தோழர் கே. பகத்சிங்
நம்முடைய முன்னோர்கள் ஏதோ உயர்ந்த வஸ்துவான சர்வசக்தியுள்ள கடவுள்மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருந்தவர்களென்கிற காரணத் திற்காக, யாரேனும் ஒருவன் அந்த நம்பிக்கையின் உண்மையை மறுக்கத் துணிந்தால், அல்லது அந்த சர்வ சக்தி பொருந்திய வஸ்துவை மறுப்பதற்குத் திடங்கொண்டால், அவன் மதத்துரோகியென்றும் விசுவாச காதகனென்றும் பழித்துரைக்கப்படுகின்றான். அவனுடைய வாதங்கள், எதிர்வாதங்களால் அசைக்க முடியாத ஆணித்தரமானவைகளாயிருந்தால் அவனு டைய உணர்ச்சி பயங்கரமான கஷ்ட நிஷ்டூரங்களா லும் சர்வசக்தியுள்ள கடவுளின் கோபாக்கினியாலும் சிதறடிக்கப்படாத வன்மையுடையதாயிருந்தால், அவனை அகங்காரம் பிடித்தவனென்றும், அவனு டைய உணர்ச்சியைத் தற்பெருமை கொண்டதென்றும், எள்ளி இழித்துத் தூற்றுகிறார்கள். பின்னர் ஏன் இவ்வாத்திக சிகாமணிகள்- இந்த வீண் வாதத்தில் காலங்கடத்த வேண்டும்? சகல விஷயங்களையும் பூராச்சங்கதிகளையும் பூரணமாகத் தர்க்கித்துவிட ஏன் முயற்சி செய்யவேண்டும்? முதன் முதலாக இப்பொழுதுதான் பொதுமக்களுக்கு இத்தகைய கேள்விகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. முதன் முதலாக இப்பொழுதுதான் பொதுமக்களால் இது காரி யானுஷ்டானத்திலும் கையாளப்படுகிறது. எனவே இவ்விஷயத்தை விரிவாக ஆராய்ச்சி செய்ய நேரிட்டிருக்கிறது.
***
முன்னேற்றத்தை நாடும் எந்த மனிதனும் பழைய மதத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அலசி அலசி ஆராய்ச்சி செய்து தீரவேண்டும். பழைய கொள்கை களையும் கோட்பாடுகளையும் போட்டிக்கழைத்துத் தீரவேண்டும். பிரஸ்தாபத்திலிருக்கும் மத சம்பிர தாயங்கள் ஒவ்வொன்றுக்கும் – எவ்வளவு அற்ப சொற்பமானதாயிருந்தாலும் – காரண காரியங்கள் கண்டுபிடித்துத் தீரவேண்டும்.இவ்விதமாக ஆழமாய் ஆராய்ச்சி செய்தபின், ஒருவன் ஏதேனுமொரு கொள்கையை அன்றி, கோட்பாட்டை நம்பும்படி நேர்ந்தால், அவனுடைய நம்பிக்கை தப்பும் தவறு முடையதாக, தவறான வழியில் செலுத்தப்பட்டதாக, மயக்கம் நிறைந்ததாக இருக்கலாம். இருந்தபோதிலும் அவன் சீர்திருத்தமடைவதற்கு இடமுண்டு. ஏனென்றால், பகுத்தறிவே அவனுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக ஒளிர்கின்றது.
***
தரித்திரமும், மூடத்தனமும் தலைவிரித்தாடும் ஒரு தோட்டியின் குடும்பத்திலோ அன்றி, ஒரு சாமர் ஜாதிக்காரன் (தீண்டக் கூடாதவன்) குடும்பத்திலோ ஒரு மனிதன் பிறந்தால் அவன் கதி என்னவாகும்? அவன் பரம ஏழை. ஆகையால் படிப்பது அசாத்தியம். ஜாதித் திமிர் கொண்ட மேல்ஜாதிக்காரர்களால் அவன் வெறுத்து ஒதுக்கப்படுகிறான். அவனுடைய மூடத்தனம், அவனுடைய தரித்திரம், அவன் நடத்தப்படுகின்ற தன்மை இவையெல்லாம் ஒன்றாகி, சமுதாயத்தை வெறுக்கும்படியான நிலைமைக்குக் கொண்டுவந்துவிடுகின்றன. அதன் காரணமாக அவன் குற்றஞ் செய்கிறானென்று வைத்துக் கொள்ளுவோம்! அதற்கு ஜவாப்தாரி யார்? கடவுளா? – அவனா? – அல்லது சமுதாயத்தின் படித்த கூட்டத்தாரா? மமதையும், பேராசையும் உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் கொண்ட, குதிக்கும் ‘பிராமணர்களால்’ வேண்டுமென்றே நிர்மூடத் தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக்கும் தாழ்த் தப்பட்ட மக்களின் தண்டனைக்குப் பொறுப்பாளி யார்? உங்களுடைய பரிசுத்த ஞான நூல்’களாகிய வேதங்களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும், அவர்களுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்? அவர்கள் ஏதாவது குற்றஞ்செய்தால் அவர்களுக்காக யார் பொறுப்பேற்று தண்டனைக்குத் தலை கொடுப்பார்?
***
எனது ஆராய்ச்சியின் தோரணையே என்னை நாத்திகனாக்கிற்று. கடவுள் நம்பிக்கையும், தினசரிப் “பிரார்த்தனைகளும் சுயநலம் நிறைந்த மனிதனை அகவுரவப்படுத்துகின்ற செய்கைகளென்று நான் கருதுகிறேன். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த் தனைகள் எனக்கு உதவி புரியக்கூடுமென்று நிரூபிக்குமா அல்லது எனது நிலைமையை இன்னும் மோசமாக்குமாவென்பது எனக்கே விளங்கவில்லை. நான் கஷ்ட நிஷ்டூரங்களைத் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆதலால், எனது முடிவுரையில், தூக்குமேடையிற்கூட ஆண்மையுள்ள மனிதனைப் போல் தலை நிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
நான் எவ்வாறு நாத்திகத்தை அனுஷ்டிக்கிறேன் என்று கூறுகிறேன். ஒரு நண்பர் பிரார்த்தனை செய்யும்படி என்னை வேண்டிக் கொண்டார். நான் எனது நாத்திகத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். அப்பொழுது அவர் “உனது கடைசி நாள்களில் நீ நம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விடுவாய்” என்றார். நான் அவரிடம், “அன்பார்ந்த அய்யா!” அப்படி நேரவே நேராது. அவ்வாறு நம்புவது, என்னை அகவுரவப்படுத்தி, அவமானப்படுத்துவதாகவே நினைப்பேன். பலவீனத்தால் சுயநல நோக்கங்களால் நான் பிரார்த்தனை செய்யப் போவதில்லை” என்று சொன்னேன். வாசகர்களே! நண்பர்களே! “இது அகங்காரமாகுமா?” அகங்காரந்தானென்றால் நான் அப்படிப்பட்ட அகங்காரத்தையே விரும்புகிறேன்.