்ச்சிப் பிழம்பைப் பிரதிபலிக்கும் காட்சிப் பதிவுகளை பார்த்திருப்பீர்கள். பெண்கள் மீது அதிகமாகப் பாசமழை பொழியும் ஆண்கள் அவர் களுக்கான உரிமை என்று வரும்போது, “பாசத்தை வெளிப்படுத்தும் அளவிற்கு உரிமையை வழங்குவது இல்லை” என்பதை நம்மால் உணர முடிகிறது.
பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது, “பெண்கள் இதனை வாசிக்க வேண்டும்; அதேபோல் ஆண்களும் இப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்” என்ற எண்ணமே மேலோங்குகிறது. புத்தகத்தை வாசிக்க விரும்பு கிறவர்கள் என்னை நேரில் தொடர்பு கொண்டால் இப்புத்தகத்தை பகுத்தறிவுப் பரிசாக வழங்கி மகிழ்வேன்.
தந்தை பெரியார் ஒரு தீர்க்கதரிசி.
பெரியாரை போற்றுவோம் – பெரியாரை பின்பற்றிடுவோம்