தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாள் ‘பொங்கல் விழா’ தமிழர்களால் மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள், புத்தொளியாக்கிய தம் இல்லந்தோறும் புதுப் பானையில் நீரிட்டு, புத்தரிசியிட்டு அடுப்பிலேற்றி, நெருப்பேற்றிப் பொங்கலோ பொங்கலெனப் பொங்கிவரும் வேளையில் முழக்கமிட்டு, குலவையிட்டுப் பொங்கலிடுவர். குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் திளைத்திடும், உற்றார், உறவினர், தெருக்காரர், ஊர்க்காரர் என அனைவரிடமும் “பொங்கியதா பொங்கல்?” என வினவி, விடை கிடைத்து மகிழ்வர்.
இன்னொரு சிறப்பு என்னவென்றால், வெளி நாட்டுக்காரர்கள் குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்தி ரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் அந்நாட்டு மக்கள் (தமிழர்கள் அல்லர்) ஆண்டு தோறும் இப்பொங்கல் காலத்தில் பொங்கல் நாளன்றோ, அதற்கு முந்தைய கிழமைகளிலோ தமிழ்நாட்டின் தென்பகுதியான சாயர்புரம் போன்ற பகுதிகளுக்குச் சென்னையிலிருந்து ஆட்டோக்கள் மூலம் பல குடும்பங்கள் வருகை தந்து இங்குள்ள தமிழர்களின் வரவேற்புடன் மரங்கள் நிறைந்த தோட்டங்களில் பொங்கலிட்டு மகிழ்ந்து, குலாவி, விருந்துண்டு தாயகம் திரும்புகின்றனர். அவ்வேளை கன்னியாகுமரி வரை சுற்றுலா சென்றும் உள மகிழ்வோடு ஊர் திரும்புகின்றனர். இதிலொரு பெருமைப்படும்படியான சிறப்பு என்னவெனில் ஆர்வத்துடன் தாங்களாகவே விருப்பப்பட்டுத் தமிழர்களின் வேட்டி, சேலை உடுத்தி, அதன் பின்னரே பொங்கலிடுகின்றனர்.
காலங்காலமாக வந்து செல்லும் இக்குழுவில் முதியோர் முதல் சிறு பிள்ளைகள் வரை வருவதுண்டு. இவ்விழாவில் தமிழர்களால் அவர் களுக்கு எந்த இடையூறும், அவமானமும் ஏற்பட்ட தில்லை; ஏற்படுத்தியதில்லை. மரியாதையோடு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர் களும் உளம் மகிழ்ந்து, முழு மனநிறைவோடு, பிரியா விடைபெற்றுத் திரும்புவதால் மீண்டும் அந்நாளை எதிர்நோக்கி வருகிறார்கள். ஏன்? தமிழரின் விருந்தோம்பிடும் பண்பு அப்படிப்பட்டது. வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்திட. பிறரை நேசிக்கத் தெரிந்தோர் தமிழர். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்னும் குறள் வழிப்பட்டு வாழ்பவர். தம் விழாக்களில் பலரையும் கூட்டி மகிழ்வுறச் செய்து வாழ்வாரேயொழிய மனநோவு எற்படச் செய்திட மாட்டார். தமிழர் கற்றுக் கொண்ட நெறி சுயமரியாதை நெறி, பகுத்தறிவு நெறி, மதவெறியல்ல. ‘பண்டிகை’ எனப்படுவது பலரும் கூடி, ஆடிப்பாடி, மகிழ்ந்து கொண்டாடுவதாக இருக்க வேண்டுமேயொழிய பிறரைத் தாக்கி அவமானப்படுத்துவதாக இருக்கக் கூடாது. ஆரியர், கண்ட ‘பண்டிகைகள்’ அனைத் துமே வன்முறை சார்ந்ததே. ஹோலி என்பதே வண்ணப் பொடிகளைப் பிறர் மீது வீசியடிப்பதால் அவரின் கண் பார்வை பாதிக்கப்படுமே என்பது தெரியாததா? தெரியும். தெரிந்தே கண்டுபிடித்த தாகத்தான் இருக்கும். விழாவைப் பொருளோடு கொண்டாடினால் ஜப்பானியத் தோழியருக்கு அவமானம் ஏற்பட்டிருக்காது. வடவர் தீங்கான வரல்லர். தீமைக்குள்ளாக்கியது அவர்கள் ஏற்றிட்ட மதமும், அதனின் நடைமுறையுமே. மதம் மனிதனை மிருகமாக்கிடவே செய்யும். அதிலும் சனாதன ஹிந்து மதம் மிருகத் தன்மையிலேயே திளைத்தது. அதற்கோர் சான்றே இவ்விரு நிகழ்வுகளும்.
– மா.பால்ராசேந்திரம், சிவகளை