சென்னை,மார்ச் 22- தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேற்று (21.3.2023) சட்டமன்றத்தில் மூன்றாவது ஆண்டாக வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக் கையை காகிதமில்லாத நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்தார். வேளாண் நிதிநிலை அறிக்கையை தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரசு
கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல் வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப் பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உணவு தானிய உற்பத்தியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தன்னிறைவு பெறுகிற நிலை இருக்கிறது. கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் அய்ந்து மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய் யப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
கடந்த ஆட்சிக் காலங்களில் விவசாயிகள் மின் இணைப்பு பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருந்த அவலநிலை மாறி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்க அதற்குரிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டின் நினைவாக இருக்கிற பனை மரங்களை அதிகரிக்க 10 லட்சம் விதைகள் விநியோகிக்க பனை மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 15 லட்சம் தென்னங்கன்றுகள் 2500 கிராமங்களில் இலவச விநியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூபாய் 82 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்படுகிற போது, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 2337 கோடி நிதி ஒதுக்கப் பட்டிருக்கிறது. பயிர் சாகுபடி சந்தேகங்களை விவசாயிகள் கேட்டு தெளிவு பெற வட்டாரத்திற்கு ஒரு விஞ்ஞானியை நியமனம் செய்வது மிகுந்த வரவேற்புக்குரியதாகும். தகவல் தொடர்பில்லாத கிராமப்புற விவசாயிகள் நவீன முறையில் சாகுபடி செய்ய இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கிற உணவு தானியங்களை சந்தையில் விற்பனை செய்து, நியாய விலை பெறுவதற்கு இத்திட்டம் உதவியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் வேளாண் துறையில் சாகுபடி பரப்பை விரிவுபடுத்தி, உற்பத்தியை பெருக்குகிற நோக்கத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவித்த வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர் களை மனதார பாராட்டுகிறேன். வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்ற வாக் குறுதியை நிறைவேற்றி சாதனை படைத்து வருகிற தமிழ்நாமி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
வைகோ எம்பி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண் மைத் தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகிறது. உணவு தானிய உற்பத்தியில் இலக் கைத் தாண்டி சாதனை படைத் துள்ள தமிழ்நாட்டில், விவசாயி களை ஊக்குவிக்க பல்வேறு திட் டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட் டுள்ளன. வேளாண் பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு சங்கங் களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு; இலவச மின்சாரம் வழங்க ரூ.6536 கோடி ஒதுக்கீடு; பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மானியம் ரூ.2337 கோடி ஒதுக்கீடு; காவிரிப் படுகை மாவட்டங்களில் நாகை – திருச்சி வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு; மேலும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 2,504 கிராம ஊராட்சிகளுக்குச் செயல்படுத்த ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிதி ஒதுக்கீடுகளால் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும். 60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், ஆதி திராவிட, பழங்குடியின சிறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 விழுக்காடு மானியம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை. பனை, தென்னை, வாழை, பலா, மிளகாய், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி மற்றும் மல்லிகை, முருங்கை, குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களால் வேளாண்மைத் தொழில் புத்தாக்கம் பெறும்.
நுண்ணீர் பாசன முறையை நிறுவ ரூ.450 கோடி மானியம் வழங்குவதும், ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயம், சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பயன்பெறவும் திட்டங்கள் அறிவித்து இருப்பதும் பாராட்டுக் குரியவை ஆகும். இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் பெயரில் அய்ந்து இலட்ச ரூபாயுடன், பாராட்டுப் பத்திரம் குடியரசு நாள் விழாவில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும்.
அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட பத்து வேளாண் விளைபொருட்களுக்கு உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளிக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறை வளர்ச்சி மற்றும் உணவு உற்பத்திப் பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன்
வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பு தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள், வேளாண்துறை வல்லுநர்களின் கருத்துக்களை அமைச்சர் நேரடியாக கேட்டறிந்ததும், கருத்துக் கேட்புக் கூட்டங்களில் வந்த கருத்துக்களை பிரதி பலிக்கும் வகையிலும் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை இந்த மாநிலத்திலேயே உற்பத்தி செய்ய ஊக்குவிப்பு திட்டம், முக்கிய வேளாண் பொருள் களுக்கு புவிசார் குறியீடு பெறுவது, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட் கள் தட்டுபாடின்றி எல்லாக் காலங்களிலும் சீராக கிடைக்கச் செய்வது, அதிகமாக விளையும் பயிர்களை கருத்தில் கொண்டு, அவைகளை மதிப்புக் கூட்டி மேம்படுத்தும் தொழில்களை தொடங்குவது, விவசாயிகளுக்கு ஆலோசனை கூற வட்டாரத்துக்கு ஒரு விஞ்ஞானி நியமனம் செய்வது என்று பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரும்பு, நெல் போன்ற வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு ஊக்குவிப்புத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு அறிவித்துள்ள ஊக்கத் தொகை மேலும் அதிகரிக்க வேண்டும். விவசாய கிணறுகளுக்கான மின் இணைப்பு, மும்முனை மின்சாரம் வழங்கல், நீர்வளத்துறை மேம்பாடு, அங்கக வேளாண்மை ஊக்குவிக்க “நம்மாழ்வார் விருது”, பயிர் கடன் வழங்க நிதி, வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம், பத்து லட்சம் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதன் மூலம் காலநிலை சீரமைப்புக்கு உதவுவது என அனைத்துத் தரப்பினரும் மகிழ்ந்து வரவேற்கும் நிதிநிலை அறிக்கை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், வேளாண்மை – உழவர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.